தொடர்கள்
ஆன்மீகம்
விநாயகருக்கு மூஷிக வாகனம் உருவான கதை... - மாலாஸ்ரீ

20210809225216999.jpg

நாம் விரும்பி வணங்கும் அனைத்து கடவுளுக்கும், தேவாதி தேவர்களுக்கும் பல்வேறு வாகனங்கள் உள்ளன. குறிப்பாக முருகன் மயிலையும், சிவன் காளையையும், பெருமாள் கருடனையும், சக்தி சிங்கத்தையும், சரஸ்வதி அன்னப் பறவையையும் வாகனமாக வைத்துள்ளனர். ஆனால், விநாயகருக்கு மட்டும் மூஞ்சூறு வாகனமானது எப்படி..?

‘கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது’ என விநாயகர் புராணம் சொல்கிறது. புராணத்தில் யானை முகமும், தலையில் 2 கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுரகுல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானை நோக்கி பல ஆண்டுகள் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்..?’ என்று கேட்டார்.

20210809225253230.jpg

சிவனிடம் ‘எனக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரிடக்கூடாது. எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், இன்னொரு பிறவி கிடைக்கக்கூடாது...’ என்று கேட்டான் கஜமுகாசுரன். அவன் கேட்ட வரங்களை சிவபெருமான் அளித்துவிட்டு மறைந்தார். வரம் பெற்ற அசுரன் சும்மா இருப்பானா..? மதங்கமாபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி அரசனாக ஆட்சி செய்தான். தன்னை நாடிவரும் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான்.

தன்முன்னால் தேவர்கள் அனைவரும் நின்று, தினமும் மூன்று வேளை 1008 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கஜமுகாசுரன் உத்தரவிட்டான். அதன்படியே தேவர்களும் வரிசையில் நின்று, தோப்புக்கரணம் போட்டு மயங்கி விழுந்தனர். இதை பார்த்து கஜமுகாசுரன். கைகொட்டி அகங்காரத்துடன் சிரித்தான். அரக்கனின் கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள், விநாயகரை வணங்கித் தங்களை காக்கும்படி வேண்டினர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறி கஜமுகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகாசுரனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை.

கஜமுகாசூர சம்ஹாரம்...
அசுரனை சம்ஹாரம் செய்த விநாயகர்...

எந்த ஆயுதத்தாலும் அசுரனை அழிக்க முடியலையே என்று விநாயகர் யோசித்த போது, சிவபெருமான் தனது மகனுக்காக குரல் கொடுத்தார். மகனே, கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என்று சொல்லவே.... சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார். நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் மூஞ்சூறு போல மாறினான். அந்த மூஞ்சூறுவை தனது ஞானக்கண்ணால் பார்த்தார் பிள்ளையார். ஞானம் பெற்ற மூஞ்சூறு விநாயகரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அதனை தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்.

தீயசக்தியை அழிக்க ஆயுதம்
தீயதை வீழ்த்தும் எலி

பழங்காலங்களில் விவசாயமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்தது. அப்போது, எலிகள் விவசாய நிலத்தை நாசம் செய்ததால், அவற்றை வீழ்த்த விநாயகர் அவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் புராண கதைகள் உள்ளன. இதே போல எலிகள் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அவற்றால் எந்த சிறு துளையிலும், இருள் சூழ்ந்த இடங்களிலும் நுழைய முடியும் என்பதாலும், விநாயகர் இருளை நீக்கவும், மூலை முடுக்கில் உள்ள தீய சக்திகளை அழிக்கவும் எளிதாக இருக்கும் என்பதற்காகவும் மூஞ்சூறுவை வாகனமாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.