
தாத்தாவை கூடத்தில் கிடத்தியிருந்த போது தான் அவரின் நிஜ உயரமே எனக்குத் தெரிந்தது. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே அவர் கூன் முதுகு தான். ராத்திரி தூங்கும் போதும் கால் மடக்கி கொண்டு தான் தூங்குவார். காலை நீட்டி, தலையை சரியாக வைத்து கையை உடம்போடு சேர்த்த போதுதான் அவரின் உயரம் தெரிந்தது. ஐந்தரை அடி இருப்பார். எண்பத்தாறு வயது. மெலிந்த உடல். காதில் கடுக்கண். அதை அவர் கழற்றி நான் பார்த்ததே இல்லை..
அனைவரும் நிரம்பி இருந்த கூடத்தில், பெரிய அழுகையோ, புலம்பலோ இல்லை. அம்மாவிடம் எதோ கேட்க போனபோது கண்களை துடைத்துக்கொண்டே ஏதோ பதில் சொன்னாள்.
தாத்தாவையே பார்த்து கொண்டிருந்தேன். அவர் முகத்திலும், சிரிப்பிலும் ஒரு லேசான வலி எப்போதுமே தெரியும். இப்போதும் அப்படியே தான் இருந்தது. அகண்ட நெற்றி, பெரிய காதுகள், சற்று நீளமான கைகளும், கால்களும். வலது கை விரல்கள் மட்டும் சற்று மடங்கியும் இருக்கும். நான்கு விரல்களும் ஒன்று சேராது அக்கையில்...
காரியம் எல்லாம் முடிந்தது. அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்த அம்மா விடம் சென்றேன்.
“அம்மா தாத்தாவை பத்தி கொஞ்சம் சொல்லேன்”
கண் திறந்து என்னைப் பார்த்தாள்.
“என்ன சொல்ல, ரொம்பவே கோவக்காரர். பாட்டிக்கு தாத்தான்னா பயம். பாட்டி போயும் பதினஞ்சு வருஷம் ஆயாச்சே!
தனக்கு இருவரும் இல்லை என்பது திடீரென உரைத்திருக்கும். சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
“தாத்தா ஒரு ஸமஸ்க்ருத பண்டிதர், வேலை ஏதும் பார்க்கவில்லை. எண்ணைக் கடை வைத்திருந்தார். பணக்கஷ்டமில்லை. ஏதோ இருப்பதை வைச்சுண்டு பாட்டியும் சமாளிச்சுடுவா! யாரெல்லாமோ சாப்பிட வருவா. வீடே அமக்களமாத்தான் இருக்கும்.”
நான் பாட்டியை பார்த்திருக்கிறேன். பஞ்சு பாட்டி. வெள்ளை வெளேறென்ற தலை முடி. வேறு எதுவும் ஞாபகம் இல்லை.
அம்மா மறுபடியும் தொடர்ந்தாள்.
“தாத்தா காங்கரஸில் சேரும் போது எனக்கு பத்து வயசு. அதுக்கப்பறம் ரொம்ப மாறிட்டார். போக்கே மாறிடுத்து. தேசம், சுதந்திரம்னு தான் எப்போதும் பேச்சு. மீட்டிங்க், மீட்டிங்க்ன்னு எங்கேயாவது போய்டுவா. பாட்டியும் ஒன்னும் சொல்ல மாட்டா.”
தாத்தா இறக்கும் வரை காந்தியவாதி தான். எனக்கு தெரிந்தே முள்ளங்கி, பீட்ரூட் எல்லாம் சாப்பிட மாட்டார். இங்க்லீஷ் காய்கறியாம். சுதந்திர தினம், குடியரசு தினம் வீட்டில் கொடி பறக்கும். காமராஜர் வந்தால் ரோட்டுக்கு சென்று, காத்திருந்து பார்த்துவிட்டுத் தான் வருவார்.
“பாரதியாரை பார்க்க தாத்தா ஜெயிலுக்கெல்லாம் போயிருக்காளாமே”
“ஆமாம். எப்போதும் பெருமையா சொல்லிப்பா! முழு பெயரைச்சொல்லிதான் பாரதியார் கூப்பிடுவாராம்.”
பேசிக்கொண்டே உள்ளே எழுந்து சென்று தாத்தாவின் ஒரு டைரியுடன் வெளியே வந்தாள்.
தாத்தவிற்கு தினமும் டைரி எழுதவேண்டும். நாங்கள் யாராவது எழுதுவோம்.. அன்றைய தேதி போட்டு விட்டு, கை இருப்பு – 25 ரூபாய். மாலதி பிறந்தநாள் 10 ரூபாய் குடுத்தேன், ஸ்ரீபதி பரிட்சை எண், மாப்பிள்ளை இன்று ஆபீஸ் போகவில்லை.. இப்படி ஏதாவது எழுதச்சொல்லுவார்.
