தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 30 - வேங்கடகிருஷ்ணன்

2021081221193973.jpg

இணையற்ற சாதனையாளர்கள்

20210812212114608.jpg

சென்னை புத்தகக் கண்காட்சியில் 2010-ம் ஆண்டு என நினைவு அவருடைய திருக்குடந்தை பதிப்பகத்தின் வெளியே நாற்காலி போட்டு அமர்த்திருந்த அந்தப் பெரிய மனிதரை நான் பார்த்த உடனே புல்லரித்தது. என் மக்களுக்கும் விஷயத்தை சொல்லி, அருகில் சென்று காலில் விழுந்து வணங்கினேன். ஆசிர்வதித்து எழுப்பினார் அந்த தசாவதானி ‘முக்தா’ சீனிவாசன் அவர்கள். ‘இணையற்ற சாதனையாளர்களின் ஐந்தாம் பாகம் வெளிவந்திருந்தது. எடுத்து புரட்டினேன், நான் தெரிந்து கொள்ள விரும்பிய பலரின் பெயர் அதில் இருந்தது. உடனே வாங்கினேன். மிகவும் சிரமப்பட்டு தகவல் திரட்டி இருக்கிறார் என்பது தெரிந்தது. அவரிடமும் பேசினேன். மிகவும் ஆர்வத்தோடு பகிர்ந்துகொண்டார்.

அவரைப்பற்றி என் பெண்ணுக்கு நான் சொன்னேன், 45 படங்கள் டைரக்ட் செய்தவர். 25 படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். தனது முதல் படமான ‘முதலாளிக்காக’ தேசிய விருது பெற்றவர். மூன்று முதல்வர்களோடு பணிபுரிந்தவர். கமல் ரஜினி என்ற இரண்டு சூப்பர்ஸ்டார்களையும் இயக்கியவர். நகைச்சுவை மன்னர்கள் ‘சோ’ மற்றும் ‘நாகேஷை’ மூன்று படங்களில் இணைந்து நடிக்க வைத்தவர். அதில் என் மகளுக்கு பிடித்த ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘நினைவில் நின்றவள்’ இரண்டு காமெடி படங்களும் உண்டு. இவ்வளவு விஷயங்களையும் சொன்ன பிறகு பிரமிப்போடு அவரைப் பார்த்துக் கொண்டிருத்தவள், கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாய் பதிலளித்தார். நான் வாங்கிய புத்தகத்தில் தன் கையெழுத்தையும் ஆசையாய் போட்டுக்கொடுத்தார்.

20210812212216681.jpg

அந்தப் புத்தகத்திலிருந்து சிலரைப் பற்றி அவரின் வார்த்தைகளிலேயே.
முதலில் நூற்றாண்டு கொண்டாடும் நகைச்சுவை எழுத்து மேதை தேவனைப் பற்றி...

“தேவன் எழுத்தின் பலம் நகைச்சுவை. அதுவும் எல்லா வயதினரையும் முறுவல் பூக்க வைத்திடும், எவரையும் புண் படுத்தாத ஹாஸ்யம். ஒரு படு சீரியஸான விஷயத்தையும் சுவையாக சொல்வது எப்படி என்று அறிய வேண்டுமானால் ‘ராஜத்தின் மனோரதம்’ என்ற தேவனின் படைப்பை படித்தால், தெளிவாக விளங்கும். துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன் போன்ற சாகா வரம் பெற்ற கதாபாத்திரங்கள் அவரால் படைக்கப்பட்டவை.”

‘தில்லானா மோகனாம்பாள்’ படைத்த பல்கலை வித்தகர் ‘கொத்தமங்கலம் சுப்பு’ அவர்களப் பற்றி.... வாசன், தான் தயாரித்த ‘அவ்வையார்’ பட்த்தை இயக்கும் பொறுப்பை கொத்தமங்கலம் சுப்புவிடம் தான் ஒப்புவித்தார். வேறு யாராலும் இப்படி இயக்கி இருக்க முடியுமா? என்று எல்லோரும் பாராட்டும் வண்ணம் அதனை இயக்கி இருந்தார் சுப்பு.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன முத்துராமலிங்கத் தேவர் பற்றி...

“தமிழக காங்கிரஸ் கட்சியின் திருப்பரங்குன்றம் மாநாடு, மிக முக்கியமான திருப்பத்தை தந்த மாநாடு என்பதை மறக்க முடியாது. ‘ராஜாஜியா?’ ‘காமராஜரா?’ என்ற வினாவுக்கு விடையளித்த மாநாடு அது. ராஜாஜி முதிர்ந்தவர், மூத்தவர், அனுபவம் மிக்கவர் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் காமராஜரை ஆதரித்து பேசிய தேவர் ‘பிறக்கும்போதே கன்றுக்குட்டிக்கு காதுகள் இருக்கின்றன, அப்புறம் தான் கொம்புகள் முளைக்கின்றன, கொம்புகள் மேலே வரும்போது காதுகள் பணியத்தான் வேண்டும், இதுதான் இயற்கையின் நியதியும் கூட’ என்று ஓர் அற்புதமான உவமையை உரைத்து, காமராஜரின் வெற்றிக்கு வித்திட்டார்.”

