ஆஹா… என்னே பாக்யம்..! எங்கள் வீட்டில், ஒரு வாரம் பிள்ளையார்… அது வாரமல்ல, வரம்..! நாங்கள் வேண்டி பெற்ற வரம்… விநாயகர் அளித்த வெற்றி வரம்..!
கும்பாபிஷேக தேதி விறுவிறுவென முடிவு செய்யப்பட்டது. ஐந்தாறு நாட்கள் கச்சேரி… அன்றைய தினம் மகாபெரியவா ஆசியுடன் அசோக்நகர் பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சி – பற்பல பெரியோர்கள் முன்னிலையில், எங்கள் தந்தையின் வில்லிசை கச்சேரி… இதனால் அசோக்பில்லர் 4 சாலை சந்திப்பின் ஒரு பகுதி அடைக்கப்பட்டன. அங்கு பிரமாண்ட பந்தல் போட்டு, மக்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அப்பகுதி முழுவதும் பெருந்திரளான மக்கள் கூட்டம்… இரவு 7 மணியளவில் என் தந்தையின் வில்லிசை துவங்கியது. அதில் அவர் சொன்ன கதை – கதையல்ல நிஜம்… நேரடி சம்பவங்களின் நினைவலைகள்..!
ஒருமுறை தன் தாயிடம் ஒரு பையன், ‘‘அம்மா… நானும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடணும்! எனக்கு பிள்ளையார் செஞ்சு தா…’’ எனக் கேட்டான்.
அதற்கு அந்தம்மா, ‘‘இப்பத்தானடா நான் கொழுக்கட்டை மாவு பிசைஞ்சுக்கிட்டு இருக்கேன்… பூஜை நேரத்துல உனக்கு பிள்ளையார் வாங்கித் தரேன்!’’ என்றாளாம்.
எனினும் அந்த பையன், ‘‘ஊஹும்… அதெல்லாம் முடியாது! எனக்கு கொழுக்கட்டை மாவிலேயே பிள்ளையார் செஞ்சு கொடு…’’ என அடம்பிடித்திருக்கிறான்.
‘‘சரி… கொஞ்சம் வெயிட் பண்ணு!’’ என்றபடியே தனது மகனின் கோரிக்கையை நிறைவேற்றத் துவங்கினாள் தாய். 15 நிமிடத்தில் கொழுக்கட்டை மாவில் அழகான பிள்ளையார் சிலையை உருவாக்கிவிட்டாள் அந்த தாய்!
பின்னர் தனது மகனை அழைத்து, ‘‘இந்த கொழுக்கட்டை பிள்ளையார் பிரமாதமா இருக்கார்… இதை வெச்சு பூஜைக்கு ரெடி பண்ணு..!’’ என்றபடி சிலையை கொடுத்தாள் தாய்.
இந்த பிள்ளையோ, அந்த (மாவு) பிள்ளையாரை ஒரு பீடத்தில் அமரவைத்து, அதற்கு சந்தனம், குங்குமப் பொட்டு வெச்சு, அருகம்புல் மற்றும் பலவண்ண மலர் மாலைகள் போட்டு, குடையெல்லாம் வெச்சு, பூஜைக்கு ரெடி பண்ணிட்டான்!
எனினும், ‘‘பிள்ளையாரை ரெடி பண்ணி கொடுத்துட்டேன்… ஆனால், இன்னும் நிவேதனம் ரெடி பண்ணலையே..! என்ன பண்றது..? பூஜைக்கு நல்ல நேரம் முடியப்போகுது… உனக்கு நைவேத்தியம் வைக்காம பூஜை பண்ணலாமா..? சதுர்த்தி அன்னிக்கே பிள்ளையாரை பட்டினி போடறதா..? கடவுளே, எனக்கு ஒரு நல்ல ஐடியா கொடு..!’’ என தாய் சமையலறையில் புலம்பியது மகனுக்கு கேட்டது.
இதைக் கேட்டதும் அந்த பிள்ளை சிந்திக்க துவங்கியது. விநாயகர் அருளால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்படியே பிள்ளையாரின் வயிற்றை உற்றுநோக்கினான். அதன் வயிறு, அரிசி மாவினால் பெரிதாக இருந்தது..! இதனால் அவனது யோசனை செயல்வடிவம் பெற்றது.
‘அரிசி மாவில் செய்வதுதானே கொழுக்கட்டை..?!’ என்றபடியே, தனது கைவிரல்களை மடக்கி, அந்த பிள்ளையார் சிலையின் வயிற்றில் லேசாக குத்தி, ஒரு பிடி அரிசி மாவை கையால் கிள்ளி எடுத்தான்.
பின்னர் அதை கொழுக்கட்டை போல் பிடித்தான்… பிள்ளையார் வயிறே – கொழுக்கட்டையாக மாறியது! பிள்ளையார் முன்னே, கிள்ளிய மாவு கொழுக்கட்டையை அந்த பிள்ளை நிவேதனமாகப் படைத்தான்..!
‘‘பிள்ளையாரே… இப்போது என் நிலைமைக்கு, இருக்கிற நேரத்துக்கு… இதுதான் உமக்கும் நைவேத்தியம்..!’’ என்று அந்த பிள்ளை சொல்லி, மணியடித்து பூஜை செய்தான். முடிந்ததும் ‘பிள்ளையாரை பட்டினி போடாம, கொழுக்கட்டை யோசனையாவது கிடைச்சுதே!’ என அவனுக்கு பெருமகிழ்ச்சி!
அதன்பிறகு, அந்த பிள்ளை என்ன செய்தான்… தெரியுமா..? கிள்ளி எடுத்த கொழுக்கட்டை மாவை, திரும்பவும் பிள்ளையார் வயிற்றிலேயே பொருத்தி, சரிசெய்துவிட்டு… ஒரு வார்த்தை சொன்னான் –
‘‘அப்பா… பிள்ளையாரப்பா..! உங்க மகிமையே மகிமை! அமுக்கி பிடிச்சா கொழுக்கட்டை… Attach (சொருகி) வெச்சா பிள்ளையாரு..!’’ என்று கும்பிட்ட அந்த பையனுக்கு, இன்றுவரை பிள்ளையார் எந்தக் குறையும் வைக்கவில்லை..!’’ என்று என் தந்தை கதையை நிறுத்தினார்.
உடனே மேடையை நோக்கி பல குரல்கள் – ‘‘யாருங்க… அந்த பையன்..?’’ என்று.
‘‘அப்படி கும்பிட்ட பையனே நான்தான்..!’’ என்று என் தந்தை சொன்னதும், மக்களின் கரகோஷத்தில் அப்பகுதியே அதிர்ந்து குலுங்கியது.
உண்மைதானே..! கோயில் பிள்ளையார் வீட்டில் இருக்கும் அளவுக்கு, வீட்டையே கோயில் ஆக்கியவர் என் தந்தை. இன்றும் அவர் உங்களின் ஆசியால், நலமாக இருக்கிறார்.
இதே பிள்ளையார், ஒவ்வொரு ஆண்டும் என் தந்தைக்கு கூடுதல் ஆயுளை வழங்கி, நூறாண்டு வாழ ஆசி தரவேண்டும் என நான் வணங்குகிறேன். நீங்களும் வணங்குவீர்கள் என நம்புகிறேன்.
இதுவே என் தந்தையின் ‘வில்’பவர்… ‘சொல்’பவர்..! அடுத்த வாரம் வேறொரு சிறப்பான சம்பவங்களுடன் சந்திப்போம். அதுவரை…
– காத்திருப்போம்
Leave a comment
Upload