
மதுரை ஹாஜிமார் தெரு,
அல்லிபாத்திமா ஒண்ணேகால் கிலோ பூண்டை சாறு பிழிந்தாள். 600கிராம் இஞ்சியை சாறு பிழிந்தாள். 400மில்லி ஆப்பிள் வினிகருடன் சேர்த்து கொதிக்க வைத்தாள். பின்மிதமான சூட்டில் 45நிமிடம் வைத்தாள். பின் அதனை இரண்டு லிட்டர் தேனுடன் கலந்து இருதய அடைப்புகளை நீக்கும் பானம் தயார் செய்தாள்.
மகன் நிஜாமுத்தீனும் மருமகள் அர்ஷியாவும் நான்கு வயது பேரன் பிலாலை ஸ்பீச்தெரபிக்காகவும் ஆக்குபேஷனல் தெரபிக்காகவும் அண்ணாநகருக்கு அழைத்து சென்றிருந்தனர்,
மகன் அவனது மனைவி மகன் மகளுடன் கனடாவில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வசதியாய் இருந்தான். பாழும் கொரோனாவினால் வேலை இழந்து இந்தியா திரும்பிவிட்டான். ஹைதராபாத்தில் ஆறுமாதம் தங்கி வேலை தேடியவன் வேலை கிடைக்காமல் பிறந்த ஊரான மதுரைக்கு திரும்பி விட்டான். பேரன் பிலாலுக்கு நான்கு வயதாகிறது. இன்னும் அவனுக்கு பேச்சு வரவில்லை. ஆட்டிஸம் இருக்குமோ என்கிற சந்தேகம் தலைவிரித்து ஆடியது.
ஒரு பெண் மருத்துவர் மூலம் ஸ்பீச்தெரபிஸ்ட் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டை அணுகினர். கடந்த இரண்டு மாதங்களாக பேரனை தூக்கிக்கொண்டு தினமும் தெரபிக்கு ஸ்கூட்டியில் இருபது கிமீ போய் வருகின்றனர்.
ஏற்கனவே குக்கரில் சாதம் வைத்து முட்டை குழம்பும் வைத்துவிட்டாள் அல்லி பாத்திமா. ஸ்கூட்டி சப்தத்துக்காக காத்திருந்தாள்.
வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
அதிலிருந்து தடுமாற்றமாய் மகன் மருமகள் பேரன் இறங்கினர். மூவர் உடலிலும் இரத்த காயங்கள் பதறி சிதறி ஓடினாள் அல்லிபாத்திமா.
“என்னடாச்சு நிஜாம்? என்னம்மாச்சு மருமகளே?”
பேரனை வாங்கி ஆராய்ந்தாள். கீழுதடு கிழிந்து இரத்தம் கொட்டியிருந்தது.
“ஆக்ஸிடென்ட் ஆய்ருச்சும்மா. ஒரு கார்காரன் வந்து எங்க ஸ்கூட்டி மேல மோதிட்டான். கவிழ்ந்து சிதறிட்டம். மோதிட்டு கார்காரன் ஓடிட்டான்!”
“அடப்பாவி!”
“பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரில காட்டி என் காயங்களுக்கு மருந்து போட்டு டிடி இன்ஜெக்ஷன் எடுத்துக்கிட்டேன். உங்க மருமகளுக்கு ஊமை காயம். உங்க பேரனின் உதட்டு காயத்துக்கும் மருந்து போட்டுட்டோம். மெக்கானிக்குக்கு போன் பண்ணி ஸ்கூட்டியை ரிப்பேருக்கு எடுத்துட்டு போக சொல்லிட்டம்!”
கார்காரனை மென்மேலும் சபித்தாள் அல்லிபாத்திமா.
கைத்தாங்கலாக மகனையும் மருமகளையும் வீட்டுக்குள் அழைத்து சென்றாள். குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.