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களைப் பற்றி...
“தன் அலுவலக ஊழியர் ஒருவரின் உடல் குணமடைவதற்காக தனது நாவல் திரைப்படமாவதை வேண்டாமென்று தடுத்தவர் அவர். அதனை ஒரு வேண்டுதலாக வேண்டிக்கொண்டு, அவர் குணமடைந்ததும் செயல்படுத்தியவர். திரைப்படமாக எடுக்க விரும்பியவர் என் தந்தை தான். எல்லாம் ஆண்டவன் செயல் என்பதில் அபார மதிப்பு வைத்திருந்தவர் ஆசிரியர் எஸ்.ஏ பி.”

தீரர் சத்திய மூர்த்தி பற்றி....

“மறக்க முடியாத மாபெரும் தலைவர். அவர் பல்கலை வித்தகர். ஆங்கிலத்தை, ஆங்கிலேயர்கள் வியக்கும் வண்ணம் பேசியவர். சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை கேள்விகளாலேயே துளைத்தெடுக்க கூடியவர். காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத்திற்கு சத்தியமூர்த்தி ஒருவரே போதும் என்று காந்தியடிகள் கூறினார். சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு தந்த பொக்கிஷம் காமராஜர். குருவும் சீடனும் அப்படி பரிமளித்தார்கள்.”

காஞ்சி மகாபெரியவர் பற்றி....

“ஸ்ரீசந்திரசேகரர் என்ற பெயருக்குள் பலரும் காண முடியாமல் மிக மிகச் சிலரே காணக்கூடிய முறையில் ஒரு சந்திர சேகரர் வானை முட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டார். ஐந்தடி உயரமும், நலிந்து மெலிந்தவருமான அவருக்குள்ளே ஐந்தாயிரம் கிலோமீட்டர் உயரமானவரும் எல்லா உயிர்களையும் தரக்கூடியவருமாகிய சந்திரசேகரர் மறைவாக நின்றிருந்தார். அவருடைய கண்ணைப் பார்த்தால் ஒரு வேளை அதை விளங்கிக் கொண்டிருக்கலாம். ராமனை எல்லோரும், தோளைக்கண்டு, சிலர் தாள் கண்டு, சிலர் தடக்கை கண்டார், ஆனால் கம்பன் சொல்வது போல அனுமன் ஒருவனே அவரின் கண்கள் கண்டான், ராமன் யார் என்பதையும் அறிந்துகொண்டான் என்கிறார். பெரியவர் நான் பிரச்சனை என்று போய் நின்றபோது தன் மேல் போர்த்தப்பட்ட சால்வையை என்மேல் போர்த்தச்சொன்ன தத்துவம் என்னவென்று விளங்கவில்லை என்று பாலபெரியவாளிடம் சொன்னபோது, ‘இதற்கு பெயர் பூரண ஆசீர்வாதம், இதற்குமேல் அவர்கள் தரக்கூடியது எதுவுமில்லை. அப்படியொரு முழு ஆசியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார். அது ஏன் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று கூறினார்.”

இன்னும் ராஜா முத்தையா, மஹான் அரவிந்தர், நடன மேதை சந்திரலேகா, கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி, நடிகையர் திலகம் சாவித்ரி, நாட்டிய பேரொளி பத்மினி, செல்லம்மாள் பாரதியை பற்றி விளக்கமாக எழுதி இருக்கும் வரிகள் நம் கண்களில் நீரை வரவழைக்கின்றன, அந்த மகா கவியை பாதுகாத்து நமக்கு வழங்கிய உன்னதப் பெண்மணி செல்லம்மாள்.

முடிவாக, இன்றும் சினிமா உலகத்தினர் நன்றிக்கு உதாரணமாகச் சொல்லும் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர். அவரின் நல்ல குணங்களை, அவரின் பழகும் விதத்தை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் முக்தா.

அவ்வப்போது நான் எடுத்துக் படிக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் அன்று அவர்க் கண்காட்சியில் கையெழுத்துப்போட்டு தந்து, என் மகளிடம் பிரியமாய் பேசியது தான் நினைவில் நிழலாடுகிறது.

இணையற்ற சாதனையாளர்கள் - ஊக்கம் தரும் உற்சாக ஊற்று.