
நான் இங்கே செளகரியாமாக
வந்து சேர்ந்துட்டேன், என போன் செய்தாள் சித்ரா தன் கணவர் தில்லைக்கு,
" நீங்கள் கவலைப்படாமல் இருங்கள், வேளாவேளைக்கு மருந்து சாப்பிடுங்கள்.
சாப்பாடு, டிபன் அந்த மாமிகிட்டே செல்லியிருக்கேன், சாதம் மட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனும் அறிவுரை,ஊருக்கு கிளம்பியது முதல் இத்தோடு பத்து தடவைக்கு மேல் சொல்லியிருப்பாள்.
தில்லை,பணியிலிருந்து ஓய்வுப்பெற்று ஆறு மாதமாகிறது,சித்ரா தனது
ஒரே மகளின் தலைப்பிரசவ உதவிக்காக அமெரிக்காவிற்கு
சென்றிருக்கிறாள்,முதன் முறையாக வானூர்தி பயணம் மட்டுமல்ல,இத்தனை ஆண்டுகளில் கணவரை பிரிந்து எங்கும் சித்ரா சென்றதுமில்லை. காலம்,சில நேரங்களில் இப்படியான முடிவுகளை பல செய்திகளை, செயல்களை நடக்கவேண்டி அது செயல்படுத்திக்காட்டும்.
" நான் பார்த்துக்கிறேன், நீ போன இடத்திலே தைரியமாக இருந்து மகளுக்கு வேண்டியதை செய்துக்கொடு" என அன்பால் அடக்கினார்.
சித்ரா சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்த அந்த விசாலம் மாமிக்கு அதே தெரு, நான்கு வீடுகள் தள்ளிதான் இருக்கிறார். கணவரை இழந்த மாமி பட்சணங்கள் ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்.
குழம்பு ரசம், பொறியல்,
அவர்களிடம் இரவு டிபன் ஆகியவற்றை கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தாள் சித்ரா.
நாட்கள் மெதுவாக நகர்ந்து ஒரு மாதம் கடந்ததும்
மாமிக்கு கொடுக்க பணம் எடுத்து வைத்திருந்தார் தில்லை. தினமும் நாள்,நேரம் தவறாமல் கொடுத்தனுப்பிய மாமியிடமிருந்து அன்று சாப்பாடு எதுவும் வராமல் போக, என்னவென்று பார்க்க அவர் வீட்டிற்கே கிளம்பிப்போனார் தில்லை.
அங்கே படுத்தபடி இருந்த மாமியைப் பார்த்ததும்,
"கீழே விழுந்துட்டேன் சார், மெதுவாக தவழ்ந்து வந்து இங்கே படுத்துட்டேன், அப்புறம் என்னாச்சு எனத்தெரியலை, என்னாலே எழுந்துக்கொள்ள முடியலை, யாரையும் கூப்பிடக்கூட முடியாத நிலை, போன் கூட அடுப்படியிலே அடித்துக்கொண்டே இருக்கு, எடுக்க கூட எழ முடியலை என வலி பொறுக்க முடியாமல் கண்ணீர் வழிய அழுதுக்கொண்டே சொன்னவளைப் பரிதாபமாகப் பார்த்தார் தில்லை,
மாமி,நான் போய் ஆட்டோ எடுத்துகிட்டு வருகிறேன், டாக்டர்கிட்டே காண்பித்து விடலாம் என்றார்.
எழுந்து நிற்கவோ,நடக்கவோ, தூக்கவும் முடியாமல்
ஆட்டோவில் ஏறும் முயற்சி தோல்வியடைந்து,பின் ஆம்புலன்ஸில் அழைத்துப் போய் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரிடம் காண்பித்ததில், இனி நடக்க வாய்ப்பில்லை எனவும், அடிபட்டதில் இடுப்பில் எலும்புகள் நொறுங்கி உள்ளது,
நீண்ட நாள் பயிற்சி எடுத்தால் எழுந்து உட்காரலாம் ஆனால் நடக்க முடியாது எனக் கூறி அட்மிட் செய்தனர் மருத்துவர்கள்.
