அத்தியாயம் 3: அம்பையின் கோபம்

சால்வ தேசம் சென்று, பீஷ்மர் தனக்குக் கொடுத்த ஓலையை, அம்பையை அழைத்துச் சென்ற தேரோட்டி அரண்மனை வாயிலில் இருந்த அதிகாரியிடம் கொடுத்தான். அந்த ஓலை மன்னன் சால்வனுக்குச் சென்றது.
அனுப்பியது பீஷ்மர் என்பதால் ஓலையைச் சால்வனால் அவமதிக்க முடியவில்லை. ஆனால், அம்பையை பீஷ்மரிடம் இருந்து கைப்பற்ற அவன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமும் பீஷ்மரால் தவிடுபொடியாக்கப்பட்டதால், அவன் மிகுந்த அவமானம் அடைந்திருந்தான்.
அந்த அவமானம், அவள் மீது இருந்த அன்பை மீறி அவனது அறிவை ஆக்கிரமித்திருந்தது.
அம்பையைச் சென்று பார்த்ததும் சால்வன் கோபமாகக் கேட்டான்:
"இவ்வளவு தூரம் தாண்டி என்னை ஏன் பார்க்க வந்தாய்? உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை!"
"என் மீது ஏன் கோபம் சால்வனே? நம் திட்டப்படி சுயம்வரத்தில் நான் மாலையை எடுத்து உன்னை நோக்கி வந்தேனே! நீ என்னை ஆட்கொள்வாய் என்ற எண்ணத்துடன்தானே! ஆனால், பீஷ்மர் என்னையும் என் தங்கைகளையும் கைப்பற்றியவுடன், நீதானே என்னை அவரிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டும்? நீ முயன்றாலும் உன்னால் அதைச் செய்ய முடியவில்லை. பீஷ்மர் ஒரு மகாரதர் என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நான் பீஷ்மரிடம் நிலைமையை விளக்கிவிட்டேன். நம் தந்தை வயது ஒத்த பீஷ்மர்தான் என் நிலை அறிந்து, என்னை வாழ்த்தி உன்னிடம் அனுப்பினார். என்னை ஏற்றுக்கொள்வதால் உன் புகழ் சிறிதும் குறையாது, மேலும் கூடும்!"
"சீச்சீ! அது என்னால் சத்தியமாக முடியாது. பீஷ்மனால் வெற்றிகொள்ளப்பட்டு, அவனுடைய ரதத்தில் ஏறிய உன்னை என்னால் மணந்துகொள்ள முடியாது. என் நாட்டு மக்கள் எல்லாம் என்னைத் தூற்றுவார்கள். திரும்பி பீஷ்மனிடமே போ!"
அம்பை கெஞ்சிப் பார்த்தாள். தன் காதலனின் காலில் கூட விழுந்து, "இதை நீ அவமானமாகக் கொள்ள வேண்டாம்" என்று வேண்டிக்கொண்டாள். ஆனால், சால்வனின் மனது மாறவில்லை.
கடைசியில் வெகுண்டு எழுந்தாள் அம்பை.
"சால்வனே! உன் மீது உயிரையே வைத்து உனக்காகக் காத்திருந்த என்னைக் காப்பாற்ற தைரியமில்லாத, திறமையில்லாத நீ... உன் கோழைத்தனத்தை மறைத்து, அதை என்னிடம் வெறுப்பாக மாற்றிக் காட்டி அற்பனாகிவிட்டாய்!
நல்ல காலம், உன்னைத் திருமணம் செய்த பின்பு இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் மிகவும் அசிங்கமாகப் போயிருக்கும். கடவுள் என்னைக் காப்பாற்றினார்.
உன்னைப் போன்ற ஒரு உபயோகமற்றவனை அரசனாகக் கொண்டிருக்கும் விதி அமைந்த சால்வ தேசத்துப் பிரஜைகளுக்கு என் அனுதாபங்கள்!"
என்று கூறி, தேரை ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் செலுத்தச் சொன்னாள் அம்பை.
ஹஸ்தினாபுரத்தில் கோலாகலமாகத் திருமணம் நடந்திருந்தது. அம்பிகை, அம்பாலிகை இருவரையும் விசித்திரவீரியன் திருமணம் செய்துகொண்டான்.
