தூத்துக்குடிக்கு ஒரு விசிட் அடித்தோம் இந்த கடற்கரை நகரை சுற்றி மாதாவின் அற்புத கோயில்கள் வீற்றிருக்கின்றன .
முதலில் நாம் சென்ற ஆலயம் அற்புத பனிமய மாதா பேராலயம் .

உலக பிரசித்தி பெற்ற பேராலயமான வேளாங்கண்ணி பேராலயத்திற்கு அடுத்து மிக முக்கியமான புண்ணிய ஸ்தலம்
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத பக்தர்கள் சுற்றுலா பயணிகளை வந்து போகுமிடமாக கருதப்படுகிறது .
பேராலயத்தினுள் நுழைந்தவுடன் அனைவரையும் ஈர்த்து அருகில் அழைத்து செல்வது அன்னை மரியாளின் அற்புத சுரூபம் தான் .
அன்னை மரியாள் குழந்தை ஏசுவை தன் கரத்தில் ஏந்தி மாதுளை பழம் ஒரு கரத்தில் பிடித்திருப்பது இந்த அற்புத சுருபத்தின் முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது .

கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாக 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்ட ஆலயம் .
1982 ஆம் ஆண்டு இந்த கோயிலின் 400 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அன்றைய போப் இரண்டாம் அருள்சின்னப்பர் இத்திருத்தலத்தை பேராலயமாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
1535 முதல் 1537 வரை முத்துக்குளித்துறை பரதவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வர அவர்களுக்கு என்று தனி ஆலயம் இல்லாமல் இருக்க 1538 ஆம் வருடம் அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் புனித பேதுரு ஆலயம் ஒன்றை கட்டினார் .
இந்த ஆலயத்தில் தான் அன்றைய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருப்பலிக்கு சென்று வந்தனர் .
பின்னர் ஏசு சபை குருக்கள் வந்து தங்களின் தலைமை இல்லத்தை செயின்ட் பால் கல்லூரி என்று பெயர் சுட்டி அழைத்தனர் . அங்கு கட்டின ஆலயம் சம்பவுல் ஆலயம் என்று அழைக்கப்பட்டது .
1555 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி அற்புத மாதாவின் சுரூபம் மரபேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்ததாம் .
பின் இந்த ஆலயம் மரியன்னை ஆலயமாக மாறியது 1582 ஆம் ஆண்டு . ரோமாபுரியில் உள்ள பனிமய மாத பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த ஆலயம் பனிமய மாத ஆலயம் என்று அர்ச்சிக்கப்பட்டது அன்றே தூத்துக்குடி பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு அன்றில் இருந்து இன்று வரை அதே நாளில் ஆண்டு விழா சிறப்பிக்க படுகிறது .

இந்த அற்புத ஆலயம் 1603 ஆம் ஆண்டு கயத்தாறு குறுநில மன்னன் வெட்டும் பெருமாள் படையுடன் வந்து தூத்துக்குடியை தாக்கி பனிமய மாத ஆலயத்தை இடித்து நெருப்பு வைத்து தகர்தான் . காரணம் தூத்துக்குடி மக்கள் மதுரை நாயக்கருக்கு குறித்த காலத்தில் வரி செலுத்தாதல் இந்த அழிவை குறு நில மன்னனோடு சேர்ந்து மேற்கொண்டானாம் .
இந்த கொடூரத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தூத்துக்குடி வைப்பாறு , வேம்பாறு , ஊர்களின் மக்கள் இயேசு சபையினரும் 1604 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள ராஜா தீவில் குடியேறினர் அங்கு பனிமய மாதாவிற்கு புதிய ஆலயத்தை காட்டியெழுப்பினர் .
மக்கள் தங்களோடு எடுத்து வந்த பனிமய மாத அற்புத சுரூபத்தை அந்த ஆலயத்தில் வைத்து வழிபட்டனர் .
1609 ஆம் ஆண்டு கொச்சி பிஷப் மக்களை அந்த தீவில் இருந்து வெளிவந்து நில பகுதியில் குடியேற கூறினார் . இடிந்து எரிந்த ஆலயத்தை மீண்டும் 1621 ஆம் ஆண்டு காட்டியெழுப்பி அங்கு மாதாவின் அற்புத சுரூபம் வைக்கப்பட்டது .
1655 ஆம் ஆண்டு டச்சு படை போர்த்துகீசிய படையை தோற்கடித்து தூத்துக்குடியை கைப்பற்றி முத்துகுளித்துறை முழுவதும் டச்சு ஆதிக்கத்தின் கீழ் வர அவர்கள் தூத்துக்குடியை சுற்றி கோட்டை சுவர் எழுப்பினர் அதில் பனிமய மாத ஆலயமும் சிக்கிக்கொண்டதின் விளைவு டச்சு ஆளுகை தங்களின் கால்வீனிய வழிபாட்டு ஸ்தலமாக மாற்றினார்கள் உடனே மக்கள் பனிமய மாத சுருபத்தை சிவந்தாக்குளம் , கொற்கை போன்ற இடங்களுக்கு எடுத்து சென்று பாதுகாத்து வர மக்கள் தங்களின் வழிப்பாட்டு முறைக்கு வர மறுப்பதால் மாதா ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கினார்கள் 1695 ஆம் ஆண்டு இரவோடு இரவாக பனிமய மாத ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அந்த இடத்தை கல்லறை தோட்டமாக மாற்றினார்கள் . இன்று வரை " கிரகோப்" [ கல்லறைத்தோட்டம்] என்று அழைக்கப்படுகிறது.

