தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 56 - மதன்

மற்றவர்கள்…

பாரசீகப் பேராபத்து..!

20210811121310908.jpg

வரலாற்றில் சில விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாகப் பேரரசர்கள் ‘பொட்’டென்று போய்விடுவதில்லை. கோமா நிலை என்பது சாம்ராஜ்யங்களுக்கு உண்டு. அந்த பரிதாப நிலைதான் - ஔரங்கசீப் மறைவைத் தொடர்ந்து மொகலாய ஆட்சிக்கு நேர்ந்தது.

ஆலம்கீருக்குப் பிறகு வரிசையாக அரியணையில் அமர்ந்தவர்களில் நட்சத்திர அந்தஸ்து பெறக்கூடியவர்கள் யாரும் இல்லை எனலாம். சிலர், சில ஆண்டுகள் ஆண்டார்கள். சிலர், நிமிடமே காட்சி தந்து, எரிந்து மறையும் எரிகற்களைப் போல் அல்லது கண்சிமிட்டும் நேரத்தில் தலைகாட்டி மறையும் நீர்க்கொப்பளங்களாக வந்துபோனார்கள். ஆக மொத்தத்தில், ‘பருந்துகள் வசித்த இடத்தில் ஆந்தைகள் ஆட்டம் போட்டன… குயில்களுக்குப் பதில் காகங்கள் பாட்டுப் பாடின…’ என்று, இந்தப் ‘பிற்கால மொகலாய ஆட்சியை’ வர்ணிக்கிறார் ஒரு வரலாற்று ஆசிரியர்.

ஔரங்கசீப் இறந்தபோது, அவர் மகன் ஷா ஆலம், காபூலில் கவர்னராகப் பணியில் இருந்தார். இன்னொரு மகன் ஆஸாம் குஜராத்திலும், கடைசி மகன் காம்பக்க்ஷ் பீஜப்பூரிலும் அதே பதவிகளில் இருந்தனர். மறைந்த பாதுஷா விரும்பியபடி சாம்ராஜ்யத்தைப் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம் என்று சற்றாவது நினைத்தவர் மூத்தவர் ஷா ஆலம் மட்டுமே! ‘அடுத்த வாரிசை வாட்களே நிர்ணயிக்கட்டும்!’ என்று மற்ற இரு இளவரசர்களும் முழங்கியதால் போர் என்னும் கொடுமையைத் தவிர்க்க முடியாமல் போனது.

தந்தை இறந்தபோது ஷா ஆலத்தின் வயது 64. எத்தனை வயதானாலும், அரியணையை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடத் தோன்றுமா என்ன?! காபூலிலிருந்து பெரும்படையுடன் டெல்லி நோக்கிக் கிளம்பினார் அவர். ஜூன் 1707-ம் ஆண்டு, ஆக்ரா அருகில் ஷா ஆலம் – ஆஸாம் – இரு சகோதரர்களின் படைகளும் ஆவேசமாக மோதிக் கொண்டன.

நடந்து முடிந்த இந்த ஒரு நாள் யுத்தத்தில் வெற்றி பெற்றவர் ஷா ஆலம். போரில் கொல்லப்பட்டார் ஆஸாம். உடனே ஷா ஆலம் படை தெற்கே, காம்பக்க்ஷ் படையைச் சந்திக்கக் கிளம்பியது. ஹைதராபாத் அருகே நடந்த யுத்தத்தில் படுதோல்வி அடைந்த காம்பக்க்ஷ், பிறகு பலத்த காயங்கள் காரணமாக உயிரை விட்டார்.

இரு போர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய முஆஸம் (அ)ஷா ஆலம் டெல்லிக்குத் திரும்பி ‘பகதூர் ஷா’ என்னும் பட்டப்பெயருடன் அரியணையில் அமர்ந்தார். தவிர்க்க முடியாமல் போரில் இறங்கினாலும், சற்றே மென்மையான மன்னர்தான் பகதூர் ஷா. நாலரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துவிட்டு, தன் அறுபத்தொன்பதாம் வயதில் இறந்தார் பகதூர் ஷா. ஔரங்கசீப் தந்த சான்ஸ் அவ்வளவே!

