தொடர்கள்
கதை
“நம்பியும்-நங்கையும்” (வெ.சுப்பிரமணியன்)

20220328061018560.jpg

“அம்மா… எனக்கு கல்யாணமே வேண்டாம்மா. அப்பாதான் என்னை ‘கம்பெல்’ பண்ணறார்னா, நீயும் அவரோட சேர்ந்துகிட்டு, ஏம்மா என்னை கஷ்டப்படுத்தறே?” என்றேன் நான்.

“உனக்கு வயசு இருபத்தேழாச்சு. இந்த குருப் பெயர்ச்சியிலே உனக்கு கல்யாணயோகம் வந்திருக்குன்னு ஜோஸியர் சொன்னார். அதுமட்டுமில்லே… நீ கண்டகண்ட பெண்களோட சுத்திகிட்டிருக்கிறேன்னு எனக்கு தினசரி யாராவது ஒருத்தரிடமிருந்து புகார் வந்துகிட்டேயிருக்கு. இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்னா… உனக்கு ஒரு ‘கால்கட்டு’ போட்டாதான் சரியாயிருக்கும்” என்றார் என் தந்தை.

“ஆமாண்டா ‘ராகவா’ நீ ஸ்கூல், காலேஜுன்னு படிக்கிற காலத்திலேதான் ‘ஆம்பிளைப் பசங்களை’ கண்டாலே தெறிச்சு ஓடுவே. அதுவே ‘லேடீஸ்னா’ மணிக்கணக்கா பேசுவே. இப்போ ஆஃபீஸுக்கு போனதுக்கு பிறகும், ஒரேயடியா லேடீஸ்களோடவே பிரன்ட்ஷிப் வைச்சுகிறது அசிங்கமில்லையாடா? உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னா… ஏன் வேண்டாங்கிறே? யாரையாவது மனசிலே ஆசைப்பட்டிருந்தா… தைரியமா சொல்லுடா” என்றாள் அம்மா.

“சேச்சே… அப்படியெதுவும் இல்லேம்மா. ஆனால், எனக்கு கல்யாணம் மட்டும் வேண்டாம்மா. காரணம் கேட்காதே… பிளீஸ்” என்றேன்.

“உன்னை புரிஞ்சுக்கவே முடியல்லேடா ராகவா. ஊரொலகத்திலே உன் வயசிலே இருக்கிற பசங்களெல்லாம், ‘எப்போடா கல்யாணம்னு’ துடிச்சுகிட்டிருக்காங்க. நீ என்னடான்னா காரணமே சொல்லாம, கல்யாணமே வேண்டாங்கிறே. நீ எங்களுக்கு ஒரே பையன், எங்களுக்குன்னு சில கடமைகள் இருக்கில்லே? அதனால… நாங்க சென்னையிலே உனக்காக ஒரு பெண் பார்த்திருக்கோம். நீ வந்து பெண்ணைப்பாரு. நிச்சயமா ‘இந்தப் பெண்ணை’ உனக்கு பிடிக்கும்” என்றாள் அம்மா.

“நீயும், அப்பாவும் செய்யும் தொல்லையாலேதான் பெண்பார்க்க, சென்னைக்கு வரேன்னு சம்மதிக்கிறேன்” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு, என் திறன்பேசி வழியாக நடந்த, எங்கள் உரையாடலைத் துண்டித்தேன்.

‘பல்லவன்’ விரைவு ரயில்வண்டி, ‘விருதாச்சலம்’ ரயில்வே ஸ்டேஷனில் சிலவினாடிகள் நின்று, பிறகு வேகமெடுத்தது. ‘பட்பட்டென்று’ தன் இரு உள்ளங்கைகளையும் தட்டியபடி, “மவராசா… உங்களோட தர்மக்கையால தாராளமா அள்ளித்தாங்க” என்று, பாவாடை தாவணியில் உடையணிந்து, கட்டையான ஆண்குரலில் ‘பிச்சை’ கேட்டாள்… ஒருத்தி.

