ரெடி… ஜூட்….1…2…3…

அட….நில்லுங்க …நில்லுங்க…ஓடாதீங்கப்பூ……நான் உங்களுக்கு ஜூட் சொல்லல…… நில்லுங்க…!!! பின்ன எதுக்கு இந்த 1…2…3…ன்னு கேக்கறீங்களா…? வாங்க பாக்கலாம்….
ஒரு முறை ஒரு சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போறதுக்காக திருச்சி போயிருந்தோம்…..அந்த ஃபங்க்ஷனுக்கு…. தெரிஞ்சவங்க ரெண்டு குடும்பம் வந்திருந்தாங்க…. ரொம்பநாள் கழிச்சுப் பாத்ததுல ஒரே சந்தோஷம்…, நல்லா கலகலப்பா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல….
சென்னைக்குத் திரும்பறதுக்கு ராத்திரி ட்ரெயினை புக் செஞ்சிருந்தோம்… அவங்களும்தான்…. அதுல ஒருத்தருக்கு திடீர்னு ஞானம் வந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போக ப்ளானைப் போட்டாங்க….சரி, வந்தது வந்தோம்…. எப்படியாவது ரங்கநாதரைப் பாத்துட்டு போயிடலாம்னு எல்லாரும் போனோம்…. ஸ்ரீரங்கம் கோவில் எவ்வளவு பெரிசுன்னு சொல்லவேண்டியதேயில்ல….நல்ல த்ருப்தியான தரிசனம்…எத்தனை தடவை பார்த்தாலும் திரும்பவும் கோவிலுக்கு எப்ப வருவோம்னு நினச்சுக்கிட்டுத்தான் கோவில்ல இருந்து வெளியில வருவோம்….எல்லாரோடையும் ரங்கனைப் பாத்ததுல மனசு நிறஞ்சு போச்சு…. அதே நேரம் , நிதானமாப் பாத்ததுல, நிறைய நேரம் ஆகி இருந்துச்சு… அப்ப இன்னொருத்தர், அண்ணனை மட்டும் பாத்தா எப்படி..? தங்கையையும் பாக்கணும்னு சொன்னாரு….அதனால சமயபுரத்துக்கு போகலாம்னு சொன்னாரு….ஆனா, நேரம் குறைவாத்தான் இருந்துச்சு….
சமயபுரம் மாரியம்மன் கோவில் எவ்வளவு சக்திவாய்ந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும்…அதுக்கேத்தபடி கூட்டமும் அதிகமாத்தான் இருக்கும்…. போகற நேரம், வர்ர நேரம், தரிசன நேரம் எல்லாம் சேர்த்துப்பார்த்தால், ராத்திரி ட்ரெயினைப் பிடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்…. சொல்லிப்பார்த்தோம்….ஆனால், “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை…ஈசியா வந்துடலாம்…” என்றார் அவர். இதில் இன்னொரு கோஷ்டி முக்கொம்புக்குப் போக, ஒரு சிலர் காவிரியைப் பார்க்கப் போக, சரி, இனி சொல்லிப் புண்ணியமில்லை என்று நாங்கள் ரங்கநாதரைப் பார்த்த த்ருப்தியில், மீண்டும் கல்யாண மண்டபத்துக்கே போகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்……
பெரிய போரில் புறமுதுகிட்டு ஓடறவங்களைப் பார்க்கிறது போல எங்களை ஒரு பார்வை பார்க்க, உடனே ,“ஆசையாத்தான் இருக்குது வரணும்னு……ஆனா, அடுத்த முறை வரும்போது கண்டிப்பா சமயபுரமும் திருவானைக்கோவிலும் காட்டழகியசிங்கரையும் பார்க்கிற மாதிரி ப்ளான் பண்ணிட்டு வரோம்…” என்று சொல்லிவிட்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினோம்…
இரவு, நாங்க திருச்சி ஜங்க்ஷனுக்குப் போய் ட்ரெயினுக்காகக் காத்துட்டு இருந்தபோது, நினச்ச மாதிரியே ட்ரெயினுக்கு நேரமாயிருச்சே தவிர, இந்த கோஷ்டியை காணலை….
