தொடர்கள்
கல்வி
தொல்காப்பிய சாதனை -மரியா சிவானந்தம்

தொல்காப்பிய சாதனை- உமா மகேஸ்வரி

2026063117220674.jpg

தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் நம் பள்ளி மாணவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருக்குறள் முழுமையாக படித்து, 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம். திருக்குறளை நுணுக்கி எழுதுவது, ஓவியமாக தீட்டுவது என்று தமிழில் ஆர்வம் உள்ளவர் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் .தொல்காப்பியம் முழுமையும் படித்து, மனனம் செய்து அதை சற்றும் பிசகாமல் 22 மணி நேரம் தொடர்ந்து எழுதி சாதனை படைத்துள்ளார் ஒரு மாணவி.

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி உமா மகேஸ்வரி அந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது தமிழ் ஆசிரியர்கள் தந்த பயிற்சியும், ஊக்கமும் இந்த அரிய சாதனையை செய்ய தூண்டுதலாக இருந்தது

திருக்குறள் போல தொல்காப்பியம் எளிதில் மனப்பாடம் செய்யக்கூடிய இலக்கியம் அல்ல. இலக்கியத்துக்கே இலக்கணம் வகுத்த இலக்கணநூல் அல்லவா அது.

மிகவும் தொன்மை வாய்ந்த இந்த இலக்கண நூல் 1610 பாடல்களைக் கொண்டது.எழுத்து.சொல், பொருள் எனப்படும் மூன்று பெரிய அதிகாரங்களைக் கொண்டது.

ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் என்று 27 இயல்களை உட்பிரிவாக கொண்டது.மிகவும் செறிவான நூல் என்பதால் பாடல்களை மனப்பாடம் செய்வது மிகப்பெரிய சவால்.

20260630222833101.jpg

இந்த சவாலை உமா மகேஸ்வரியின் மனதில் விதைத்தவர், அவரது தமிழ் ஆசிரியர்கள் ஜான்சி ராணி மற்றும் ராஜசேகரன். இவர்கள் தந்த பயிற்சியால் தொல்காப்பியத்தை முழுமையாக மனப்பாடம் செய்துள்ளார் உமா மகேஸ்வரி.

தொல்காப்பியம் மனனம் செய்ய இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி எடுத்துள்ளார் .விருதுநகர் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், தமிழ்த்துறை விழாவில் 2024 ஆம் ஆண்டு 'தொல்காப்பியம் முற்றோதல்' செய்தார் .

இவ்வளவு கடின பயிற்சிக்குப் பின் மனப்பாடம் செய்த அத்தனை செய்யுள்களையும் இடை விடாமல் தொடர்ந்து அடி பிறழாமல் எழுதியது அதை விட கடினமான செயல். சென்ற வாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 22 மணி நேரம் எழுதி முடித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே ஆறாம் வகுப்பு படிக்கும் போது உமா மகேஸ்வரி 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து, எல்லா குறள்களையும் 15 மணி நேரத்தில் தொடர்ந்து எழுதி சாதனை படைத்துள்ளார். தமிழ் மேல் உமா மகேஸ்வரி கொண்ட காதலும் , ஆர்வமும்,கவனக்குவிப்பும் நம்மை வியக்க வைக்கிறது.

2026063022291572.jpg

தமிழ் அறிந்த அனைவரும் உமா மகேஸ்வரியை பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகின்றனர். இந்த மாபெரும் இலக்கண நூலை தொடர்ந்து எழுதி தமிழ் மொழியின் சிறப்பையும், செழுமையையும் உலக அரங்கில் பதிய வைத்துள்ளார் உமா. மிகப் பெரிய தமிழரிஞர்களின் பணியை ஒத்த இந்த சாதனை ஒரு சிறுபெண் நிகழ்த்தி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

"தமிழ் என்றென்றும் வாழும்" என்ற நம்பிக்கையை நமக்கு இந்த சிறப்பான சாதனை அளிக்கிறது. அவரது இச்செயல் மென்மேலும் பல மாணவ்ர்களை பிற இலக்கியங்களை மனனம் செய்ய தூண்டுதலாக அமையும்.தமிழன்னை உமா மகேஸ்வரியை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பாள்.

அரசும் , கல்வி நிறுவனங்களும் அவருக்கு உரிய அங்கீகாரம் தந்து, அவரது உயர்கல்விக்கு வேண்டிய உதவிகளும், விருதுகளும் வழங்கும் என்று வாழ்த்துகிறோம்.

ஒரு தொல்காப்பிய பாடல் உங்களுக்காக..

உயிரினங்களை அவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பகுத்து கூறும் பாடல் இது .

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (தொல்காப்பியம்)

மறந்திருந்தால், மீண்டும் படித்து மனப்பாடம் செய்து பாருங்களேன்!.