“இந்தா… மூதேவி… தள்ளிநின்னு பிச்சைகேளு. ஏமாந்தா… ஆம்பளைங்க மடியிலேயே உட்காந்திடுவே போல இருக்கு” என்று பிச்சைகேட்ட அந்தப் பெண்ணை எக்கினாள் தலைமுடி நரைத்திருந்த ஒரு பெண் பாஸஞ்சர்.

‘அலமேலு’… அதுகிட்டே வம்பு பண்ணாதே. அதெல்லாம், ரௌடித்தனம் பண்ணுங்க… என்ற அலமேலுவின் கணவர், “காசு இல்லேன்னா போக வேண்டியதுதானே… சனியனே” என்று அந்தப்பெண்ணை வசை பாடினார்.

“கோவிச்சுக்காதீங்க ‘மவராசா’… என்னை நல்லாப் பாருங்க… நான் அழகா இல்லையா? என்னைப்போய்… சனியன்னு திட்டுறீங்களே” என்று சொல்லிவிட்டு ‘அலமேலுவின்’ கணவரது தலைமீது, அவளது கைகளால் தொட்டு, ‘நல்லா இருங்க’ என்று ஆசீர்வதித்தாள் அந்தப்பெண்.

“அடுத்த விநாடி…” டேய் கணேசா… எழுந்துவாடா… இந்த ‘சிறுக்கி மவ’ உன் அப்பாவோட தலையிலே அடிச்சுட்டாடா” என்று அலமேலு கத்தவும், முன் வரிசையில் அமர்ந்திருந்த, நான்கு வாலிபர்கள் எழுந்து விரைவாக ‘அந்தப் பிச்சைக்காரப் பெண்ணை’ சூழ்ந்து கொண்டார்கள்.

“ஏண்டி… ‘ஒம்போது’, யார் மேல கைவைக்கிறே? இந்த நாயெல்லாம் இப்படித்தான்… பிச்சை எடுக்கிறமாதிரி வந்து பரிதாபமா பேசிட்டு… போகும்போது, அப்படியே கையில கிடைக்கிறதை லவுட்டிகிட்டு போயிடுவாளுக” என்றான் கணேசன்.

"அண்ணா… நீங்க நினைக்கிற மாதிரி கிடையாதுண்ணா… நாங்க எல்லாம் சாபம் வாங்கிகிட்டு இந்த பூமியிலே பிறந்துட்டோம். உங்களை மாதிரி நாலு பேர் உதவி செஞ்சாதான், எங்க வயித்தை கழுவமுடியும்” என்றாள் அந்தப் பெண்.

“என்னடி… பரிதாபமா பேசறே? ஆள் நல்லா கட்டுமஸ்தான உடம்போடத்தானே இருக்கே? எதாவது ‘தொழில்’ செய்யலாமில்லே? அதைவிட்டுட்டு, ஜனங்களை ‘ஏச்சுப் பிடுங்கி’ வயித்தை கழுவறதெல்லாம் ஒரு பொழைப்பா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே… முரட்டுத் தோற்றத்துடன்… கூட இருந்த ‘கணேசனின்’ நண்பன், அந்தப் பெண்ணின் கன்னத்தில் ‘பளாரென்று’ ஒரு அறை விட்டான்.

தான் அறை வாங்கியதை, ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், மீண்டும் தன் கைகளை தட்டிக்கொண்டு, ‘தர்மராசா…’ என்று, அடுத்த வரிசையில் இருந்தவர்களிடம் ‘பிச்சை’ கேட்டாள் அவள்.

இரண்டு வரிசைகள் தள்ளி அமந்திருந்த என்னை, “ஏய்… அர்த்தநாரி” என்று அழைத்தபடியே நெருங்கினாள் அவள். “நம்மக் கடவுள் ‘அரவான்’, மஹாபாரதப் போர்ல பாண்டவர்கள் ஜெயிக்கணும்னு, தன்னையே தியாகம் பண்ணிகிட்டவர். அவரோட சந்ததிகளுக்கு, இப்போ இருக்கிற… ஜனங்க குடுக்கிற மரியாதையையும், சன்மானத்தையும் பார்த்தேயில்லே? பரவாயில்லே ‘கூத்தாண்டவரே’… நீங்க நல்லாயிருங்க” என்று கூறியவள், தன் கைப்பையிலிருந்து, குங்குமத்தை எடுத்து, என் நெற்றியில் திலகமிட்டு, என்னை ஆசீர்வாதம் செய்தாள்.