பகதூர் ஷா தலையைப் போட்டவுடன், மறுபடியும் வாரிசுப் பூசல் கிளம்பியது. பாதுஷாவின் நான்கு மகன்களும் ஆளுக்கொரு படையுடன் மோதலில் இறங்கினார்கள். அவர்களில் ஜஹந்தர் ஷா, தன் மற்ற மூன்று சகோதரர்களையும் போரில் தோற்கடித்துக் கொன்றுவிட்டு, மகுடம் சூட்டிக் கொண்டார். இவருடைய ஓராண்டு கால ஆட்சி அலங்கோலமாக அமைந்தது.

தன் சகோரர்களின் குழந்தைகளை எல்லாம் சித்ரவதை செய்து கொன்று வெறியாட்டம் ஆடிய இந்த மன்னர், அந்தப்புர ஆட்டம் போடுவதிலும் சளைக்கவில்லை!

ஜஹந்தர் ஷா ஆட்சியில் அறிவார்ந்த ஆலோசகர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். அரைவேக்காடுகளின் ஆர்ப்பாட்டம்… ஆரணங்குகளின் ஆட்டபாட்டம் என்று அரண்மனையே அசிங்கமாகிப் போனது.

இந்த அநாகரிக ஆட்சிக்கு முடிவு கட்டினார் ஜஹந்தர் ஷாவின் சகோதரர் மகன் ஃபரூக்ஸியார். மன்னர் கையில் சிக்காமல் தப்பித்திருந்த அந்த இளவரசர், போரில் தன் தந்தை மடிந்ததைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை முயற்சியில் இறங்கியதுண்டு. அவருடைய விதவைத் தாய், ‘‘நீ ஏன் சாகவேண்டும்? இறைவன் கருணை இருந்தால், ஏன் உன் சதிகாரப் பெரியப்பாவைத் தீர்த்துக் கட்டிவிட்டு அரியணையில் அமர முடியாது? படை திரட்டிக்கொண்டு போய்ப் பழிவாங்கு!’’ என்று வலியுறுத்த… புத்துணர்ச்சியுடன் ஒரு படை திரட்டினார் இந்த இளவரசர். பிறகு, ஜஹந்தர் ஷாவுடன் மோதி, அதில் வெற்றியும் பெற்றார். சிறையில் தள்ளப்பட்ட ஜஹந்தர் ஷாவின் கழுத்தை நெரித்துக் கொல்ல ஆட்கள் அனுப்பப்பட்டனர். கைகளால் எத்தனை இறுக்கியும் அந்த சர்வாதிகார மன்னர் இறக்கவில்லையாம். வெறுத்துப் போன ஒரு மொகலாய மெய்க்காவலர், பருத்த தன் பூட்ஸ் காலால் ஜஹந்தர் ஷாவின் உயிர்நிலையில் தொடர்ந்து உதைத்து, அவரைக் கொல்ல வேண்டி வந்தது!

சிம்மாசனம் என்பது சில்மிஷம் பிடித்ததாயிற்றே! ராஜ உடை தரித்தவுடன் ஃபரூக்ஸியாரும் உருப்படாமல் போனார். கீழ்த்தரமான சகவாசங்கள் அவரையும் பீடித்தது. 1719-ல் அவரைப் பதவியிலிருந்து இறக்கினார்கள் ராஜாங்கப் பிரபுக்கள். சிறையில் அவரைத் தள்ளினார்கள். அங்கே ஃபரூக்ஸியாரின் கண்கள் குறுவாளால் பறிக்கப்பட்டன. சுமார் ஆறாண்டு காலம் ஆண்ட இந்த பாதுஷாவைச் சித்ரவதை செய்து (1719-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28-ம் தேதி) சாகடித்தார்கள்.