“ஏம்ப்பா நிஜாமுத்தீன்… இந்த ஒரு வருஷமாகவே உனக்கும் உன் குடும்பத்துக்கும் பிரச்சனை மேல பிரச்சனையா வருதே… இன்னும் என்னென்ன வர காத்திக்கிட்டு இருக்கோ? பேசாம வர நாயித்துக்கிழமை நம்ம வீட்ல ஸலாத்துன் நாரியா ஓது வோமா?”
“ஸலாத்துன் நாரியா என்றால் என்ன அம்மா?”
“ஸலாத்துன் நாரியாவை நெருப்பு ஸலவாத்து என்பார்கள். இதனை ஓதினால் நம் பிரச்சனைகள் எல்லாம் பொசுங்கி சாம்பலாகிவிடும். பதினோரு நபர்கள் வைத்து 4444தடவை ஓத வேண்டும். ஸலாத்துன் நாரியா என்றால் நபிகள் நாயகத்தின் புகழ் பாடுவதாகும். ஸலவாத் ஒரு பொக்கிஷம் இதில் நன்மைகளும் பரக்கத்தும் கிடைக்கின்றன. அல்லாஹ் செய்யும் ஒரே அமல் ஸலவாத்துதான். ஸலவாத்து கூறினால் பத்து நன்மைகள் கிடைக்கும் பத்துதீமைகள் ஒழியும் பத்து அந்தஸ்துகள் உயரும். நாள் முழுவதும் ஸலவாத் கூறினால் கவலை அகன்று பாவம் மன்னிக்கப்படும். மறுமைநாளில் நபிகள் நாயகத்தை மிகவும் நெருங்கியவர் அவர் மீது அதிகம் ஸலவாத்து சொன்னவரே. அல்லாஹ்வின் புதையல் ஸலவாத்து!”
“அம்மா நீ சொல்ல சொல்ல ஸலாத்துன் நாரியா மீதான ஆர்வம் நூறுமடங்காய் கிளைக்கிறது!”
“ஸலாத்துன் நாரியாவை கோர்வை செய்து எழுதியவர் ஆரிபுபில்லாஹ் செய்யது இப்ராஹீம் அத்தாஸு ரஹ்மத்துல்லாஹி ஆவார். சூழ்ந்திருக்கும் கஜானாவின் திறவுகோல் ஸலாத்துன் நாரியா. ஒரு நாளைக்கு 41தடவை இதனை ஓதினால் ரிஸ்க்கு தேடிவரும். 41லிருந்து நூறுமுறை ஓதினால் துயரம் அகலும். செல்வந்தன் ஆக பர்லான தொழுகைக்கு பின் 11தடவை ஓத வேண்டும். சுகப்பிரசவமாக ஸலாத்துன் நாரியாவை ஒரு பீங்கான் தட்டில் எழுதி கரைத்து குடிக்கவேண்டும். வழக்கமாக ஓதினால் நபிகள் நாயகத்தை கனவில் காணலாம். உலகம் முழுவதும் ஈமானிய முஸ்லிம்கள் ஸலாத்துன் நாரியாவை விடாது ஓதி வருகின்றனர். நம் வீட்டிலும் ஓதினால் உனக்கு வேலை கிடைக்கும் விபத்துகள் ஏற்படாது கண்ணேறுகள் அகலும் எல்லாவற்றையும் விட முக்கியமாக உன் மகன் பேசுவான்!”
“ஸலாத்துன் நாரியாவை ஓதுவதற்கான ஏற்பாடுகளை செய் அம்மா!”
“நம்ம சாகுல்ஹமீது ஜலாலி உஸ்தாத்கிட்ட சொல்லி அவரோட சேத்து பதினோரு பேரை ஸலாத்துன் நாரியா ஓத காலை 11மணிக்கு வர சொல். ஒரு சமையல்காரரை வச்சு நெய் சோறு மட்டன் குழம்பு தால்ச்சா தயிர்பச்சடி ஒரு அம்பது பேர் சாப்பிடுறமாதிரி தயார் பண்ணிடுவோம். பூந்தி பாக்கட் நூறு வாங்கிடுவம். ஓதுறவங்க வீட்ல சாப்பிடட்டும். மீதி சாப்பாட்டை அக்கம் பக்கத்து உறவினர்களுக்கு கொடுத்து விடுவோம். சமையல் செலவு பத்தாயிரம் ஆகும். ஓதுறவங்களுக்கு தலைக்கு முன்னூறு ரூபா கொடுக்க வேண்டிவரும்..”