எனதருகே இருந்தவர்கள் முகம் சுழித்தாலும்… ஏனோ எனக்கு இம்மியளவுகூட கோபமே வரவில்லை. மாறாக அந்த திருநங்கையைப் பார்த்து, சினேகத்துடன் புன்னகைத்தேன்.

பல்லவன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நின்று, மூச்சு வாங்கிக்கொண்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஓடியது.

“எவண்டி உன்னை அடிச்சவன்” என்று கூவியபடியே, நான் அமர்ந்திருந்த ரயில் பெட்டிக்குள், திபுதிபுவென்று சுமார் இருபது திருநங்கைகள் வந்து நின்றார்கள்.

‘அந்தா அவன் தாக்கா’ என்று ‘அந்த’ அறைவாங்கிய திருநங்கை, கைகாட்டவும், அந்த ‘அலமேலுவின்’ மகன் கணேசனையும், அவனது நண்பர்களையும், ‘கொத்தாக’ தூக்கினார்கள் ‘திருநங்கைகள்’.

அந்த நால்வரும், பருந்துகளிடம் சிக்கிக்கொண்ட கோழிக்குஞ்சுகள் போல, ‘திமிறிப்பார்த்தார்கள். “அவனுங்களை ஒண்ணும் செய்யாதீங்கடி… நம்ம ‘ராகினி’ வந்துகிட்டிருக்கா… இவனுங்களுக்கு மரியாதை பண்ண அவதான் சரியானவ” என்று ஒரு திருநங்கை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “விண்ணுலகத்து தேவதையோ’ என்று எண்ணும்படியாக ‘அழகி’ ஒருத்தி, நாகரிகமான உடையலங்காரத்தோடு அங்கே வந்தாள்.

“குயிலினும் இனிய தன் குரலால், “உங்களையெல்லாம் பார்த்தா… படிச்சவர்களாட்டுமா இருக்கீங்க. உங்க குடும்பத்திலே யாருக்காவது ஒருத்தருக்கு, ‘ஹார்மோன் டிஸ்ஸார்டராலே’ இவங்களை மாதிரி ஒரு ஜீவன் பிறந்திருந்தால், இப்படியா அவங்ககிட்டேயும் நடந்துப்பீங்க? அனுதாபத்தோட பார்க்கவேண்டிய இந்த அப்பாவிகளிடம் ‘இரக்கம்’ காட்டாவிட்டாலும், அநாகரீகமா நடந்துக்கலாமா?” என்றாள் ‘ராகினி’.

“மொதல்ல… என் அப்பாவோட தலையிலே அடிச்சது ‘அந்த அலிதான்’ என்ற ‘கணேசனைப்’ பார்த்து, ‘சார்… மரியாதையா பேசுங்க… என்றாள் ராகினி.

“இந்தக் கழிசடைக்கு வக்காலத்து வாங்கிட்டு வரதுக்கு நீ யாரு? வந்துட்டா பெரிய சண்டியராட்டுமா…” என்று எகிறினான், முரட்டுத் தோற்றத்திலிருந்த கணேசனின் நண்பன்.

அடுத்த நொடி… அருகேயிருந்த ரயில் ‘ஜன்னலில்’ போட்டிருந்த இரும்பு ஷட்டரில், தன் வலது கை முட்டியால் ஓங்கி ஒரு குத்து விட்டாள் ‘ராகினி’. ஷட்டரும், அதன் பின்னாலிருந்த கம்பிகளும் நொறுங்கிப்போனது. அந்த நால்வரின் முகத்தையும் ‘மரணபீதி’ கௌவியது.

”நாங்க பார்க்கத்தான் பொம்பளைங்க… ஆனால்… நிஜத்திலே ஆம்பிள்ளைங்க... ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு, ‘வாங்கடி… போகலாம்’ என்று சொல்லிக்கொண்டு, ‘ராகினி’ முன்னே நடக்க, மற்ற அலிகளெல்லாம்… அவள் பின்னே சென்றார்கள்.

