
தமிழ்நாட்டில் சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையின் மீது 81 அடி உயர இராஜகோபுரத்துடன் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக, சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த சேர சிற்றரசர்கள், அந்தக் கோட்டையில் மாரியம்மனைப் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வந்தனர். சேர சிற்றரசர்கள், போருக்குப் புறப்படும் முன்னர் கோட்டை பெரிய மாரியம்மனை வணங்கி, வெற்றிகளைப் பெற்றதாகச் சொல்வதுண்டு. அன்று முதல் சேலத்தின் காவல் தெய்வமாக, கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோயில்களில் கோட்டை மாரியம்மன் முதன்மையானது. எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப் பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்னும் சிறப்புப் பெயர் இந்த மாரியம்மனுக்கு உண்டு.
இக்கோயிலின் கருவறை மற்றும் மூலவர் சிலை தமிழ்நாட்டிலேயே மிகச் சிறிய அமைப்பைக் கொண்டவற்றுள் ஒன்றாகும். நைவேத்தியம் இங்கு மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம்.

கோட்டை பெரிய மாரியம்மனின் திருக்கோலம்:
அம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜுவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம், படம் எடுப்பது போன்ற அமைப்பில் உள்ளது. அம்மன் நான்கு கரங்களுடன், வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அம்மன் தனது வலது காலைத் தொங்கவிட்டு, அதன் மீது இடத்துக்காலை யோகாசனமாக மடித்து, சிவசக்தியாகப் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் தன்னைத் தேடி வருவோர்க்கு அருள்பாலித்து வருகிறாள்.

ஆடிப்பெருந்திருவிழா:
ஆண்டுதோறும் இக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். இவ்விழாவில் பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடிப்பெருந்திருவிழா - 2026:
சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா 15 நாட்களுக்கும் மேலாக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இவ்வாண்டு ஆடிப் பெருந்திருவிழா சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு கோயில் வளாகத்தில் பாரம்பரிய கம்பம் நடும் வைபவம் மற்றும் கூழ் காய்ச்சிப் படைத்தலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கம்பம் நடும் நிகழ்வையொட்டி அம்மனுக்குப் பிரத்தியேக திருக்கல்யாண அலங்காரமும் செய்யப்பட்டது. இத்திருக்கல்யாண அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஜூலை 29-ஆம் தேதி (புதன்கிழமை) பௌர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜையும், காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்றன.
அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமயமான மகா தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 3 (திங்கள்) ஆடி 18 சிறப்புப் பூஜை மற்றும் இரவு 8.00 மணிக்குச் சக்தி அழைப்பு.
ஆகஸ்ட் 4 (செவ்வாய்) காலை 8.00 மணியளவில் சக்தி கரகம் எடுத்தல்.

ஆகஸ்ட் 5 (புதன்) பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் உருளுதண்டம் (கோயிலைச் சுற்றி உருண்டு வருதல்) ஆகிய வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
(அன்று சேலம் மாவட்டத்திற்கு அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது). இந்த உள்ளூர் விடுமுறை தினத்தில் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக, ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாகச் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7 (வெள்ளி): காலை 8.00 மணியளவில் கோலாகலமான தேரோட்டம் நிகழ்ச்சி (தேர்த் திருவிழா) அலங்கரிக்கப்பட்ட பெரிய மரத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி, சேலத்தின் முக்கிய வீதிகளான பட்டை கோவில், சின்ன கடைவீதி, மற்றும் முதல் அக்ரஹாரம் வழியாக வீதி உலா வருவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.
ஆகஸ்ட் 8 (சனி) அதிகாலை பவானி கூடுதுறை ஆற்றில் கம்பம் சேர்த்தல் விழா.
ஆகஸ்ட் 9 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8:00 மணி: சாத்தாபரணம் மற்றும் கம்பம் ஆற்றில் விடுதல்.
ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணி: பால்குட ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா(திருவிழா நிறைவு).

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் மதியம் 12:00 முதல் 2:00 வரை அம்மனுக்கு மகா அபிஷேகங்கள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
இக்கோவிலின் தனிச்சிறப்பாக, சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் கூட நடை சாத்தப்படாமல் அம்மனுக்குத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.
வழிபாட்டுப் பலன்கள்:
சேலம் கோட்டை மாரியம்மனைச் சென்று வழிபடுவதால்
குழந்தைப்பேறு, அனைத்து பிணி நீங்குதல், எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபட்டு மன அமைதி உண்டாகிறது.

எப்படிச் செல்வது:
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் அல்லது டவுன் பஸ் ஸ்டாண்ட் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் இக்கோயில் வழியே செல்லும். சேலம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து டவுன் பஸ், ஆட்டோ
வசதிகளும் உள்ளது.
சேலம் கோட்டை மாரியம்மன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக...!!


Leave a comment
Upload