“சரிம்மா… அப்படியே செய்றேன்..”
“இப்ப நீங்க மூணுபேரும் சாப்டுட்டு ஓய்வெடுங்க..” என்றாள் அல்லிபாத்திமா. “யா அல்லாஹ்! என் மகனின் வாழ்க்கையில் எல்லா பலாய் முஸிபத்துகளை போக்குவாயாக!” கண்ணீர் மல்க வேண்டினாள்.
ஞாயிற்றுக்கிழமை. அல்லிபாத்திமா முழுவீட்டையும் கழுவி சுத்தம் செய்தாள். வாசலில் அண்டாவை வைத்து சமையலில் ஈடுபட்டிருந்தார் சமையல்காரர் நீலகண்டன். வெங்காயத்தையும் தக்காளியையும் இஞ்சியையும் நறுக்கிக் கொண்டிருந்தாள் மேரி. இரண்டு கிலோ பூந்தி வாங்கி நூறு சிறு பொட்டலங்கள் போட்டுக் கோண்டிருந்தான் நிஜாமுத்தீன்.
அர்ஷியாவுக்கு இடதுகை வீங்கியிருந்தது. அதனுடனேயே மகன் பிலாலை குளிக்க வைத்து புத்தாடை உடுத்திவிட்டாள் அர்ஷியா.
பத்தேமுக்கால் மணிக்கு சாகுல்ஹமீது ஜலாலி தனது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தார். ஆளுக்கொரு தஸ்பீஹ் மணி மாலை வைத்திருந்தனர்.
பதினோரு பேரும் வட்டம் அமைத்து அமர்ந்தனர்.
நிஜாமூத்தீன் கொத்து ஊதுபத்திகளை கொழுத்தி வைத்தான்.
மிகச்சரியாக பதினொரு மணிக்கு ஸலாத்துன் நாரியா ஓத ஆரம்பித்தனர்.
ஆளுக்கு 400முறை.
சாகுல்ஹமீது ஜலாலி முதலில் ஓதினார். “இறைவா! எங்கள் தலைவர் அண்ணல் நபிகள் நாயகத்தின் மீது பூரணமாக ஸலவாத்தையும் நிறைவான ஸலாமையும் சொல்வாயாக! அந்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பொருட்டால் முடிச்சுகள் அவிழும்: கஷ்டங்கள் அகலும் : தேவைகள் நிறைவேறும் : ஆசைகள் பெற்று கொள்ள வரும் : நல்ல முடிவுகள் கிட்டும் : சிறப்பான அண்ணார் திருமுகத்தின் பாக்கியத்தால் மேகங்கள் மழை பெய்விக்கும். அன்னார் குடும்பத்தினர் தோழர்கள் மீது வினாடிகள் தோறும் இறைவா நீயே அறிந்திருப்பவற்றின் எண்ணிக்கைக்கு நிகராக ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!”
ஸலாத்துன் நாரியா ஓதஓத தஸ்பீஹ் மணி மாலைகள் உருட்டப்பட்டன. ஓதுபவர்கள் இடமும் வலமும் ஆடினர். அவர்களின் கண்கள் ஏகாந்தத்தில் நட்டுக் கொண்டன.
ஸலாத்துன் நாரியா ஓத ஓத வார்த்தைகளில் புனிதம் தொற்றிக் கொண்டது. முடிச்சுகளை அவிழ்க்கும் நைச்சியமும் நோய்களை தீர்க்கும் மருந்துகளும் ஆயிரம் பூட்டுகளை திறக்கும் சாவிகளும் தோன்றின. கண்ணேறுகள் பட்பட்டென்று எரிந்து சாம்பலாகின. விபத்துகள் தோன்றும் சாத்தியங்கள் மறைந்தன. ட்ரில்லியன் பூக்கள் பூத்தன. நபிகள் நாயகம் தன் மீது சொல்லப்பட்ட ஸலவாத்துகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார்.
