தொடர்கள்
கதை
இரகசியம் - முனைவர் என்.பத்ரி

20260631150752516.jpg

பத்மா தன்னைச் சுற்றியும் பார்த்தாள். அவள் இருப்பது ஒரு மருத்துவமனையில் என்பதை உணர அவளுக்கு சிறிது நேரம் வேண்டியிருந்தது.

’நான் எங்கே இருக்கிறேன் எனக்கு என்ன ஆயிற்று? என்று பழைய திரைப்படங்களில் வருவது போலவே வசனங்களை மென்மையான , அதே நேரத்தில் மெதுவான பலகீனமான குரலில் தன் கணவன் மகேஷிடம் கேட்டாள் பத்மா.

கடைசியாக அவள் தன்னுடைய கணவன் மகேஷுடன் அவர்களின் இரண்டு சக்கர வண்டியில் வரும் பொழுதுதான் கண்ணனைப் பார்த்தாள். கல்லூரியில் ஒன்றாக அன்பாகப் பழகி வந்த அவர்களின் கல்யாணத்திற்கு பத்மாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்ல்லை. வேறு வழியின்றி கிராமத்து பெண்ணான பத்மா, பெற்றோரின் ஆணைப்படி தன் மாமாவின் மகன் மகேஷையே மணந்துக் கொண்டாள்.கண்ணனுக்குத் தன் கல்யாணத்தைப் பற்றிக் கூட சொல்ல அவளால் முடியவில்லை.

கல்லூரிப் படிப்பு முடிந்த உடனே கல்யாணமாகி சென்னைக்கு வந்து விளையாட்டைப் போல் ஒரு வருடமாகி விட்டது.நேற்று எதிர்பார்க்காமல் கண்ணனைப் பார்த்த அவள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து கீழே வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்.

’நேற்று மாலை நாம் வண்டியில் வரும் பொழுது எதிர்பாராமல் நீ வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டாய். அங்கு இருந்த ஒரு கல்லில் உன் மண்டையில் அடிபட்டு விட்டது. உடனடியாக நீ மயக்கம் அடைந்து விட்டாய். இரத்தப் போக்கு அதிகமாக விட்டது. நீ தொடர்ந்து மயக்கத்தில் இருந்தாய்.இந்த மருத்துவமனைக்கு ஓர் ஆட்டோவில் அழைத்துவந்து சேர்த்தோம். மருத்துவர் உனக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருக்கவே,இரத்தம் ஏற்றி சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீ இப்போதுதான் உன் கண்னை திறந்து இருக்கிறாய்.’சொல்லி முடித்தான் அவன் கணவன் மகேஷ்.

இப்போதுதான் அவள் நினைவுக்கு மீண்டும் வந்தாள். கண்ணனைப் பார்த்து இவள் கை அசைக்கத் திரும்பும் போதுதான் அவள் கீழே விழுந்திருக்கிறாள்.

‘இங்கு இரத்த வங்கியில் உன்னுடைய இரத்தம் இல்லை.என்று சொன்னார்கள்’சொல்லி முடித்தான் மகேஷ்.

’அப்புறம் என்ன ஆயிற்று?’அவசர,அவசரமாகக் கேட்டாள் பத்மா.

’ நீ அடிப்பட்ட இடத்தில் இருந்த ஒருவருக்கு காய்ச்சல் என்று சொல்லி இங்கு வந்தார்.அவருடைய பிளட் குரூப்பும் உன்னுடைய பிளட் குரூப்பும் ஒன்றேதான். அவர்தான் உனக்கு ரத்தத்தை தானம் கொடுத்தார். உனக்கு உயிரையும் மீட்டுக் கொடுத்தார்’தொடர்ந்து சொன்னான் மகேஷ்.

’எவ்வளவு தேடியும் அவரை பிறகு எங்களால் பார்க்க முடியவில்லை.அவரின் பெயரை மட்டும் ’கன்ணன்’ என்று மருத்துவமனையில் சொன்னார்கள்’என்று மேலும் சொன்னான் மகேஷ்

அதற்குப் பிறகு கண்காணிப்பு கேமராவில் அவருடைய போட்டோவை எடுத்து வைத்திருக்கிறேன். நீ முழுவதுமாக நினைவுக்கு வந்த பிறகு உனக்குக் காட்டுகிறேன்’ என்று சொன்னான் மகேஷ்.

அவளுக்கு, ‘அது யார்?’ என்று தெரிந்து விட்டது.

கல்லூரியில் ஒரு முறை இரத்ததானம் செய்த போது கண்ணனுக்கும், இவளுக்கும் ஒரே பிளட் க்ரூப் என்று அறிய வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.அதனால் அவ்ர்கள் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்று கூட கண்ணன் சொன்னான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு இருந்த தாதியர்,’அவளுக்கு இரத்தம் கொடுத்தது யார்?’ என்று கண்ணனின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். கண்ணன்தான் ரத்தம் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

’கண்ணா’உனக்குத்தான் என் மேல் எவ்வளவு அன்பு? எங்கிருந்தாலும் வாழ்க’என்னும் உன் எண்ணம் எத்தைகைய உயர்வானது.ஏன் நாம் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாது.அதற்கான காலம் வரும்’என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

ஒரு காலத்தில் தனக்கு வாழ்வு கொடுக்க தயாராக இருந்தவன் இன்று உயிரை கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த ரகசியம் இவளுக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும்.இப்போது உங்களுக்கும் தெரியும் ஆனால் மறந்து விடுங்கள்.

தனக்கு ரத்தம் கொடுத்து உயிர் கொடுத்த கண்ணனுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தள் பத்மா.

‘என்ன அதிக யோசனை?’ என்று கேட்டுக் கொண்டே அவளுடைய கணவன் உள்ளே வந்தான்.

இவள்,’ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டே தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.சில இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்க வேண்டும் அல்லவா?அதுதானே எல்லோருக்கும் நல்லது.