சால்வ தேசத்திலிருந்து திரும்பி வந்த அம்பை அங்கு நடந்ததைக் கூறி, தனக்கு ஒரு வழிகாட்டும்படி பீஷ்மரிடம் கேட்க, பீஷ்மர் விசித்திரவீரியனிடம் அம்பையையும் அவனுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார்.
விசித்திரவீரியன் மறுத்துவிட்டான். பீஷ்மருக்கு வேறு வழி இல்லை. ஹஸ்தினாபுரத்தைப் பொறுத்தவரை அவர் வெறும் காரியகர்த்தர்தான். தன் இளைய தம்பியாக இருந்தாலும், மன்னனாக இருந்த விசித்திரவீரியனைத் தான் கட்டாயப்படுத்த தனக்கு உரிமையில்லை என்று உணர்ந்தார்.
விசித்திரவீரியனின் இஷ்டமின்மையை அம்பைக்குத் தெரிவித்தார்..
இப்பொழுது வரை நடந்த எல்லாவற்றையும் தன் குடும்ப கௌரவத்துக்காகவும் சமூகத்துக்காகவும் பொறுத்துக்கொண்டிருந்த அம்பை, இப்போது எல்லாராலும் அலைக்கழிக்கப்படும், வீசியெறியப்படும் ஓர் அற்பப் பந்து போல் உணர்ந்தாள்.
எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்ட அவள், பீஷ்மரிடம் சீறினாள்:
"விளையாடுகிறீரா பெரியவரே? உங்கள் இஷ்டத்திற்கு எங்கள் ஊருக்கு வருவீர்கள், சகோதரிகள் மூவரையும் சிறைபிடிப்பீர்கள்! உங்கள் ஊருக்கு வந்து அரசன் என்று சொல்லிக்கொண்ட ஒரு சிறுவனுக்குக் கட்டி வைக்க முயல்வீர்கள். அவனுக்கு இஷ்டமில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கைகழுவி விட்டுவிடுவீர்கள், இல்லையா? இந்த விளையாட்டுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என் கதி என்ன? என்னுடைய இந்த நிலைக்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு!" என்று உரக்கக் கூறினாள்.
பீஷ்மர் சிறிது நேரம் பதில் சொல்லவில்லை. கடைசியில், "அம்மா! உன்னைத் திருப்பி காசிக்கே கொண்டு போய் உன் அப்பாவிடம் விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.
"பீஷ்மரே! என் தந்தை வீராதி வீரத்தில் சால்வனைப் போன்றவர்தான். அவருக்கு உங்களிடம் பயம்; ஹஸ்தினாபுர சாம்ராஜ்யத்தைப் பார்த்து பயம்; தன் ராஜ்ஜியம், தன் பதவி, தன் மக்கள் என்று யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் பயம்தான்! உங்களிடம் தோற்ற அவர் என்னை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
கேட்டால், 'பீஷ்மர் செய்தது க்ஷத்திரிய மரபுப்படி சரிதான்' என்பார். என்னை உங்களிடமே திரும்பிப் போகச் சொல்வார். வெட்கம்கெட்டு அங்கு போய் ஒரு புழுவைப் போல் உணர நான் இஷ்டப்படவில்லை.
நீங்கள் என் தந்தையைவிட மூத்தவர்தான், வயது முதிர்ந்தவர்தான். ஆனாலும் மாவீரர், புத்திமான். என்னுடைய இந்த நிலைக்குக் காரணமான நீங்கள்தான் இப்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
மனப்பூர்வமாக உங்களுக்கு மனைவியாக இருப்பேன். இதை நான் இப்போது இருக்கும் மோசமான மனநிலையில் சொல்லவில்லை. நான் பிறந்த இந்தச் சமூகம், அரசுகள் எல்லாம் என்னைக் கைகழுவி விட்டாலும், என் முயற்சியால் நிமிர்ந்து நின்று, என் வாழ்க்கை... உங்கள் வாழ்க்கை இரண்டுக்கும் அர்த்தம் உண்டாக்குவேன் என்ற தன்னம்பிக்கையால் சொல்கிறேன். சரி என்று சொல்லுங்கள்!"