இந்தக் கொலையைத் தொடர்ந்து, 1719 பிப்ரவரியிலிருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று ராஜகுலத்து இளைஞர்கள் அரியணையில் அமர்த்தப்பட்டு, உடனே கீழே இறக்கப்பட்டார்கள். சரியான வாரிசு கிடைக்காமல் டெல்லி அரண்மனையில் ஏகமாகக் குழப்பம் நிலவியது!
ஒருவழியாக, மறைந்த பகதூர் ஷாவின் நாலாவது மகனுக்குப் பிறந்த பதினெட்டு வயது இளவரசர் ரோஷன் அக்தர், ‘முகமது ஷா’ என்ற பெயருடன் புதிய பாதுஷாவாகப் பட்டமேற்றார். நிர்வாகத்தில் பாதுஷாவுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர் நிஜாம்-அல்-முல்க் என்னும் சக்திவாய்ந்த ஓர் அமைச்சர். அறிவாற்றல் மிகுந்த இந்த அமைச்சரைப் பிரதம மந்திரியாக்க விரும்பினார் முகமது ஷா. ஆனால், டெல்லியில் நிலவிய ராஜாங்க சூழ்நிலை அந்த அமைச்சருக்குப் பிடிக்காததால், டெல்லியிலிருந்து வெளியேறித் தெற்கே ஹைதராபாத் சென்று, தன் செல்வாக்காலும் திறமையாலும் புதியதொரு ராஜ்யத்தை நிறுவினார். அவர் வழிவந்தவர்கள்தான் – புகழ்பெற்ற ஹைதராபாத் நிஜாம்கள்!
மயிலாசனத்தில் அமர்ந்த (அதற்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது!) கடைசி மொகலாய மன்னராக முகமது ஷா, தனிப்பட்ட முறையில் மென்மையானவர். கொலை வெறியாட்டம் எதுவும் போடவில்லையே தவிர, அந்தப்புரத்தில் கும்மாளம் போட்டதில் குறைச்சல் இல்லை. ‘அதோடு சரி, அரசாளும் திறமையில் முகமது ஷா ஒரு சைபர்’ என்று அவரை வரலாற்று ஆசிரியர் ஒரவர் வர்ணிக்கிறார். அதற்கேற்ப, வரிசையாக மொகலாய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பல பிரதேசங்கள், ஒவ்வொன்றாக முகமது ஷாவின் கைப்பிடியில் இருந்து கழன்று கொண்டன. தெற்கே மராட்டியர்கள், தங்கள் எல்லைகளை மேலும் வெற்றிகரமாக விஸ்தரித்தார்கள். அயோத்தியும் வங்காளமும் மொகலாயர்களிடம் இருந்து கைநழுவிப் போயின. ஆக்ரா அருகே ஜாட் இனத்தினர் ஒரு சுதந்திர நாட்டை நிறுவிக் கொடியேற்றியபோதும் டெல்லி பாதுஷாவால் ஏதும் செய்ய முடியவில்லை. பஞ்சாப் மாநிலத்தையோ சீக்கியர்கள் அழுத்தமாகத் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்…

இப்படியாக, மொகலாய ஆட்சி துவண்டு போயிருந்த இந்தத் தருணத்தில்தான், அந்த பேராபத்து நிகழ்ந்தது. ஆபத்தின் பெயர் – நாதிர்ஷா!

எளிமையான துருக்கிய குடும்பத்தில் பிறந்தவர் நாதிர்ஷா. பாரசீக மன்னர் ஷா தாமஸ்ப் கி.பி.1727-ல் இறந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தளபதியாகப் பணிபுரிந்து வந்த நாதிர்ஷா, பாரசீக அரியணையைக் கைப்பற்றினார். பிறகு, அவர் கனவுகள் மேலும் விரிந்தன.

