மூண்டாசு கவிஞனின்
மூச்சு நின்ற நாளின்று...!
மண்ணில் மறைந்தாலும்
கண்களில் ஒளிர்கின்றான்...!
காற்றினிலே கலந்தாலும், நம்
மூச்சினிலே உறைகின்றான்...!
தமிழ்க்கவி....
பட்டினியாய் கிடந்தாலும்
பசியினால் மெலிந்தாலும்
பாழ்பட்டுப் போனாலும்
அங்கங்கள் இழந்தாலும்
பொங்கு தமிழைப் பேச
மறப்பேனோ என்றான்..!
மொழிகளிலே தமிழன்றி
இனிதானது வேறில்லை...
புவி முழுதும் தேடென்றான்...!
வறுமை பயங்கொள்ளும்...
துன்பப் பகை வெல்லும்...
பாரதபெயர் சொல்லென்றான்..!
மகாகவி...
நித்தம் சோறு தின்று,
வெட்டிக் கதை பேசி,
நரைகூடி கிழ வயதாகி,
கடுஞ்சொல் கேட்டிங்கு
மாய்ந்திடும் மனிதனாய்
வீழ்வேனோ என்றான்...!
ஆணையும் பெண்ணையும்
நிகரெனக் கொண்டால்
வையகம் தழைக்குமென்றான்...!
அமிழ்ந்து இருளாமையில்
அவலநிலை கொள் வாழ்வை
உமிழ்ந்து தள்ளென்றான்...!
வெற்றுக் காகிதமென
எண்ணாதே எவரையும்..
அவனும் பறந்திடுவான்
பட்டமென்று ஒருநாள்...!
அண்ணாந்து தான் நீயும்
பார்க்க வேண்டுமென்றான்..!
வரககவி...
எத்தனையோ வேண்டுமென
பட்டியலாய் இடுகின்றான்...
அத்தனையும் சொல்லியிங்கு
அனுபவிக்க ஆசைதான்...!
அற்புதமாய் சிலவற்றை
முத்திரையாய் பதிக்கிறேன்...!
மனதில் உறுதி வேண்டும்...
பேச்சில் இனிமை வேண்டும்...
கனவு நிஜமாக வேண்டும்...
கைகூடி நிறைவேற வேண்டும்...
உண்மை நிலைத்திட வேண்டும்...
ரௌத்திரம் பழக வேண்டும் ...
திடமான நெஞ்சம் வேண்டும்...
தெளிவான அறிவு வேண்டும்...
காணி நிலத்தோடு சிறு
மாளிகை வேண்டுமென்றான்...!
கத்தும் குயிலின் ஓசை
காதில் விழவேண்டுமென்றான்...!
அமரகவி...
கவலை பயம் அவனுக்கு
இல்லை யென்றான்...!
பகைவரை வென்று
தீர்த்தேன் யென்றான்...!
மரணத்தை வென்ற
அமரன் அவனென்றான்...!
ஞாலம் இருக்கும் வரை
காலம் நிலைக்கும் வரை
சோதி மிக்க நவ கவிதை
அழியாத மகா கவிதை
சுவை பொருள் வளம் சொல்
என்றென்றும் புதிதென்றான்...!
வாழும் அவன் தமிழ்...
வாழும் அவன் புகழ்...
Leave a comment
Upload