இப்போது படிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. வீட்டில் நடக்கும் அணைத்தும் முக்கியம். கைஇருப்பு பணம் எப்போதும் தெரிய வேண்டும். வரவு செலவு கணக்கு கட்டயமாக எழுதவேண்டும். எப்படி திட்டமிட்ட வாழ்வு.
அம்மாவிடம் ஆச்சர்யமாக சொன்னபோது, “ அதெல்லாம் இல்லை! காங்கரஸுக்கு பாட்டியோட 100 பவுன் காசு மாலையை தூக்கி குடுத்துட்டா! குரலில் லேசான ஏமாற்றம் தெரிந்த்து.
“100 பவுனா! எப்படிம்மா?”
“ஏதோ திடீர்னு ஒரு நாள் தாத்தா வந்து கேட்டா, பாட்டியும் குடுத்துட்டா”
“பாவம்மா! நிறையபேரு அந்த காலத்துல அப்படித்தானே!
“ஆமாம். நகை குடுத்தது போறாதுன்னு, போராட்டத்துல போய் அடிவேற வாங்கிண்டு வருவா” கை விரல பாத்திருப்பயே. மடங்கியே தான் இருக்கும்.”
தாத்தாவால் ஒழுங்காக சாப்பிடவே முடியாது. கையால் எடுத்து சாப்பிடும் போது பாதி சாதம் கீழே விழும். தடுமாறித்தான் சாப்பிடுவார். யார் உதவியும் வேண்டாம் என்று சொல்லிடுவார். ஆடை உடுத்துவதிலிருந்து எல்லாமே கடினம் தான். சற்று முடங்கிப் போன வாழ்க்கை தான்.
“இவ்ளோ கஷ்டப்பட்டாளேமா, தியாகி பென்ஷன் கிடைக்கலையா?
“அது போறது போ! தாத்தா ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லையாம். அதுனால கிடைக்காதுன்னு சொல்லிட்டா!”
நூறு பவுன் காசு மாலையும், தாத்தாவின் மடங்கிய விரல் மூலம் சிதறிய சோற்றுப் பருக்கைகளும் ஞாபகம் வந்தது.
தாத்தாக்கு ஏமாத்தமாம்மா?
ஆதெல்லாம் இல்லை. வேற யார் கிட்டயும் இத பத்தி கேக்கவேண்டாம்னு சொல்லிட்டா.
ஏன்?
“தெரியலை.”
அதற்க்குமேல் அம்மா ஒன்றும் பேசவில்லை.
தாத்தா டைரியை மறுபடியும் புரட்டிக்கொண்டிருந்தேன்.
ஒரு பக்கத்தில் ஏதோ கோழி கிறுக்கல் கை எழுத்து. தானே எதோ எழுதி இருக்கிறார்.
அதில் கையிருப்பு பற்றி எல்லாம் இல்லை. கஷ்டப்பட்டு படிக்க முயற்ச்சி செய்தேன். கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. முதல் முறை சில வார்த்தைகள் புரிந்தது. இரண்டாவது, மூன்றாவது முறையில் இன்னும் தெளிவாக புரிந்தது.
“100 பவுன் நகையும் ஒரு சில அடிகளும் என்னை தியாகி ஆக்கி விடாது.”
அதற்க்கும் கீழே இதை எழுதியிருந்தார்
அடிமை நாட்டுக்கு வேண்டியது தியாகம், சுதந்திர நாட்டுக்கு தேவை ஆவணம். தியாகத்தை விட, தியாகி என்று நிரூபிப்பது கடினம். பாவம் என் தோழர்கள்! எத்தனை பேர் “தியாகிகள் ஆனார்களோ!, எத்தனை பேர் ஆவணம் தேடுகிறார்களோ!
நாப்பது வருஷம் கொஞ்சம் ஏமாற்றம் தானோ? ஆனால் என்றைக்குமே தளர்வாக பேசியதில்லை. நாட்டுப்பற்று என்பது ஒரு உணர்வு. தனது வாரிசுகளுக்கும் அதை எடுத்துச்செல்வது கடைமையாக நினைதிருப்பரோ? தன்னில் நம்பிக்கை குறைந்தால் தனது குடும்பத்திற்க்கும் குறையலாம் என்று கருதி இருக்கலாம். அரசியல் பேசாமல், ஆளுமையை விமர்சிக்காமல் தான் இருந்தார். அது அதீத வருத்தமா இல்லை நம்பிக்கையா தெரியவில்லை! ஆனால் தன் நிலையை தொடர்வது தர்மமாகவே நினைத்திருப்பார்.
பக்கத்தின் முடிவில் ஏதோ எழுதியிருந்தார். இரண்டு வார்தை தான். கூர்ந்து பார்த்தேன். “வாழ்க பாரதம்”.
தாத்தா கை எழுத்து என்பதினால் அதில் நாட்டுப்பற்றை மீறி எதுவும் தெரியவில்லை.

Leave a comment
Upload