போனைப் போட்டுக் கேட்டால், கோவில் தரிசனம் நல்லபடியா முடிசிச்சு……ஆனா, கொடுமையான ட்ராஃபிக்கில் மாட்டிட்டோம்….அடிச்சுப் பிடிச்சு வந்துட்டு இருக்கோம்னு மூச்சு வாங்கச் சொன்னாங்க.…
ஸ்டேஷனுக்கு அவங்க வந்து சேந்தப்ப, ட்ரெயின் வர்ர பத்து நிமிஷம்தான் இருந்துச்சு…, சோதனையா கடைசி ப்ளாட்ஃபார்ம்லதான் இந்த ட்ரெயின் நிக்கும்ன்றதால, தலை தெறிக்க ப்ளாட்ஃபார்மை நோக்கி அவங்க ஓடி வர, அவர் மனைவி ரொம்ப சிரமப்பட்டு விழுந்து வாராத குறையா புடவை தடுக்காதபடி கனத்த உடம்பத் தூக்கிட்டு ஓடிவந்தாங்க… அவங்க என்ன பீ டீ உஷாவா…? திடீர்னு ஓடி வான்னு சொன்னதும் ஓடி வர்ரத்துக்கு….
ரொம்ப பாவமாவும் கஷ்டமாவும் இருந்துச்சு….அதே நேரம் ட்ரெயினும் வந்திடுச்சு…, மலைப்பாம்பு மாதிரி நீளமான இருந்த ட்ர்யின்ல ஏறவேண்டிய கோச் வேற பின்னாடி இருந்ததால, பெட்டியத் தூக்கிட்டு ஓடி வந்து அவரு தடுமாறி உள்ளே ஏற, அவர் பின்னாடியே மூச்சு வாங்க ஓடி வந்து ஏறின அவரோட மனைவி, ஏறின வேகத்துல தோளில மாட்டிட்டு இருந்த ஹேண்ட்பேக் ப்ளாட்ஃபார்மல கீழே விழ, அவங்க அதை எடுக்கக்கூட நேரம் இல்லாம, ட்ரெயின் கிளம்பிடுச்சு… தட்டுத் தடுமாறிப் உள்ளே வந்த அவங்க ரெண்டு பேருக்குமே கண்ணு கலங்கிடிச்சு…..
ப்ளாட்ஃபார்மில் விழுந்த அவங்க ஹேண்ட்பேகில, ஏடீஎம் கார்ட், ஆதார் கார்ட் உட்பட பல முக்கியமான விஷயங்களும், கல்யாணத்தில கழுத்தில போட்டுட்டு இருந்த மூன்று செயினில் ஒரு செயினை, வெயிலில் ரொம்பவும் கழுத்து வேர்க்குதுன்னு கழற்றி ஹேண்ட்பேக் ஜிப்பில் போட, அந்தச் செயினும், ஆப்பிள் ஐ போனுமா, சகலத்தையும் தொலைச்சுட்டாங்க... எல்லாத்துக்கும் மேல, சென்னை வீட்டைப் பூட்டின வீட்டுசாவியும் அதிலதான் இருக்குதுன்னு விக்கிச்சுப் போயிருந்தாங்க.
சகபயணிகள் ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அவரு ரயில்வே போலீஸுக்கு போன் செய்து விபரத்தைச் சொல்லியபடி இருந்தாரு. டிக்கெட் பரிசோதகர் கிட்ட ஒரு பாட்டம் அழுதுவைக்க, மொத்தத்தில, காலையில கலகலப்பா இருந்த சூழ்நிலை சாய்ந்திரம் சுத்தமா மாறி இருந்துச்சு.
விக்ரமாதித்தன் கிட்ட வேதாள்ம கேக்கற மாதிரி “எங்கே தப்பு…? கோவிலுக்குப் போனதால்தான் இவ்வளவு பிரச்சினையா…? கோவிலுக்குத்தானே போனாங்க…பிறகு அவங்களுக்கு எதுக்கு இவ்ளோ சோதனை…?” அப்டின்னு கேட்டா…..,
“நிச்சயமா இல்லை…..கோவிலுக்குப் போனது பிரச்சினை இல்லை…கோவிலுக்குப் போகணும்ன்றதை முன்கூட்டியே திட்டமிடாததுதான் பிரச்சினை….”