ஒரு வாரம் கூடவே இருந்து கவனித்து, உணவகத்தில் இருந்து சாப்பாட்டை வாங்கி கொடுத்து, தானும் சாப்பிட்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் விழி பிதுங்கிய தில்லை, சித்ராவிடம் இதையெல்லாம் கூறினால் அவளும் கவலைப்படுவாள், என அவளிடமிருந்து மறைத்து, தனித்து இரவெல்லாம் தூக்கம் வராமல் யோசித்து நின்ற போது ஒரு இரவில் தீர்க்கமான முடிவை எடுத்தார் தில்லை.
ஆம், அதுதான் சரியான தீர்வாக இருக்கும், நாமே ஏன் அதை செய்யக்கூடாது என்ற யோசனை வலுத்தது.
என்ன? பணம் செலவாகும், ஆகட்டுமே, நம்மிடம் உள்ளதைக் கொண்டு செய்வோம், ஓய்வூதியம் வருகிறது, நம்மைப் போல் அனைவருக்குமான ஒரு தீர்வாக இருக்கட்டுமே என மனத்திற்குள் யோசித்தவர், அங்கு நர்ஸிங் பணியில் இருந்தவரை அனுகி் என்ன சம்பளம் தருகிறார்கள் என்று விசாரித்த போது,
மாதம் ஆறாயிரம் என்றதும் அதையே நானும் தருகிறேன், தங்கும் இடத்தோடு என்ற தில்லை தன் திட்டத்தை கூறினார்.
சந்தோஷமாக,நானும் கணவனால் கைவிடப்பட்டவள்தான் சார்,
நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்படாதீர்கள் என தில்லைக்கு தைரியமும் ஊக்கமும் கொடுத்தாள்.
உணவகத்திற்குச் சென்றவர், அங்கே சமையல் பணியில் இருந்த பழக்கமான நண்பர் ஒருவரை அனுகி தனது திட்டத்தைக் கூற
அதற்கென்ன ? நான் வந்து சமைத்து தருகிறேன் என்றார்.
இப்படியாக மாமியின் வீட்டில், மாமியும்,நர்ஸும் தங்கிக்கொள்ள,தில்லையின் வீட்டில் மேலும் நான்கு கட்டில்கள் வாங்கிப் போட்டு நாளிதழில் விளம்பரம் செய்தார் தில்லை.
உடலுக்கு முடியாமலும்,ஆதரவு இல்லாமல் இருப்பவர்களும் எங்களை அனுகலாம் என்றதும் மேலும் இருவர் இல்லம் தேடி வந்து சேர, அவரது இல்லத்தில் சமைத்து, மாமிக்கும் மற்றவர்களுக்கும் வழங்க ஆரம்பித்த அந்த சேவையானது சித்ரா இந்தியாவிற்கு வந்த பின் மாமிக்கு படுக்கைநோய் வந்து காலமாகிட அவரின் வீட்டையும் பயன் படுத்திக்கொள்ள அனுமதி தந்துவிட்டிருந்ததால் இரண்டு வீட்டையும் சேர்த்து இன்று இருபது பேருக்கு மேல் தங்கி இருக்கின்றனர்.
தில்லையின் இந்த சேவைக்கு அவரது மனைவி சித்ராவும் உறுதுனையாக இருப்பது போல,அந்த நர்ஸும், சமையல்காரரும் இன்று வரை இருந்து தங்கள் பணிகளை எந்த பிரதிபலனும் பாராமல் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
வாய்ப்புகளை இறைவன் வழங்குவதன் நோக்கம் நிச்சயம் பெரிதாகத்தான் இருக்கும்.அதை கண்டுக்கொள்ளும் திறனையும் நமக்கு வழங்கவேண்டியதும் அவன்தானே.. அப்படியான வாய்ப்பினை தனக்கு இறைவனே வழங்கினான் என்ற மகிழ்ச்சியோடு தொடர்ந்து செய்து வருகிறார் தில்லை.
குளத்து நீர், வான் மழை,
பழுத்த மரம் இவையெல்லாம் பிரதிபலன் பாராமல் எப்படி பிறருக்கு உதவுகிறதோ, அதுபோல ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள்,வறுமை நிலை அடைய மாட்டார்கள் அப்படி அடைந்தாலும் அதை பெருமையாகவே கருதுவர்கள் என்ற திருக்குறள் நினைவிற்கு வருகிறதுதானே!.

Leave a comment
Upload