தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -86 காவிரி மைந்தன்

20220322115303906.jpg

20220322115354599.jpg

கயல்விழித்துடிப்பில் காதல் மயக்கம்

20220329113632731.jpg
அன்பே!
அன்பின் பரிபாஷை கண்களில் மட்டுமா?

சொல்லடி என் கண்ணே புன்னகை பூக்கும் உந்தன் திருமுகத்தில் பொங்கும் கருணையது எனக்கான தேனமுது!

நீங்காத நினைவுகளுடன் நான் போராடுகிறேன் என்றேன். நானில்லையா அங்கே என்றே நயமான பதிலுரைத்தாய்!

வானிலே வட்ட நிலா வரவில்லை என்றால் பூவுலகம் இருளில்தானே மூழ்கிக்கிடக்கும் - அதுபோலத்தான் நீ எனைச் சந்திக்காத நாளெல்லாம் பசி உறக்கம் இரண்டையுமே இழந்து மனதுக்குள் அழுவதுமட்டுமே சுகந்தமாய் தொடர்கிறேன்!

வீச மறந்த தென்றல் என்னுடன் பேசும்நாள் வரை இது தொடரும்!

மலர்களின் வாசம் எத்தனை இருந்தாலும் என் மல்லிகையே உனக்கு அது ஈடாகுமா?

இத்தனை நாளாய் காத்திருக்கிறீர்களே.. எனையன்றி வேறொருத்தி என்றால் எல்லாமே நடந்திருக்கும் என்றாயே.. எப்படி உன்னால் அப்படிச் சொல்ல முடிந்தது?

வரிவரியாய் உன்னை வாசிக்கிறவனாக மட்டுமல்ல.. நேசிக்கிறவனாகவும் உள்ள என்னைப் பார்த்து!

மடல் மடலாய் வரைந்து குவிக்கிற என் மனதை மறந்து உன்னிலே வார்த்தைகள் எப்படி வந்தன?

கற்பனையிலே நான் உயர உயரப் பறந்தாலும் கண்ணே உன்னையல்லவா கருத்தில் நிறைத்து சுமக்கிறேன்!

கவிதையிலே தாலாட்டி உனைக் கண்மூட வைக்கிறேன்!

எத்தனை நாடகங்கள் எனக்குள்ளே தினம் நடக்க.. அதையெல்லாம் படம்பிடித்தால் இனிக்காதோ.. ஒவ்வொரு நாளும் புதிய இலக்கியம் பிறக்காதோ?

சொல்கிறேன் கேள் கண்ணே!

உனைப் பெண் பார்க்கும் படலமின்று என்று கொள்!

எப்படியிருக்கும் இருவரின் மனநிலைகள்!!

உனக்கு நானென்றும் எனக்கு நீயென்றும் நிச்சயமானபின் பிறகெதற்கு இந்தப் படலமெல்லாம் என்று விழியாலே வினா தொடுத்தாய்..

இருந்தாலும் எல்லாம் முறையாக நடக்கட்டும் என்றுதான்!

என பதிலுரைத்தேன்! எனைப் பார்ப்பது என்ன உங்களுக்குப் புதிதா?

இல்லை.. இத்தனைப் பேர் மத்தியிலே பார்ப்பதுதான் புதிது என்றேன்!

புருவ வில்லெடுத்து போர்தொடுக்கப் பிறந்தவளே நீ மட்டுமென்ன.. இன்றைய பார்வையில் மட்டும் ஏன் இத்தனை வெட்கம்?

கண்கள் நான்கும் கலந்தபோது அங்கென்ன காந்தர்வத் திருவிழா நடந்ததே!

மெல்ல அடியெடுத்து மேனி குலுங்காமல் அசைந்து வந்தாய் அருகிலிருந்த அறையிலிருந்து! தேவதை ஒருத்தி காட்சி தந்தாளோ என்று ஏங்கித்தவித்தேன் சில நேரம்!

நாணம் தலைமை வகிக்க.. உன் கண்கள் தரையில் பதிக்க.. மொட்டுடல்.. பட்டுடல்.. கட்டுக்குலையாமல் அருகில்வந்து அமர்ந்த போது அதிர்ஷ்டக்காரன் நான் என்பதைவிட வேறெதுவும் தோன்றவில்லை.

சுற்றியும் சொந்தங்களிருந்தபோதும் இடையிடையே நம் கண்கள் மோதியபோதெல்லாம் மோகனம் மழையாய் பொழிந்தது!

என் விழிகளில் மட்டும் உன்னெழில் மலர்ந்தது!

முந்தானையில் கண்டேன் மலர்கள்!

முகவரி சொல்ல அவை முயன்றன! மறைத்துக் கொண்டாய் மனதை!

போதுமே.. உள்ளே வா என்றது உந்தன் தாயின் குரல்!

தயக்கம் உனக்கும் இருக்கிறது என்பதை காட்டியபடியே மெதுவாய் நகர்ந்தாய் பூங்கொடியே!

அசைவற்றுப் போனேன் அந்த நிமிடம்!

கனிமொழியுந்தன் கயல்விழித்துடிப்பில் காதல் மயக்கம் தந்தாயே!

விழிமலர் திறந்து வேதனை தீர விருந்துவைப்பவள் நீயே!

உன் மனதில் இடம்தந்து தினம் எனை வாழவைப்பவள் நீயே!

இரவோ பகலோ இதயம் தழுவ ஏற்ற நேரம் நீயும் வந்திடு!

இதழ்கள் இணையும் அமுதமழையை எனக்கு நீயே தந்திடு!