அதே சமயம், நாதிர்ஷாவுக்கு டெல்லி பாதுஷா மீது ரொம்பவே கோபம் உண்டு என்று சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பாரசீகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதர் பரிமாற்றம் ரொம்ப காலமாகவே இருந்து வந்தது. நாதிர்ஷா பாரசீக மகுடத்தைச் சூட்டிக் கொண்டதிலிருந்து இந்தியாவிலிருந்து தூதர் யாரும் அனுப்பப்படவில்லை. கடிதம் எழுதினாலும் டெல்லி பாதுஷாவிடமிருந்து பதில் இல்லை. பதில் போடுவதில் பாதுஷா ரொம்ப வீக். ஆகவே, கொஞ்ச காலமாகவே எரிச்சலில் இருந்தார் நாதிர்ஷா.

‘‘நான் கேள்விப்பட்ட வரையில், ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவுமாக, சுகபோகத்தில் டெல்லி பாதுஷா திளைத்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். அவர் என்னை மதித்துப் பதில் போடாததில் வியப்பில்லை. நான் நேரில்தான் அவரிடம் பேசவேண்டும் போலிருக்கிறது!’’ என்று கோபத்துடன் குமுறினார் நாதிர்ஷா.

பிறகு, மனம் தளராமல் முகமது ஷாவுக்கு மற்றொரு கடிதம் அனுப்பினார்.

‘இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து கிளம்பியிருக்கும் ஈனப்பிறவிகளான மராட்டியர்கள், இஸ்லாத்துக்குப் பெரும் பிரச்னைகள் விளைவித்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். பாதுஷா அதுபற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! இஸ்லாத்தைக் காப்பாற்றவும், தங்கள் நட்பை நாடியும் நான் இந்தியா நோக்கிப் பயணம் கிளம்பியிருக்கிறேன். பாரசீகத்துக்கும் இந்தியாவுக்கும் நீண்ட கால நட்பு உண்டு என்பதைத் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். என்னை வரவேற்பீர்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு உண்டு – நட்புடன் நாதிர்ஷா.’ என்று ஒரு கடிதம் டெல்லிக்குப் போனது. இதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை!

கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்ட நாதிர்ஷா, டெல்லிக்கு இன்னொரு கடிதம் அனுப்பினார் - இந்த முறை சற்றுச் சூடாகவே!

‘(மராட்டிய) எதிரிகள் இஸ்லாத்தை அழிக்க முனைவதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. மொகலாய சாம்ராஜ்யத்தைத் தூக்கி நிறுத்திச் சீர்ப்படுத்த வேண்டிய கடமையும் எனக்கு வந்திருக்கிறது. விரைவில் தங்கள் பெருமைமிக்க டெல்லியில் என் படை பிரவேசிக்கும். இந்தச் சீரமைப்புப் பணிக்காக நாலு கோடி வெள்ளி ரூபாய் தயாராக வைத்திருக்கவும். வடக்கே நான் குறிப்பிடும் சில எல்லைப் பிரதேசங்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கடிதத்துக்கு நாற்பது நாட்களுக்குள் பதில் எதிர்பார்க்கிறேன்…’

நாற்பது நாட்கள் கழிந்தன. முகமது ஷா அசைந்து கொடுக்கவில்லை. இது, ஆபத்துக்கு வழிவகுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து...

பாரசீகத்து முரசுகள் ஒளித்தன. வாத்தியங்கள் கிறீச்சிட்டன. ஒரு லட்சத்து முப்பதாயிரம் வீரர்கள் அடங்கிய நாதிர்ஷாவின் படை திமுதிமுவென்று இந்தியா நோக்கிக் கிளம்பியது. ஒரு ராட்சத மலைப்பாம்பு போல நீண்ட பாரசீகப் படை, கைபர் கணவாயைத் துரிதமாகக் கடந்து, இந்திய எல்லைக்குள் புகுந்தது.