திருச்சிக்குக் கல்யாணத்துக்குப் போகணும்ன்றதை யோசிக்கும்போதே, அதற்கான டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்யறது போல, எத்தனை மணிக்கு முகூர்த்தம்… சாப்பாடு முடிஞ்சு எவ்வளவு நேரம் இருக்கும்….திரும்பி வரும் ட்ரெயின் நேரம் என்ன…? இடைப்பட்ட நேரத்தில என்ன செய்யலாம்…? எங்கேயாவது போகணுமுன்னு நினச்சா, அதிகபட்சம் எவ்வளவு நேரமாகும்….? அது நம்முடைய ட்ரெயின் நேரத்தை பாதிக்குமா…? ஒரு வேளை லேட்டாயி ட்ரெயினைத் தவறவிட்டுட்டா என்ன செய்யறதுன்னு… உள்ளிட்ட அத்தனைக்கும் ப்ளான் ஏ, ப்ளான் பி, ன்னு மனசுல ஒரு திட்டம் வச்சிருக்கணும்…. இந்த மாதிரி கடைசி நேரத்துல ஓடக்கூடாது….
திடீர் திடீர்னு மனசுல தோணுவதைச் செய்யறது எப்பவுமே ஒரு பிரச்சினைதான்…..சிறிசோ பெரிசோ…எல்லாத்துக்கும் ஒரு சரியான திட்டமிடுதல் வேணும்.… அது பல நேரம், நம்ம நேரத்தை, சக்திய, பணத்தை மிச்சம் செய்யும்….
திட்டமிடாத திட்டங்களாலதான் எப்பவுமே பிரச்சினை….அது மனசுகஷ்டத்தையும் தரலாம்…பண நஷ்டத்தையும் தரலாம்…சமயத்துல, ஏதாவது விபரீதத்துலயும் கொண்டுபோய் விடலாம்…
கீழே விழுந்தது ஹேண்ட்பேகானதால பணநஷ்டத்தில முடியும்…ஒரு வேளை ஓடி வந்தவங்களே தவறி விழுந்திருந்தா….? நினைக்கும்போதே “பக்”குன்னு இருக்குது. அங்கேதான் அவங்கள கும்பிட்ட கடவுள் காப்பாத்தி இருக்காரு…பணநஷ்டத்தை சமாளிக்கலாம்…உயிர் இழப்பை என்ன செய்யமுடியும்…? ஆனா, இவ்வளவு பிரச்சினைகள் தேவையா…?
அடுத்த நாள் சமையலைக்கூட திட்டம் போட்டு வச்சிக்கும்போது , காலைல குழப்பம் இல்லாமல் இருக்கும்.….
பரிட்சைக்குப் படிக்கிற குழந்தைங்களுக்கு ஸ்டெப் பை ஸ்டெப் என்ன செய்யணும்…? எப்படி ப்ளான் பண்ணனும்னு கத்துக்குடுகிறது போல வாழ்க்கையில எல்லாத்துக்கும் தயார் செஞ்சிக்கிறதோட அவசியத்தை உணர்த்தணும்…….பெரியவங்க அதுக்கு முன் மாதிரியா இருந்து காட்டணும்……கடைசி நேர முடிவுகள்ன்றது எப்பவோ ஒரு முறை எடுக்கிறது சரி…ஆனால், எல்லாத்துலயுமே ஒரு திட்டமில்லாமல், தோணறபடி செஞ்சு குளறுபடி செஞ்சிட்டே இருக்கிறது தவறான முன்னுதாரணமாயிடும்…
வாழ்க்கையை ரசிக்கணும்னா, சரியான திட்டம் இருக்கணும்..…கடைசி நேரக் குழப்பம் தவிர்க்கப்படணும்… மனஉளைச்சலும் டென்ஷனும் இல்லாம இருக்கும்…இத்தனைக்கும் பிறகும், சில காரணங்களால, திட்டம் போட்டதில சிலது மாறிப்போகலாம்….ஆனா, என்ன செய்யறோம்…? ஏன் செய்யறோம்…? எதுக்காக செய்யறோம்..அது அந்த நேரத்தில் அவசியம்தானா…? அவசரம்தானா….? அப்டீன்றதையெல்லாம் யோசிச்சு செஞ்சா, நிச்சயம் செய்யற விஷயத்துல ஒரு தெளிவு இருக்கும்…..என்ன…? சரிதானேப்பூ…
ம்…எதையும் ப்ளான் பண்ணிச் செய்யணும்னு வடிவேல் வாய்ஸ் காதுல கேக்குதா….? அது காமெடிக்காக மட்டும் இல்லப்பூ….வாழ்க்கைக்கும்தான்…
அடுத்த வாரம் பார்க்கலாம்…

Leave a comment
Upload