“அப்பா… இந்த தடவை உங்க பேத்தியோட பிறந்தநாளை, இங்கே சென்னையிலேயே கொண்டாடுவோம்பா. நீங்க அம்மாவைக் கூட்டிண்டு, ரெண்டு நாள் முன்னாடியே திருச்சியிலே இருந்து கிளம்பி வந்துடுங்க” என்று, ஃபோனில், சொன்னாள் என் மருமகள்.
“அம்மாவை முன்னாடியே அங்கே அனுப்பி வைக்கிறேன். நான் வருவது சந்தேகந்தாம்மா… எனக்கு தவிர்க்க முடியாத வேலைகள் இருக்கு” என்றேன் நான்.
“ஏங்க… நீங்க சென்னைக்கு வரலேன்னா பரவாயில்லே. ஆனா, நம்ம பேத்தியோட பிறந்த நாளன்னிக்கு, திருச்சியிலேயே எதாவது ஒரு முதியோர் இல்லத்திலே இருக்கிறவங்களுக்கு அன்னதானம் குடுக்க ஏற்பாடு பண்ணிடுங்க” என்றாள் என் மனைவி.
நானும் ஒரு முதியோர் இல்லத்திற்கு ஃபோன் செய்து, என் பேத்தியின் பிறந்தநாளன்று அன்னதானத்திற்கு புக்கிங் செய்தேன்.
“சார்… நீங்க அன்னதானம் செய்ய பணம் கட்டினால் மட்டும் போதாது. திருச்சியிலே இருப்பதாலே… கண்டிப்பா நேர்ல வந்து, உங்க கையால சாப்பாடு போடணும். எங்க ஆசிரமத்திலே தங்கியிருப்பவர்கள் எல்லாரும் வயதானவர்கள் மட்டுமில்லை… அனாதைகளும்தான். நீங்க அவங்களோட நாலு வார்த்தை பேசினீங்கனா, நமக்கும் உலகத்திலே ஆட்கள் இருக்காங்கன்னு மனதிருப்தியடைவாங்க” என்றார் அந்த முதியோர் இல்லத்தின் இன்சார்ஜ்.
“அந்த டைனிங் ஹாலுக்குள், சாப்பிடுவதற்கு வரிசையில் வந்த முதியவர்களில் ‘அவனைக்’ கண்டதும், “டேய் பசுபதி… நீ எங்கேடா… இங்கே?” என்றேன்.
அருகே நின்று கொண்டிருந்த ‘அந்த’ இல்லத்தின் இன்சார்ஜ் என்னிடம்,
“சார்... இவரை உங்களுக்குத் தெரியுமா? ஆறு மாசத்துக்கு முன்னாடி, எங்க ஆசிரமத்துக்கு இவரே வந்து, ‘தனக்கு உறவுக்காரங்க யாரும் இல்லை, தான் ஒரு அனாதைன்னு’ சொல்லி சேர்ந்துகிட்டாரு” என்று சொல்லவும், நான் அதிர்ந்தேன்.
“பசுபதி… நீ சாப்பிடுப்பா. நானும் உங்களோடத்தான் சாப்பிடப்போறேன்” என்று சொல்லிவிட்டு, பசுபதிக்கு அருகே அமர்ந்து, சாப்பிட்டேன்.
அந்த முதியோர் இல்லத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அவர்கள் கேட்ட ஆவணங்களை கொடுத்துவிட்டு, ‘அடுத்த ஒருநாள்’ மட்டும், காலை ஆறு மணிமுதல், மாலை ஆறு மணிவரை, பசுபதியை என்னுடன் அழைத்துக்கொண்டு போக பர்மிஷன் வாங்கினேன்.
அடுத்தநாள், பசுபதியை கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு போனேன்.
“ஏண்டா… உனக்கு காஃபிக்கு சர்க்கரை போடலாமா? என்றேன்.
“அந்த ‘நடராஜர்’ கருணையாலே, எனக்கு வியாதியெல்லாம் இல்லேப்பா… தாராளமாப் போடு” என்றான். காஃபியை குடித்தபின்,
“ராகவா… என்னை எதாவது ஒரு பெரிய ‘சிவன்’ கோவிலுக்கு கூட்டிட்டுப் போடா…” என்று கெஞ்சலாகக் கேட்டான்.
நாங்கள் போயிருந்த, அந்த சிவன்கோவில் பகுதிக்கு, சைவசமயக் குரவர்கள் நால்வரில், அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர் வருகை தந்தபோது, சோர்வினால் அங்கிருந்த பாறையில், பசி மயக்கத்துடன் ஓய்வெடுத்தாராம். அப்போது சிவபெருமான், மாற்றுருவம் கொண்டு, அந்த சமயப் பெரியவரின் பசி தீரும்படியாக, அவருக்கு கட்டுச்சோறு குடுத்ததாக ‘தலவரலாற்றுக் குறிப்பு’ எழுதியிருந்தது.
அந்தச் செய்திக்கு கீழேயே, “தாங்களும் எதாவது பசித்த வயிற்றுக்கு, ஒரு பொட்டலம் சோறு வாங்கிக்குடுத்து, அன்னதானம் செய்யலாமே!” என்று எழுதியிருந்தது.
