சார்! சாப்பாட்டை பிரித்து வைக்கவா சாப்பிடுறீங்களா எனக்கேட்டார் பணிப்பெண், மல்லியம் புகைவண்டி நிலைய அதிகாரியான பரசுராமனைப் பார்த்து.
இப்போது வேண்டாம், இன்னும் இரண்டு வண்டி இருக்கே பாசாகட்டும் என்றார் அலுத்துக்கொண்டே.
எந்த வண்டியும் இங்கே நிற்பதுமில்லை, வரும் வண்டிகளுக்கெல்லாம் பச்சைக்கொடியை மட்டும் காட்டி அனுப்பனும், இன்னும் கொஞ்ச நாளிலே மூடக்கூடிய நிலையில் உள்ள ரயில்நிலையம்.
இன்னும் ஒரு வண்டிதான் வர வேண்டி இருக்கு, சோழன்வண்டி போனதுக்கூட தெரியாமல் என்னாச்சு இவருக்கு..? எனப் புலம்பியபடி சென்றாள் பணிப்பெண்.
காலையில் கிளம்பும் போதே மகள் லாவண்யா, அப்பா எனக் கூப்பிட்டவள்.... நான்.. நான் ஒருத்தரை காதலிக்கிறேன் அப்பா, உங்கள் பூரண சம்மதத்தோட திருமணம் செய்து வையுங்களப்பா என்றாள், முதலில் தயங்கி, பின் தெளிவாக கேட்டதும் அதிர்ந்துப்போனார்.
சுதாரித்து, என்ன, என்ன சொல்றே? அவ்வளவு தைரியம் வந்திடுச்சோ, செல்லமா வளர்த்தோமில்ல, எங்க தப்புதான்... அதான், அப்பாகிட்டே எப்படி எதைப் பேசனுமுன்னுகூட தெரியலை.
ஆமாம்பா, இதையெல்லாம் பேசக்கூடாதுன்னும் நீங்கள் சொல்லித் தரலையேப்பா, எல்லா விஷயமும் உங்க கிட்டத்தானே சொல்வேன். அதெற்கெல்லாம் ஒன்றும் சொன்னதேயில்லையே, ஒருவருடன் காதல் என்று சொன்னவுடன் ஏம்பா இப்படிக் கோபப்படுறீங்க?
அம்மா, கொடி காட்டுகிறவன்தானே உன் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டிடுவேன்னு நினைச்சியா? எல்லாத்துக்கும் பச்சைக்கொடி காட்ட வாழ்க்கை ஒன்றும் நிலையத்தில் நிற்காத அதிவேக ரயில் இல்லை, நின்று நிதானித்து செல்லும் பாசஞ்சர் ரயிலம்மா வாழ்க்கை, எனக் கூறிவிட்டு பணிக்கு கிளம்பி வந்துவிட்டார்.
அடுத்த ரயிலும், நிலையம் வரவே... தளர்ந்தபடி எழுந்து வந்து, நடைபாதையைத்தாண்டி விழுவதுபோல் ரயில் வருவதையே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பணிப்பெண், பயந்துபோய் அருகில் ஓடி வர, கையில் இருந்த கொடிகளில் சிகப்பை எடுத்து காண்பிக்க, ரயில் மெதுவாகச் சென்று நின்றது. பின் சுதாரித்தவராக பச்சைக் கொடியினை காண்பித்து ரயிலை அனுப்பி வைத்தார்.
ஓய்வுப் பெறப்போகிற நேரத்திலே என்ன சார் இப்படிப் பண்ணீட்டிங்க? துறையிலே மெமோ ஏதாவது கொடுத்துடப்போறாங்க
என பயந்தாள் பணிப்பெண்.
அலுவலகத்திற்கு வந்த ரயில்வே சிக்னல் ஊழியர், இளம் பெண் சடலம் ஒன்று அங்கே கிடப்பதாகவும், கடந்துபோன ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டததால்தான், ரயில் மெதுவாக நின்று பின் சென்றது எனவும் கூறினார்.
உடன் அருகில் உள்ள சந்திப்பு ரயில்வே காவல்நிலையத்திற்கு சொல்லிவிடும்படி உத்தரவிட்டு தனது இருக்கைக்குத்
திரும்பியதும்... மனைவியிடம், லாவன்யா வீட்டில் இருக்கின்றாளா எனக் கேட்டார்.
காலையில் சாப்பிடாமல் போனவள்தான், இதுவரை வீடு திரும்பவில்லை என்ற பதிலைக்கேட்டு இவருக்கு அச்சத்தால் உடல் நடுங்கியது. சடலம் கிடத்தி வைக்கப்பட்ட இடம் நோக்கி விரைந்துச்சென்றுப் பார்த்தார், இரண்டு துண்டாக கிடந்ததைப் பார்த்து இதயம் பிசைய, தன் மகள் இல்லை என்று நிம்மதியடைந்தாலும், யார் பெற்ற பிள்ளையோ? என்ன பிரச்சினையோ, நினைத்தாலே நடுங்குதே. பெற்றவர்கள் பார்த்தால் அவர்கள் மனசு என்ன பாடுபடும். பெண் பிள்ளையைப் பெற்றவனுக்கெல்லாம் வலுமையான இதயத்தைக் கொடு ஆண்டவா என வேண்டிக்கொண்டே கவலையோடு தன் இருக்கைக்குத் திரும்பினார்.
மாலை வீடு திரும்பும் நேரத்தில், இறந்த பெண் பக்கத்து ஊரான பாலையூரை சேர்ந்தவர் என்றும், காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் தற்கொலை செய்துக் கொண்டதாக காவல் நிலையத்தார், தகவல் தெரிவித்து சடலத்தை எடுத்துச்சென்றனர்.
அப்பா! காலையில் நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டேன்.
அப்பா, நான் உங்கள் பொண்ணுப்பா தற்கொலையெல்லாம் பண்ணிக்கமாட்டேன், கவலையே படாதீங்க. உங்ககிட்டே அனுமதிதான் கேட்டேன், அதை மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுள்ளது என்பதை நன்கு உணர்ந்தவள் நான் என்றாள் தெளிவாக.
இந்த மனதை நான் புரிந்துக் கொள்ளாமல் சந்தேகப்பட்டுட்டோமே
என வருந்தியவர், லாவன்யாவை அருகில் அழைத்து தலையை வருடியபடியே அனைத்துக் கொண்டார்.
இரயில் பாதைகள்போலுள்ள எங்கள் இருவர் மனதும் உங்களுடைய சம்மதம் இருந்தால் மட்டுமே இனைந்து, எங்கள் வாழ்க்கையும் பயணம்போல சிறக்கும். அதற்கு நீங்கத்தான் கொடியைக்காட்டனும் என்றாள் துடுக்காய்.
தன் கோட்டிலிருந்த விசிலை எடுத்து நீண்டதாய் ஊதினார். லாவன்யாவின் காதல் பயண வாழ்க்கை தொடங்கியது.
Leave a comment
Upload