
இந்த இலக்கியத் தொடரில், நாம் இதற்கு முன்பே திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் பாடலை பார்த்திருக்கின்றோம்.
இந்த சிற்றிலக்கியத்தின் நயம் மீண்டும்மீண்டும் படித்து இன்புறத் தூண்டுவதாகும்.
குற்றாலக் குறவஞ்சி நாடகத்தின் தலைவியான வசந்தவல்லி, திருக்குற்றால நாதரின் உலாவைக் காண வருகின்றாள். அவளுடைய பேரழகை விவரிக்கும் ஒரு பாடலை இன்று பார்ப்போம்;

பாடல் ;
இருண்ட மேகஞ் சுற்றிச்
சுருண்டு சுழி எறியும்
கொண்டையாள் – குழை
ஏறி யாடி நெஞ்சைச்
சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கின்
அரும்புபோ லிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல் வளைந்து
பிறையைப்போல் இலங்கும்
நுதலினாள்.
வசந்தவல்லியின் கார்கூந்தல், இருண்ட மேகங்கள் ஒன்றுடன் ஒன்று சுருண்டு சுற்றிக்கொண்டு, சுழிந்து கவிந்தது போல் இருக்கிறதாம்.
காது வரை நீண்டு, காண்போர் நெஞ்சினைச் சூறையாடும் கயல் மீன் போன்ற விழிகளைக் கொண்டவளாம்.
.அழகு சிந்தும் முருக்கம் பூவின் அரும்புபோல சிவந்திருக்கும் இதழ்களை உடையவளாம்.
எழில்மிக்க வில்லினைப் போல் வளைந்து ,வடிவில் இளம்பிறையைப் போல் நெற்றியும் அமைந்தவளாம்.
மற்றுமொரு இனிய பாடலுடன்...
அடுத்த வாரம் சந்திப்போம்.

Leave a comment
Upload