வாடகை வீடு

அப்பா என் ஃப்ரெண்டோட ரிலேட்டிவ் நம் பிளாட்டை பார்ப்பதற்கு வருவார்.
நான் ஃப்ரெண்டிடம் எல்லா விவரமும் சொல்லி இருக்கிறேன். அவர்கள் ரெண்டே பேர் தான்.
வேறு பிக்கல் பிடுங்கல் இல்லை.
உங்களுக்கும் பொழுது போவதற்கு தோதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர்களுக்கும் வீடு பிடித்து உங்களுக்கும் அவர்களை பிடித்திருந்தால் முடித்து விடலாம் என்று மும்பையில் இருந்து மகன் மகேஷ் சொல்லக் கேட்ட சந்தானம் அப்பாடா, ஒரு வழியாக வீட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததே என்று மகிழ்ந்தார்.
மறுநாள் மாலை ரங்கனும் அவர் மனைவி கோதையும் வந்தனர். அந்த கம்யூனிட்டியும் ஃப்ளாட்டும் அவர்களுக்குப் பிடித்து விட்டது.
வாடகை அட்வான்ஸ் பற்றிப் பேச ஆரம்பித்ததும் ரங்கன் வாடகை அட்வான்ஸ் ஓகே.
சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது போன்ற மற்ற கண்டிஷன்களும் ஓகே. ஆனால்
பெயிண்டிங்குக்கு என்று தனியாக 50,000 ஏன் என்று கேட்டார்.
சந்தானம் ஸார் என் பையன் வாடகையைக் கூட கொஞ்சம் குறைத்துக் கொள்வான். ஆனால் இந்த பெயிண்டிங் கண்டிஷனில் ரொம்ப கறார்" என்றார்.
ரங்கன் ஸார், நாங்க ரெண்டே பேர்தான். ஒரு வருஷத்துக்குள் நாங்கள் புக் பண்ணி
இருக்கும் புது ஃப்ளாட் ரெடியாகிவிடும். அதனால் எங்களால் உங்கள் ஃப்ளாட்டில்
பெயிண்டிங் கெட்டுப்போக வாய்ப்பில்லை என்றார்.
இது விஷயத்தில் நாங்கள் எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்பதில்லை. காரணம் அவன் சின்னப் பையனாக இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வு தான் என்று பெருமூச்சு விட்டார் சந்தானம்.
தொடர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் தென்காசி பக்கத்தில் ஒரு கிராமத்தில் குடியிருந்தேன் ரெண்டு வருஷம். என் பையன் மகேஷூக்கு ஐந்து வயது. மகளுக்கு மூன்று வயது. நாங்கள் வீடு காலி செய்யும்போது அந்த ஓனரோடு பெரிய பிரச்சினையாகிவிட்டது என் குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி இருப்பதை சுத்தம் செய்து வெள்ளையடிக்க வேண்டும் என்று 5000 ரூபாய் கேட்டார்.
அப்போது எனக்கு அது பெருந்தொகை. எவ்வளவோ கெஞ்சியும் அவர் மசியவில்லை. மேலும் குழந்தைகளையும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். கடைசியில் என் மனைவியின் நகையை முதல் முதலாக பேங்கில் வைத்து பணத்தை கொடுத்தேன்.
இதையெல்லாம் கூடவே இருந்து பார்த்ததால் மகனின் மனதில் ஆழமாகப் பதிந்து
விட்டது. என்ன செய்ய என்றார்.
ரங்கனும் கோதையும் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருக்கவும் இருந்தாலும் உங்களுக்காக மகனிடம் பேசுகிறேன் என்றார் சந்தானம்.
இல்லை ஸார். உங்கள் மகன் கேட்பது சரிதான். அந்த ஓனர் எங்களைப்போலவே குழந்தைப்பேறு இல்லாதவர் போலும் என்று பெருமூச்சுவிட்டு ரெண்டு நாளில் கன்ஃபார்ம் பண்ணுகிறோம் என்று எழுந்து விடை பெற்றார்.
அதுவரை எதுவும் பேசாமல் மௌனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மரகதம் கணவரிடம் ஏங்க, கந்து வட்டிக்காரன் மாதிரி அப்போ 5000 ரூபாயை பிடுங்கிக்கிட்டது நீங்கதான் என்று முகத்தில் அடிக்கிறமாதிரி சொல்லாமல் வாடகைக்கு விட வேறு ஒத்துக் கொண்டிருக்கிறீர்களே!
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஏமாளியாகவே இருக்கப் போகிறீர்களோ என்று அலுத்துக்கொண்டாள்.
அடியே.
ஓய்வு பெற்ற தமிழ் வாத்தியாராகிய நானே இன்னா செய்தாரை ஒறுத்தல்
என்ற திருக்குறளை மறந்து நேரடியாக சண்டை போடுவது தர்மமா?
மேலும் நாம் அவர்களைத் தான் சொல்கிறோம் என்று புரிந்துகொண்டுஅன்று செய்த அந்த பாவம்தான் தங்களுக்கு குழந்தை இல்லை என்று உணர்ந்து வருந்துகிறாரே?
இதற்கு மேலும் அவரை வருத்தப்பட வைப்பது அழகல்லவே என்ற சந்தானத்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் மரகதம்.

Leave a comment
Upload