அன்று மாலையில், அம்மா அப்பாவுடன், பெண்பார்க்கப் போனேன். எனக்கு திருமணத்தில், விருப்பமில்லாததால்… என்னெதிரில் வந்து நின்ற ‘அந்தப் பெண்ணை’ ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது என் கண்கள்.

“உங்க மகனோட ‘நான்’ தனியாக பேசலாமா?” என்ற அந்தப் பெண்ணின் குரல் என் செவிகளில் தேனைப் பாய்ச்சியது. காலையில் பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸில் பார்த்த ‘ராகினியேதான்’. என் மனம் ஆனந்தக் கூத்தாடியது. ‘பசுவின் பின் செல்லும் காளை போல’ அவளைத் தொடர்ந்தேன்.

“மிஸ்டர் ராகவன்… நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒரு அழகான ‘யுவதி’ இல்லை. என்னால் உங்களுக்கு ‘பெண்’ தரும் ‘உடல் சுகம்’ தர இயலாது. காரணம்… “நான் பிறக்கும்போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, முகத்தோற்றத்தில் கன்னியாக தெரிந்தாலும், மனதளவிலும், செயல்பாட்டாலும் ‘ஆணாக’ வாழும் ஒரு ‘திருநம்பி’. இந்த உண்மையை என் வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல் மறைக்க நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா? ஆகவே… எதாவது காரணத்தைச் சொல்லி, ‘என்னை பிடிக்கவில்லை’ என்று என் பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள்” என்றாள் ராகினி.

“இன்னிக்கு காலையிலே ‘பல்லவன் எக்ஸ்பிரஸ்ல’ உங்களை பார்த்ததுமே… நீங்க மென்மையான ‘பெண்’ இல்லைன்னு எனக்கு தெரிந்துவிட்டது. உங்க வீட்டுக்குத்தான் பெண்பார்க்க வரேன்னு எனக்குத்தெரியாது. அந்தக் ‘கூத்தாண்டவர்தான்’ நம்மை சந்திக்க வைத்திருக்கார்” என்று நான் சொன்னேன்.

குழப்பத்துடன் என்னைப் பார்த்தவள்… “சாரி… மிஸ்டர் ராகவன், நீங்க சொல்லறது எனக்குப் புரியல்லே” என்றாள் ராகினி.

“முகஜாடையிலும், குரலிலும், வெளித்தோற்றத்தில் ஆணாக தெரியும் நானும், பிறப்பினால் ஆண்தான். ஆனால்… இப்போது எண்ணத்தாலும், செயலாலும், பெண்ணாகவே வாழும் ஒரு ‘திருநங்கை’. அதனால்தான் ‘திருமணமே’ வேண்டாமென்று, இத்தனை நாட்களாக, என் பெற்றோரிடம் சொல்லிவந்தேன்” என்று சொல்லவும், ஆச்சரியத்தில் கண்மலர்ந்தாள் ‘ராகினி’.

“நமக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்துடன், நாமிருவரும், திருமணம் செய்துகொண்டு… ‘புது வாழ்க்கையை’ துவங்கலாம்… உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டதும், ‘ராகினி’ மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.

மகிழ்ச்சி ததும்பிய இன்முகத்துடன், இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தோம். என் அம்மா… “என்னடா ராகவா… ‘ராகினியைப்’ பிடிச்சிருக்கா?” என்று கேட்கவும்… “அவங்களை கேளுங்க” என்று ‘வெட்கத்துடன்’ சொன்ன என்னைப்பார்த்து, “எனக்கும் பிடிச்சிருக்கு” என்று ‘கம்பீரமாக’ சொன்னாள் ராகினி.

‘புணர்ந்து’ வாழ்க்கையை ‘சுகிக்க’ முடியாத ‘நம்பியும்-நங்கையும்’ என்ற நிலையிலிருந்த நாங்களிருவரும், ஒருவரையொருவர் நன்கு ‘புரிந்து’ வாழ்க்கையை ‘சுகிக்க’ முடிவெடுத்தோம்.