அதை சத்தமாகப் படித்த பசுபதி, “பாத்தியாப்பா… சிவபெருமானே அன்னதானம் குடுத்து, என்னை மாதிரி அனாதைகளை ஆதரிக்கணும்னு, அந்த காலத்திலேயே, செய்து காட்டியிருக்காரு” என்றான் விரக்தியுடன்.
“பசுபதி… மனசை தேவையில்லாம குழப்பிக்காம வாப்பா” என்று சொல்லிவிட்டு, அவனோடு, வெளிப்பிரஹாரத்திற்கு வந்தேன். அங்கே இருந்த பிரசாத ஸ்டாலில், இருபது ரூபாய் குடுத்து, ஒரு பொட்டலம் தயிர்சாதம் வாங்கினேன். இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தோம்.
“என்னப்பா… ‘மிதியடிகளை இங்கே விடவும்… கட்டணம் கிடையாது’ அப்படீன்னு போர்டு எழுதி வைச்சிருக்கீங்க. கோவிலுக்கு உள்ளே போறதுக்கு முன்னாடி ஒண்ணுமே சொல்லாம, வந்த பிறகு, செருப்பை பார்த்துகிட்டதுக்கு ஜோடிக்கு இரண்டு ரூபாய்ன்னு வசூல் பண்ணறது தப்பில்லையா” என்று கேட்டேன்.
“யோவ் பெரிசு… ஆளைப்பார்த்தா வெள்ளையும் சொள்ளையுமா இருக்கே. அல்பக்காசு… இதைக் குடுக்க யோசிக்கிறியே? எங்களைமாதிரி ஏழைபாழையெல்லாம் எப்படிப் பிழைக்கிறது?” என்ற அவனிடம் காசைக் குடுத்துவிட்டு, செருப்புகளை வாங்கி மாட்டிக்கொண்டு, கிளம்பினோம்.
கோவிலின், நுழைவு வாயிலுக்கு இரண்டு பக்கங்களிலும், பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். “நல்லவேளை… உனக்கு ரிட்டயரிங் வயதாயிடுச்சு, மற்றவர்களுக்கும் பிச்சையெடுக்க வாய்ப்பளிக்கணும். அதனால நீ இந்தக் கோவில் வாசல்லே பிச்சை எடுக்கக் கூடாதுன்னு, யாரவது சட்டம் பேசி விரட்டும் வரை, இந்த வயசான பிச்சைக்காரங்க பிழைப்பு ஓடும்” என்றான் பசுபதி.
“எங்க அனாதை இல்லம் மாதிரி, இங்கேயும் நீ ‘சமூக நீதியை’ பார்க்கலாண்டா. அதுமட்டுமில்லே ராகவா… இங்கேதான், ஆணுக்கு நிகராக பெண்ணும் உரிமைக்குரல் குடுக்கமுடியும். இப்போ… நானும் ஒரு விதத்திலே, இந்த ‘ஜாதியை’ சேர்ந்தவன்தான்” என்ற பசுபதியை...
“பேசாம வாடா” என்று விரட்டினேன்.
வாங்கி வைத்திருந்த சோற்று பொட்டலத்தை, யாரிடமாவது தானம் குடுக்கலாமெனப் பார்த்தால், அங்கிருந்த பிச்சைக்காரர்கள் ஏற்கனவே அன்னதானம் வாங்கி, தலைக்கு நான்ங்கைந்து பொட்டலங்களை வைத்திருந்தார்கள். ஒரு சிலர், ‘சோறு வேண்டாம்… காசு குடுங்க’ என்று கேட்டேவிட்டார்கள்.
“ராகவா… இந்தக் காலத்திலே, ‘பெக்கர்ஸ் ஹாவ் சாய்ஸ்’, நீ அந்த சோத்து பொட்டலத்தை எங்கிட்டே குடு” என்றவன், எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்காரலாண்டா” என்றான்.
கோவில் பிரஹாரத்துக்கு வெளியே இருந்த ஒரு பெரிய ஆலமரத்து நிழலுக்கு கீழே, பரவிக்கிடந்த பாறையில் இருவரும் அமர்ந்தோம்.
“சொல்லுடா… அனாதை ஆசிரமத்துக்கு ஏண்டா வந்தே? உனக்குதான் இரண்டு பசங்க இருக்கிறான்களே” என்றதும் பசுபதி கண்களை தன் வேஷ்டி நுனியால் துடைத்துக் கொண்டான்.
“ராகவா… உனக்கு தெரியாதது ஒண்ணுமில்லே. என்னோட ரெண்டாவது மகன் பிறந்த அடுத்த வருஷமே, என் பெண்டாட்டி, என்னை விட்டுட்டு, சுமங்கலியாப் போய் சேர்ந்துட்டா. அதுக்கப்புறம் என் இரண்டு பசங்களையும், படிக்கவைச்சு, ஆட்களாக்க, எவ்வளவு கஷ்டப்பட்டேன்…” என்றவன், லேசாக விம்மினான்.