பீஷ்மர் உறுதியாகச் சொன்னார்:
"என் வாழ்க்கையின் அர்த்தமோ அனர்த்தமோ... அதற்கு நான் தனிமனிதனாய் பொறுப்பேற்கிறேன். உனக்கு அங்கு இடமில்லை. உனக்கு ஒரே வழிதான் உள்ளது; நீ வேண்டினால் உன் தந்தையிடம் உன்னைச் சேர்ப்பிக்கிறேன்."
பீஷ்மரின் குரலில் கொஞ்சம் ஆணவம் ஒலித்தது; அவர் முயன்றும் அதை அடக்க முடியவில்லை.
அடிபட்ட நாகம் போல் உணர்ந்தாள் அம்பை. மெதுவாக ஏறிய அவளது கோபம் உச்சத்தைத் தொட்டது; மரியாதையும் மாறியது.
"பீஷ்மனே! என் பெண்மைக்கு மரியாதை கொடுக்காத உனக்கு இனி மரியாதை இல்லை. உன்னை அடிபணிய வைப்பதுதான் இனி என் குறிக்கோள்! உன் தயவோடு என் தந்தையிடம் சரணடைய நான் ஒன்றும் ஆடு, மாடு போன்ற சாதாரண வளர்ப்புப் பிராணி அல்ல. உனக்குச் சமமான வீரமுள்ள ராஜகுமாரி அம்பை நான்!
நான் உனக்குச் சவால் விடுகிறேன். நான் உன்னை வென்று, நீயே என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன். இது அம்பையின் சபதம்! பெண் என்றால் அலட்சியம் செய்யும் இந்த மட்டமான சமூகத்தின் நீதியை மாற்றுவேன். திரும்ப உன்னிடம் வருவேன் கிழவனே!" என்று கூறிய அம்பை, அந்த இரவு வேளையில், மையிருட்டில் தனியாகக் கிளம்பிக் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்...
* * * * * *
பீஷ்மர் இந்தத் கதையை விதுரரிடம் நிதானமாக விவரித்து முடித்தார். ஒன்றும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார் விதுரர்.
பீஷ்மர் மெதுவாக ஆரம்பித்தார்:
"இந்த நிகழ்வுக்குப் பின் அம்பையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
விசித்திரவீரியனின் புத்திரர்களும் உன் சகோதரர்களுமான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் காலம் வந்தது. பஞ்சபாண்டவர்களும் துரியோதனாதிகளும் பிறந்தனர்.
பாண்டுவின் மறைவுக்குப் பின், திருதராஷ்டிரன் கண் தெரியாமல் இருந்தாலும் அரசனாக மாறினான்.
பாண்டவர்-கௌரவர்களுக்குள் எப்பொழுதும் சண்டை. பின்னர் சூதாட்டம், திரௌபதி அவமானம், பாண்டவர் வனம் சென்றது வரை அம்பையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
ரொம்ப ரொம்ப வருடங்கள் கழித்து, குருக்ஷேத்திரப் போருக்குக் கொஞ்ச காலம் முன்புதான் அம்பைக்கு என்ன நடந்தது என்பதை ஹஸ்தினாபுர ஒற்றர்கள் வழியாக, ரொம்பத் தற்செயலாக நான் அறிய நேர்ந்தது. அது தெரிந்து நான் துடிதுடித்துப் போனேன். நான் செய்த தவறால், என் ஆணவத்தால், என் சுய கௌரவத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் சீரழித்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
அப்போதே என் செயலுக்குப் பிராயச்சித்தம் தேட எண்ணினேன்; ஆனால், அது முடியவே முடியாது என்று தெரிந்தது.
விதுரனே, உனக்குத் தெரியாதது கிடையாது. நான் சொல்லப்போகும் விஷயம் கௌரவ-பாண்டவர் சேனைகளில் உள்ள எல்லா முக்கியஸ்தர்களுக்கும் தெரியும். முக்கால ஞானியான உனக்குத் தெரியாமல் இருக்குமா?" என்று சிரித்தார்.
"அம்பையைப் பற்றி நான் கேள்விப்பட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன், அவளுடைய மறுபிறவி பற்றிய விவரங்களையும் சேர்த்துதான்" என்று கூறிச் சற்று ஓய்வெடுத்துக்கொண்டார்.
பின்னர், அம்பையின் கதையைத் தொடர்ந்து விதுரரிடம் சொல்ல ஆரம்பித்தார் பீஷ்மர்..
(தொடரும்)

Leave a comment
Upload