தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் முன்னூறு16 - ஜி.ஏ.பிரபா

முகிழும் நாமங்கள் முன்னூறு
16) லதாஞ்சிதா

20260631164027414.jpeg
லலாமராஜதலிகா லம்பிமுக்தா-லதாஞ்சிதா ।
லம்போதர ப்ரஸூர்-லப்யா லஜ்ஜாட்யா லயவர்ஜிதா ॥
அம்பிகையை வர்ணிக்கும் போது, அவளின் உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளது அழகை,மாதுளம் பூ நிறத்தை, அணிந்துள்ள ஆடைகளை, நகைகளை என லலிதா த்ரிசதீ விரிவாக வர்ணிக்கிறது.
அம்பிகை கஸ்தூரிப் பொட்டு விளங்கும் நெற்றியை உடையவள். அதைத் தரித்திருப்பதால் அவளைச் சுற்றி நறுமணமும், அவளது முகத்தை மேலும் அழகாக்கும் குங்குமப் பொட்டும் விளங்குகின்றன.
அழகான முத்து மாலையை அணிந்தவள். முத்து, பவளம், மாணிக்கம் போன்ற
விலைமதிப்பற்ற நவரத்தினங்களை ஆபரணங்களாக அணிந்திருக்கிறாள்.
இந்த உலகமே அவளால்தான் எழில் மயமாய் விளங்குகிறது.
இயற்கையின் ஒவ்வொரு துளியையும் அழகாக்குவது ஸ்ரீ ராஜராஜேஸ்வரியான அந்தப் பேரழகியே. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவள் என்றுதானே அவளைப் பாடுகிறார் அபிராமி பட்டர்!
உவமை சொல்ல முடியாத அழகை மட்டுமல்லாமல் அருளையும் கொண்டவள். ஆயிரம் இதழ்கள் அமைந்த பொற்றாமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகியான தேவி,
நம்முடைய கொடிய வினைகளைப் போக்குவதற்காக நம்மை நோக்கி ஓடி வருகிறாள்.கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை ஒட்டியவா என்கிறார் அபிராமி பட்டர்.
சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு நடராஜப் பெருமான் மிக முக்கியமானவர். (தாளம்/ஒழுங்கு) இல்லாமல் அப்பெருமானின் ஆட்டம் நடக்காது. அந்த லயத்தை உண்டு செய்பவள் அம்பிகையே. எப்பொழுதும் ஐயனிடமிருந்து பிரியாமல் அவனுடைய வாம பாகத்தில் (இடப்பக்கத்தில்) இருப்பவள்.
தேவியை வணங்கும்போதே அவளுடைய அழகு மட்டுமல்லாமல், அருட்பெருக்கையும் பிற பெரு மகிழ் பெருமைகளையும் நம் மனம் அசை போட ஆரம்பித்துவிடும்.
சூரியன் உதிக்கும் பொழுது முதலில் திசைகள் வெளுத்துக் காணப்படும்; கீழ் வானம் மட்டும் சிவக்க்கும். அதன் பிறகு எங்கும் ஒரே ஒளி வெள்ளம் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு செஞ்சோதிப் பிழம்பு அம்பிகையின் உருவம்.
அதை எப்படிச் சொல்வது?
குறிப்பிட்ட இந்த வகையில் மட்டுமே அவளது அழகு உள்ளது என்று வரையறுத்துச்
சொல்ல முடியாத ஜோதி மயமானவள். முற்றிலும் செவ்வண்ண ஜோதியானவள். உலகின் உயிர்த் தன்மையையும், நிறைவையும், நேர்மையையும், அழகையும் குறிக்கும் வண்ணம் அது.
அம்பிகை பரிபூரணப் பொருளாக, நேர்மையே உருவாகக் காட்சியளிக்கிறாள். எனவேதான், உத்யத்பானு ஸஹஸ்ராபா" என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
உதிக்கின்ற செங்கதிர் போல்" அம்பிகை இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர்.
சூரியன் உலகின் இருளை ஓட்டுவது போல், அம்பிகை நம் அஞ்ஞான இருளை ஓட்டுகிறாள்.
முழுமுதற் கடவுளான, மூத்தவனான, லம்போதரனான மகாகணபதியைப் பெற்ற தாய்.
அன்னை பண்டாசுரனை அழிக்கப் புகுந்த காலத்தில், பண்டாசுரனால் ஏவப்பட்ட வினைகளை
நீக்கும் விக்னேஸ்வரனாக வந்து துணை நிற்கிறார் கணபதி.
இதையே மகாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா என்கிறது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்.

அம்பிகையே சரணம்" என்று அவளை அண்டியவர்களால் அடையத் தக்கவள். தாயே
என்று தன்னைச் சரணடைந்தவர்களைத் தாங்கி, பிடித்து உயர்த்த அவளால் மட்டுமே முடியும்.
நாணம் என்னும் செல்வம் படைத்தவள். பெண்களின் மிக முக்கியமான குணம் நாணம்; அது
அவளிடம் பரிபூரணமாக இருக்கிறது. இந்த உலகத்தின் படாடோபத்தையும், தானே சகலமும் செய்தேன் என்று மார்தட்டிக்கொள்ளும் மனிதர்களையும் பார்த்து வருத்தப்படுகிறாள்.
இவர்களையா நாம் படைத்தோம்? தன்னை உணர்தல் என்ற அறிவு இல்லையே; என்று வேதனைப்படுகிறாள். வெஎட்கப் படுகிறாள்.
அம்பிகையைத் தரிசித்தால் நம் நடுக்கம் நீங்குகிறது. அம்பிகையின் உதயத்தால்
நம்முடைய இதயத் தாமரைகளும் மலர்கின்றன. ஜனன-மரணக் குழப்பங்களிலிருந்து நீங்கி,தாயின் பாத கமலங்களையே பிடித்துக் கொண்டால் போதும். "உதிக்கின்ற செஞ்சுடர் என்றாலும் சூரியன் நாம் அழைத்ததும் வருவதில்லை; ஆனால் அம்பிகை, அம்மாஎன்றால்
ஓடி வருவாள். தன் குழந்தையின் அவலக் குரல் கேட்டு ஓடிவருபவள் அன்னையல்லவா!
அவள் அழிவற்றவள், நிரந்தரமானவள். தன்னிடம் ஐக்கியமாகும் ஜீவன்களுடன்
நிலையாக வாழ்பவள் அம்பிகை. அவளுடைய பாதங்களைக் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டால் போதும்;

அவள் நம்மைக் கடைத்தேற்றி விடுவாள்.