“ஏண்டா பசுபதி… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சென்னையிலே, என் பையன் கல்யாணத்துக்கு வந்தப்போ, உன்னோட பையங்களுக்கும் வேலை கிடைக்கப்போவுது, அதனால நான் வேலையை விடப்போறேன்னு, எங்கிட்டே சொன்னியேடா” என்றேன்.
“ஆமாண்டா ராகவா… என் பசங்க என்னை வேலையை விடச் சொன்னதாலேதான், வி.ஆர்.எஸ் குடுத்தேன். எனக்கு கிடைச்ச ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் அமௌன்டை வாங்கித்தான், அவனுங்க ரெண்டுபேரும் கவர்மென்ட் வேலை வாங்கினானுங்க” என்றான்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “போன வருஷம், என் பெரிய பையன் ‘எஸ்தர்ன்னு’ ஒரு பெண்ணை கட்டிகிட்டு, அந்தப் பெண்ணோட மதத்துக்கு மாறிட்டான். ஒரு மாசம் கழிச்சு சின்னவனோ… ‘ஆயிஷான்னு’ ஒரு பெண்ணை கட்டிகிட்டு வேற மதத்துக்கு மாறிட்டான்” என்றதும்,
“என்னடா சொல்லறே? இதெல்லாம் எனக்கு தெரியாதுடா” என்றேன்.
“இரண்டு மகன்களுமே, அவனவனோட கல்யாணம் முடிஞ்ச பிறகுதான், எனக்கே விஷயத்தை சொன்னானுங்க” என்றவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“உன்னோட மருமகள்கள் இரண்டு பேருமேவா உன்னை கவனிச்சுக்க மாட்டேன்னு சொன்னாங்க?” எனக்கேட்டேன்.
“சேச்சே… அவங்க ரெண்டு பேருமே, குணத்தால நல்லவங்கதான்” என்றான் பசுபதி.
“அப்புறம் என்னடா... இந்த வீட்ல ஒரு மாசம் அந்த வீட்ல ஒரு மாசம்னு, காலத்தை அனுசரிச்சு, நீயே இருந்துக்க வேண்டியதுதானே. நீ சுத்த சைவங்கிறதுதான் உன் பிரச்சனையா?” என்றேன்.
“ராகவா… நாம சிதம்பரத்திலே ஒண்ணா யூ.ஜி. படிச்ச காலத்திலே… தில்லை நடராஜர் கோவிலுக்குப் போகாம என்னிக்காவது இருந்திருப்பேனா?” என்றான். “தெரியுண்டா… கிழக்குவாசல் கோபுரத்துக்கிட்டே உட்கார்ந்து, ‘தேவாரம்’ பாடாம நீ என்னிக்கு அங்கேயிருந்து கிளம்பியிருக்கே?” என்று, அவன் சொன்னதை ஆமோதித்தேன்.
“சுத்தமான சைவப் பாரம்பரியத்திலிருந்து வந்த என்னால, என் மகன்களை மாதிரி, படார்னு ராவோடராவா, ‘மதம்’ மாறிக்க, ‘மனம்’ ஒத்துக்கலேடா” என்றவன் சற்று நிதானித்தான்.
“ராகவா… சத்தியமா சொல்லறேன்டா… என் பெண்டாட்டி இல்லாத வலி, இப்போதாண்டா எனக்கு தெரியுது” என்ற பசுபதியை, சமாதானப்படுத்த வார்த்தைகளின்றி தடுமாறினேன்.
“என் ‘நடராஜர்’ படத்துக்கு இரண்டு பக்கத்திலேயும், என் இரு மருமகள்களுடைய மதக்கடவுள்களின் படங்களை வைத்து சாமி கும்பிட, எனக்கு சம்மதம். ஆனால்… என் ‘நடராஜரே’ அவங்க குடியிருக்கிற வீட்டுக்குள்ளே வரக்கூடாதுன்னு, எல்லோரும் சொல்லும்போது… நான் மட்டும் எப்படிடா அங்கே…?” என்ற பசுபதி சற்று மௌனமானான்.
“இந்தப் பயலுங்க செஞ்ச காரியத்தாலே, என் சொந்தங்களும் என்னைக் கைவிட்ட நிலையிலே, தனியா வாழறதைத் தவிற எனக்கு வேற வழி தெரியலேடா” என்றான் பசுபதி.
“இங்கே, எனக்கு என் கடவுளை கும்பிட முழு சுதந்திரம் இருக்கு. என்னைச் சுற்றிலும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு கிடைக்கிற சொற்ப பாங்க் வட்டிப் பணத்தை, முதியோர் இல்லத்துக்கு டொனேஷனாக குடுக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு, “நான் அனாதைன்னு சொல்லிகிட்டு முதியோர் இல்லத்திலே சேர்ந்தது சரிதானேடா” எனக் கேட்டான் பசுபதி.
அன்று மாலையில், பசுபதியை அந்த முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு என் வீட்டுக்கு வந்தேன். எனக்குத் தெரியவில்லை… பசுபதியை அனாதையாக்கியது “மதமா…மனமா?”.
Leave a comment
Upload