லாகூர் மொகலாய கவர்னர் ஜக்கார்யாகான், பாரசீகப் படைக்குச் சற்றே எதிர்ப்புக் காட்டிவிட்டுப் பின்வாங்கிப் பணிந்தார். கவர்னரை மன்னித்து, நாதிர்ஷா அவரிடம் செலவுக்கு இருபது லட்ச ரூபாய் ‘கட்டாய நிதி’ வாங்கிக் கொண்டார். தொடர்ந்து, டெல்லியை நோக்கி முன்னேறியது அவரது படை…

‘மொகலாய சக்ரவர்த்தி முகமது ஷா படை திரட்டிக் கொண்டு, தயார்நிலையில் இருப்பதாக’ வழியில் செய்தி வந்து சேர்ந்தது. ‘‘நல்லது! வளையிலிருந்து எலியைத் துழாவி எடுக்க வேண்டியிருக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்!’’ என்று சொல்லி இகழ்ச்சியாகப் புன்னகைத்தார் நாதிர்ஷா.

13-ம் தேதி, பிப்ரவரி 1739...

டெல்லிக்கு அருகே பானிபட்டுக்கு 20 மைல் தொலைவிலுள்ள கார்னால் என்னும் ஊரில் பாரசீகப் படை நுழைந்தபோது, அதை எதிர்கொண்டது மூன்று லட்சம் வீரர்கள் அடங்கிய டெல்லிப்படை. இந்தியப் போர் யானைகள் மட்டுமே இரண்டாயிரத்துக்குமேல்!

முன்னொரு காலத்தில் இந்திய நாட்டுக்கே உரிய யானைப் படையைக் கண்டு கிரேக்க வீரர் அலெக்ஸாந்தரே கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்ததுண்டு. அது, பழைய கதை. பிற்பாடு, பல நாடுகளில் யானைகள் பரவலாகப் போரில் பயன்படுத்தப்பட ஆரம்பித்துவிட்டதால், நீண்ட கரிய பெரும் சுவராக வழிமறித்த யானைகளின் அணிவகுப்பைப் பார்த்து நாதிர்ஷா மிரளவில்லை!

பதிலடியாக, நூற்றுக்கணக்கில் நாதிர்ஷாவின் படையிலிருந்து கிளம்பிப் பாய்ந்த ஒட்டகங்கள். அவற்றின்மீது வைக்கோல் கட்டுக்கள் – தீச்சுவாலைகளுடன்! பரவலாக ஒரு நெருப்பு அலை முன்னேறி வருவது கண்டு யானைகள் மிரண்டு போய் பின்வாங்க, அதற்குள் டெல்லிப் படையைச் சுற்றி வளைத்த பாரசீகப் படை, மொகலாய வீரர்களைத் துவம்சம் செய்தது. மின்னல் வேகத்தில் வாட்களை இயக்கிய நாதிர்ஷாவின் வீரர்கள் இரண்டே மணி நேரத்தில் 20,000 டெல்லி வீரர்களை வெட்டித் தள்ளிச் சாதனை புரிந்தார்கள்.

எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே, சுலபமாக வெற்றிக்கொடி நாட்டியது பாரசீகப் படை. நாதிர்ஷா பாசறையில் வெற்றிக் களிப்புடன் அமர்ந்திருக்க, கூடாரத்துக்கு வரவழைக்கப்பட்டார், தோல்வியடைந்த டெல்லி சக்ரவர்த்தி. புனித குர்-ஆன் புத்தகம் ஒன்றை மார்போடு அணைத்துக் கொண்டு, தட்டுத் தடுமாறி வந்து நின்ற அவர் முகத்தில் அச்சம் தெரிந்தது.

டெல்லி பாதுஷாவின்மீது பார்வையைச் செலுத்திய நாதிர்ஷா, ‘‘புத்தகத்தை வைத்துவிட்டுப் பயப்படாமல் நெருங்கி வரலாம். போர்க்களத்தில் மட்டுமே வாளெடுப்பவன் நான்!’’ என்றார். பிறகு, டெல்லி மன்னரை அமரச்செய்து, நாதிர்ஷா சொன்னதாவது –