1699 ஆண்டு டச்ச்சு ஆளுமை இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதி வழங்கினர் .அப்பொழுது தூத்துக்குடி பங்கு குருவாக இருந்த இயேசு சபை குரு விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி புனித லொயலா இஞ்ஞாசியார் பெயரால் ஒரு குடிசைக்கோவிலும் பங்கு இல்லமும் அமைத்து பணி செய்துவந்துள்ளார் . பின்னர் இடித்து தள்ளப்பட்ட கிரகோப் கல்லறை தோட்டத்தில் சிறிய பங்கு இல்லம் அமைத்து தங்கி சீர்குலைந்து போன புனித இராயப்பர் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினார் .
நாடோடியாக வலம் வந்த பனிமய மாதாவின் சுருபத்தை மீண்டும் எடுத்து வந்து தன் பங்கு இல்லத்தின் மேல்மாடியில் அலமாரி அமைத்து பாதுகாப்பாக வைத்து வழிபட்டு வந்தார் .
1707 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் கடும் மழை கொட்டிகொண்டேயிருக்க பாதர் விஜிலியுஸ் அன்னையின் சுரூபம் முன் மண்டியிட்டு ஜெபிக்க அவ்வில்லத்தின் கூரையை கிழித்துக்கொண்டு பயங்கரமான இடி பனிமய மாதா சுருப்பதின் மீது இடி விழ பாதர்அதிர்ச்சியில் உணர்வற்று போய் பின் நினைவு திரும்பியவுடன் மாதாவின் சுருபத்தில் இடி விழுந்தும் அது யாதொரு சேதமும் ஏற்படாமல் அப்படியே இருந்துள்ளது .

இடியின் கந்தகப்புகையால் அது கரு நீல நிறமாக மாறியிருந்ததாம் .
அதே சமயம் மாதாவின் சுருபத்தின் முன் நின்று கொண்டிருந்தும் பாதர்
விஜிலியுஸ் இடியிலிருந்து உயிர்தப்பிய அதிசியம் நடக்க இது அன்னை மரியாள் செய்த அற்புதம் என்று நம்பினார் .
அங்கு விழுந்த இடியால் சுவரில் தொங்கின படங்கள் கதவு நிலை உடைந்து சேதமாகின . இதை நம்பின பாதர் இடியினால் கறைபடிந்த சுருபத்தை மாடியில் இருந்து இறக்கி ஆலயத்தில் வைத்து மக்கள் ஜெபிக்க செய்து மாதாவுக்கு கற்கோவில் கட்ட முயற்ச்சி எடுத்து டச்சு ஆளுமை மறுக்க கொழும்பிலிருந்து டச்சு ஆளுநருக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அடிக்கல் நாட்டி ஒரே ஆண்டில் ஆலயம் கட்டப்பட்டு கூரை கனரா ஓடுகள் பொருத்தப்பட்டு 1713 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனிமய மாத திருவிழா அன்று கொச்சி மாநிலத்தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் பெரைரா இப்புதிய ஆலயத்தை அர்ச்சித்து திறந்துவைத்தார் .
அன்று தான் முதல் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது .
அன்றிலிருந்து இன்று வரை அதே நாளில் ஆண்டு திருவிழா நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

பனிமய மாதா என்று எப்படி பெயர் வந்தது என்றால் அன்னை மரியாளுக்கு உலகிலேயே முதன் முறையாக ரோம் நகரில் அன்றைய போப் லிபேரியுஸ் மற்றும் அருளப்பர் என்ற செல்வந்தருக்கு மரியாள் காட்சி தந்து பனி பெய்யவே முடியாத கோடைகாலத்தில் பனி பெய்ய செய்து தனக்கு ஆலயம் அமைக்க வேண்டி இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார் அதன் படி எஸ்கலின் என்ற குன்றின் மேல் கி பி 352 ல் ஆலயம் அமைக்கப்பட்டது .
அதன் பின் உலகின் பல பகுதிகளில் பனிமய மாதா ஆலயங்கள் கட்டப்பட்டன . அதே போன்ற ஒரு சுரூபம் தான் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது .

(எஸ்கலின் ஆலயம் ரோம் )
மேலும் எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட அன்னையின் ஆலயமும் அர்ச்சிக்கப்பட்டது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தான் . அதனால் தான் இந்த ஆலயமும் தூய பனிமய மாதா ஆலயமும் என்று அழைக்கப்பட்டது.
இந்த பிரசித்திபெற்ற பேராலயத்தில் மிகவும் புகழ்பெற்ற அழகிய விஷயம் தங்கத்தேர் பவனி அன்னை பனிமய மாதாவின் அற்புத சுரூபம் தூத்துக்குடிக்கு வந்தடைந்த 250 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் 1806 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி முதன்முதலில் துவங்கியது .

வருடந்தோறும் தங்க தேர் பவனி நடைபெறுவதில்லை வரலாற்று மற்றும் பேராலயத்தின் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் வருடத்தில் ஆயர்களின் உத்தரவின் பேரில் தேர் பவனி நடைபெறும் .
கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16 வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற்றது .
இந்த தங்க தேர் 1.50கோடி மதிப்பில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது .
மாதாவின் ஜெபமாலையை நினைவுகூரும் வகையில் 53 அடி உயரத்தில் தங்க தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது .
பேராலயத்தின் பீடத்தில் வீற்றிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க அற்புத மாதாவின் சுரூபம் தங்க தேர் பவனியின் போது மட்டும் எடுத்து வரப்படுகிறது .
தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கிறது .
அன்னையை சுற்றி ஒன்பது கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் ஒன்பது மீன்கள் உள்ளன .
பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் அன்னையிக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளது .
இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் விதத்தில் 12 தூண்கள் உள்ளன . மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித தலையும் மீன் உடலும் கொண்ட கடல் கன்னிகளின் உருவமும் இரண்டு காளைகளும் பொருத்தப்பட்டுள்ளன .
தேர் முழுவதும் பல்வேறு ரத்தின கற்களாலும் அலங்கரிக்கப்படும் .

இந்த சிறப்பு தேரில் 53 ஜெபமாலை மணிகளை குறிக்கும் வகையில் 53 சுரூபங்கள் இடம் பெரும் .
தேரில் 6 சக்கரங்கள் இறைவனின் கட்டளைகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
செயற்கை வைர கற்கள் வண்ணக்கண்ணாடிகள் , பாசிமணிகள் , வெல்வெட் துணி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட காகிதங்கள் பொருத்தி தங்க தேர் உருவாக்கப்படுகிறது . தங்க தேரில் தங்க முலாம் பூசும் பணி அலங்காரங்கள் திருவிழாவிற்கு இரண்டு மாதத்திற்கு முன்னே துவங்கும் இதற்காக சிறப்பு திருப்பலி , ஜெபமாலை வழிபாடு நடைபெரும். இந்த சிறப்பு நிகழ்வை போப் ஆண்டவரின் இந்திய தூதர் தான் துவக்கி வைப்பார் .
இந்த தங்க தேரை காண இலங்கை , சிங்கப்பூர் , மலேஷியா லண்டன் , அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிலிருந்து பக்தர்கள் வருவது சிறப்பான ஒன்று.
முதல் தங்க தேர் 1720 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டது . 1806 முதல் தங்க தேர் பவனி நடைபெற்றது பின்னர் 16 வருடம் பேராலயத்தின் முக்கிய நிகழ்வின் போது நடைபெற்றுள்ளது .
கடந்த 2023 தங்க தேர் பவனி நடைபெற்றது , அடுத்த தங்க தேர் எப்பொழுது என்பது இது வரை முடிவுசெய்யப்படவில்லையாம் .

கடந்த ஞாயிற்று கிழமை 26 ஆம் தேதி 444 வதுஆண்டு விழா கொடியேற்றம் மிக சிறப்பாக நடைபெற்று 11 நாள் விழா துவங்கியது .
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆண்டு விழா மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது . ஏராளமான பக்தர்கள் பனிமய மாதாஆலயத்தை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள் .

Leave a comment
Upload