நிஜாமுத்தீனுக்கு ஏழெட்டு வேலை வாய்ப்புகள் தோன்றின. பிலாலின் நாக்கில் எழுத்துகள் எழுதப்பட்டன. கணவன் மனைவி குழந்தையை சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் எழுந்தது.
நாலாயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கு தடவை ஸலாத்துன் நாரியா ஓதி முடிக்கப்பட்டது. இறைவனும் மலக்குகளும் நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத்து கூறினர்.
துஆ ஓத ஆரம்பித்தார் சாகுல்ஹமீது ஜலாலி.
“நிஜாமுத்தீனுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்க இறைவா அருள் புரிவாயாக!”
“ஆமீன்!”
“நிஜாமுத்தீன் குடும்பத்துக்கு.எவ்வித உயிராபத்துகளும் ஏற்படாமல் இறைவா காப்பாயாக!”
“ஆமீன்!”
“நிஜாமுத்தீன் மகன் பிலாலுக்கு நன்கு பேச்சுவர இறைவா உதவுவாயாக!”
“ஆமீன்!”
சமையல்காரர் நீலகண்டன் ஒரு துண்டு சீட்டை கொடுத்து அனுப்பினார். அதனை சாகுல்ஹமீது ஜலாலி படித்துவிட்டு “சமையல்காரர் நீலகண்டனின் மகனுக்கு உயர்கல்வி கற்க இறைவா கருணை புரிவாயாக!”
“ஆமீன்!”
சமையல் உதவி பெண் மேரி ஒரு துண்டு சீட்டை கொடுத்து அனுப்பினார். அதனை சாகுல்ஹமீது ஜலாலி படித்து விட்டு “மேரியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க இறைவா ஆவன செய்வாயாக!”
“ஆமீன்!”
துஆ முடிந்தது. பதினோரு பேரும் சாப்பிட்டனர். ஆளுக்கொரு பூந்தி பொட்டலம் வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். வழியில் நான்கைந்து பேர் சாகுல்ஹமீது ஜலாலி குழுவினரை மறித்தனர். “எங்கே போய்ட்டு வரீங்க உஸ்தாத்?”
“ஸலாத்துன் நாரியா ஓதிட்டு வரம்!”
“அல்லாஹ்வின் புகழ்தான் பாடவேண்டும் தூதரின் புகழ் பாடக்கூடாது!”
“பல்லாயிரம் கோடி மனிதரில் நபிகள் நாயகத்தை இறுதி தூதராக இறைவன் தேர்ந்தெடுத்தது கண்ணியத்துக்குரிய விஷயம்தானே? திருக்குர்ஆனை நபிகள் நாயகத்தின் வழிதானே அல்லாஹ் மனிதருக்கு வெளிப்படுத்தினான்!”
“ஓத கொடுத்த பணத்தை ஜிப்பாவின் இருபக்க பாக்கட்டுகளிலும் போட்டுக் கொண்டீர்களா?”
“பணம் வாங்க மறுத்துவிட்டோம். ஸலாத்துன் நாரியா மீது நம்பிக்கை கொண்டு ஓதுகிறோம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஓதாதீர்கள் இறைப்பணி செய்யும் இமாம்களை ஏளனம் செய்யாதீர்கள் நண்பர்களே!”
பணத்திற்காகவா ஓதுகிறார்கள் ??
உஸ்தாத் கம்பீரமாய் நடந்து போனார்.
“என்னுடைய இறைசெய்தியை பூமி மக்களுக்கு துளி அர்த்தம் மாறாமல் கொண்டு போய் சேர்த்த முஹம்மதின் புகழ் மறுமைநாள் வரை ஓங்கட்டும்!” என அல்லாஹ் ஸலவாத்து கூறினான். மலக்குகளும் கோரஸாய் ஸலவாத்து கூறினர்.

Leave a comment
Upload