‘‘நான் எவ்வளவு கடிதங்கள் எழுதியும் தாங்கள் பதில் போடாதது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? இருமுறை தூதுவர்களை அனுப்பினேன். அதற்கும் அலட்சியம் காட்டினீர்கள். ஒருவர் கடிதம் எழுதினால் பதில் போட வேண்டும் என்ற அடிப்படை விஷயம்கூடத் தங்களுக்குத் தெரியவில்லை! உங்கள் நாட்டைப் பற்றியும் நீங்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. என் படை இந்திய எல்லைக்குள் புகுந்த பிறகும், என்னை முறையாக வரவேற்க யாரையும் தாங்கள் அனுப்பவில்லை. இதெல்லாம் பெரும் தவறு என்று தங்களுக்கு ஏன் தோன்றவில்லை? உங்கள் அலட்சியமும் ஆணவமும்தான் என்னை வலுக்கட்டாயமாக இங்கே வரவழைத்தன. கடைசியில் நடந்தது என்னவென்று பார்த்தீர்களா? இப்படி நாம் ரத்தம் சிந்தியிருக்க வேண்டுமா?’’ – நாதிர்ஷா சொல்லி நிறுத்த, தலைகுனிந்து மௌனமாக இருந்தார் முகமது ஷா.

பாரசீக மன்னர் தொடர்ந்து கூறினார் – ‘‘சரி… நீண்ட பயணமும் அதைத் தொடர்ந்து போரும் எங்கள் வீரர்களைக் களைப்படைய செய்துவிட்டன. அவர்களுக்கும் எனக்கும் ஓய்வு தேவை. டெல்லியில் ஓய்வெடுத்துக் கொள்வோம். மற்ற விஷயங்கள் பற்றிப் பிறகு பேசுவோம்!’’
கடைசிவரை தலையைத் தூக்கி நாதிர்ஷாவை நேருக்கு நேர் பார்க்கவில்லை மொகலாய மன்னர்.

வெற்றிப் படையுடன் ஏறக்குறைய கைதியாக முகமது ஷாவையும் கூடவே அழைத்துக் கொண்டு, டெல்லி நகருக்குள் பிரவேசித்தார் நாதிர்ஷா. அச்சத்தில் இருந்த மக்கள், வழியெங்கும் வரவேற்பு தோரணங்கள் அமைத்திருந்தனர். மாடிகளில் இருந்து மலர்கள் வீசினர். செங்கோட்டை அருகே சாந்தினி சௌக் கடைவீதியில் இந்த ஊர்வலம் நுழைந்தபோது, நகை வியாபாரிகள் முத்துக்கள், பவழங்கள் மற்றும் விலை மதிப்புமிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை நாதிர்ஷாவிடம் பரிசாகத் தந்துவிட்டு மண்டியிட்டனர். ‘இந்தியர்கள் காக்காய் பிடிப்பதில் வல்லவர்கள்தான்!’ என்ற குறும்புப் புன்னகையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டு குதிரையைச் செலுத்தினார் பாரசீக மன்னர்.
அன்றிரவு செங்கோட்டைக்குள் வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் நாதிர்ஷாவுக்குக் கோலாகலமான வரவேற்பு தரப்பட்டது. விருந்துக்கு முன்னோடியாக மதுக்கிண்ணங்கள் அணிவகுத்தன. எதிரே, திறந்தவெளியில் கிறங்கடிக்கும் அழகுடன் அணிசேர்ந்த பெண்கள் நாட்டியம் துவங்கினர்.

ஒயின் கோப்பையுடன் தன் அருகில் போதையுடன் அமர்ந்திருந்த முகமது ஷாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ‘‘பாடல், ஆடல் போன்ற விஷயங்களில் பாதுஷாவுக்கு நிறைய திறமை உண்டாமே?!’’ என்றார் பாரசீக மன்னர். உடனே தன் இடையில் மணிகளைத் தொங்கவிட்டுக் கொண்டு, ஒரு கையில் மதுக்கோப்பையுடன் நாட்டியப் பெண்களுக்கு இடையில் புகுந்து, தானும் பரிதாபமாக ‘டான்ஸ்’ ஆட ஆரம்பித்தார் – பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப் போன்ற பேரரசர்கள் வழிவந்த மொகலாய சக்ரவர்த்தி முகமது ஷா!

மறுநாளும் விடிந்தது – பயங்கரம் நெருங்கியது!