தொடர்கள்
ஆன்மீகம்
விநாயகரை வணங்கி, தோஷங்கள் நீங்கப் பெறுவோம்... - ரேணுகா

20210809224007218.jpg

தெய்வங்களின் முழுமுதல் நாயகன் விநாயகப் பெருமான் ஒருவரே. அவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதால், ஒவ்வொரு விசேஷங்களிலும் அனைத்து வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன், மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜைகளைத் துவங்குகிறோம்.

கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யும்போது, ‘ஓம் அநீஸ்வராய நம’ என்று கூறுவர். ‘அநீஸ்வராய’ என்றால், ‘தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை’ என்பது பொருள். இதனாலேயே ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால், நம்மிடம் உள்ள நவகிரக தோஷங்கள் நீங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

விநாயகரை முதல் கடவுளாக போற்றுவதற்கு உதாரணமாக, ஞானப் பழத்தை அடைய அம்மையப்பனை சுற்றி வந்து, முதன்முதலில் ஆன்மீக தத்துவத்தை எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக சாஸ்திரிய பண்டிதர்கள் நம்புகின்றனர்.

20210809224043479.jpg

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரமே, உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ‘ஓம்’ ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியையும் குறிப்பதாகும்.

சரி… பிள்ளையாரின் யானை முகத்தையும், துதிக்கை, கண்களையும் உற்று நோக்கினால் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம் தெரியும். கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக விநாயகர் நடமாடியதால், தேவர்களும் முனிவர்களும் ‘யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்?’ என்று ஆவலாய் கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் ‘பிள்ளையார்’ என்ற பெயராக மலர்ந்தது.

அவர் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ, கொடிமரமோ, விதான மண்டபமோ தேவையில்லை. நம் உள்ளத்திலே ஓர் இடமளித்தால் போதும். தாய்-தந்தை பேச்சைக் கேட்டு, மதித்து செயல்பட்ட பிள்ளை. எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக இருப்பதால், அனைத்து கோயிலிலல்களிலும் முதல் ஆளாக அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவருமாக, நமது நெஞ்சங்களில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். அவரை எளிய அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டாலே, நமக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கக்கூடியவராக பிள்ளையார் உள்ளார்.

அவரை எப்படி செய்து வழிபட்டாலும் அருள்பவர். அவ்வளவு ஏன்... பசுஞ்சாணத்தில் செய்த விநாயகரை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கி, விரைவில் நம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். களிமண் விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அருள்வார். கருங்கல் விநாயகரை வழிபட்டால், எந்தக் காரியமும் வெற்றியில் முடிய அருள்வார். விபூதி கணபதியை வழிபட்டால் வெப்ப நோய்களை தீர்க்கக்கூடியவர்.

குங்குமத்தில் செய்த விநாயகரை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். சந்தன பிள்ளையாரை வழிபட்டால், நல்ல பிள்ளைபேறு கிட்டும். மஞ்சளால் செய்த விநாயகரை வழிபட்டால், சகல செளபாக்கியங்களையும் அருள்வார். வெள்ளெருக்கு பிள்ளையாரை வழிபட்டால், பில்லி சூனியம் அகலும். வாழைப்பழ விநாயகரை வழிபட்டால், கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இவ்வாறு நாம் அவரை மனதார வழிபட்டாலே, அனைத்துவித நலன்களை அள்ளித் தருவார். நவதானிய பிள்ளையார் தன, தானியங்களை அளவின்றி கொடுப்பார்.

இவ்வாறு விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நம் சக்திகேற்றபடி விநாயகரை உருவகித்து, விரதம் இருந்து, ‘வக்ர துண்டாய தீமஹி... தந்நோ தந்தஹி பிரசோதயாத்...’ என்று விநாயகருக்கான காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட்டால், நம் குடும்பத்துக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது உறுதி.