
லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது இந்த வருடம் பிப்ரவரி 6 அன்று தனது 92 வயதில் இறந்த லதா தீதி (தீதி என்றால் அக்கா என்ற அன்பு விளிப்பு) என்று அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாகவும் மரியாதைக்காகவும் நிறுவப்பட்டது.
லதா தீதியின் தந்தயான மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கரின் 80வது நினைவு தினமான கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பை ஷண்முகானந்தா சபாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,” தேசம் மற்றும் சமுதாயத்திற்கான தன்னலமற்ற சேவைக்காக முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.
"இசை தாய்மை மற்றும் அன்பின் உணர்வைத் தரும். தேசபக்தி மற்றும் கடமையின் உச்சத்திற்கு இசை உங்களை அழைத்துச் செல்லும். இசையின் இந்த சக்தியை, லதா தீதியின் வடிவில் இந்த சக்தியைப் பார்த்ததில் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். அவர் மாதா சரஸ்வதியின் உருவகம். இசை ராஷ்டிர பக்தியைக் கற்பிக்கிறது. அவரது குரல் தேசபக்தியை ஊக்குவித்தது-ஏ மேரே வதன் கே லோகோ.."..என்ற ஒரு பாடலே சாட்சி,” என்று தனது உரையை மோடி ஆரம்பித்தார்.
”லதா தீதி போன்ற ஒரு மூத்த சகோதரியின் பெயரில் விருது கிடைத்தால், அது அவர் என் மீதான ஒருமைக்கும் அன்பிற்கும் அடையாளமாக இருக்கிறது. அதனால், நான் ஏற்காமல் இருக்க முடியாது. இந்த விருதை அனைத்து நாட்டு மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார் மோடி. இசை போன்ற பாடங்களில் தனக்கு அறிவு இல்லை என்ற அவர், "ஆனால் கலாச்சார புரிதலில் இருந்து, இசையும் ஒரு சாதனம் மற்றும் ஒரு உணர்ச்சி என்று நான் உணர்கிறேன்" என்றார்.. தொடர்ந்து...
லதா மங்கேஷ்கர் இசையின் பேரரசி என்பதைத் தவிர, தனது மூத்த சகோதரியாகவும் இருந்தார் என்றும் பிரதமர் உணர்ச்சி ததும்ப கூறினார்.
“தலைமுறையினருக்கு அன்பையும் உணர்ச்சியையும் பரிசாகக் கொடுத்த லதா தீதியிடம் இருந்து ஒரு சகோதரியின் அன்பைப் பெற்றதை விட பெரிய பாக்கியம் என்னவாக இருக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
லதா தீதியின் தந்தையின் நினைவாக இயங்கும் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்ம்ருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு, அதன் மக்கள் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த பலமான சீறிய செம்மையான பாதையை அளிப்பது போன்ற முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கும் ஒரு நபருக்கு மட்டுமே இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

முதல் பெறுநராக இருக்கும் மோடியைப் பற்றி அந்த அறிக்கையில், “அவர் இந்தியாவை உலகத் தலைமைப் பாதையில் கொண்டு சென்ற சர்வதேச அரசியல்வாதி. நமது அன்புக்குரிய தேசத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், பரிமாணத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான முன்னேற்றம் அவரால் உந்தப்பட்டு உத்வேகம் பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் புகழ்பெற்ற வரலாற்றில் நமது பெரிய தேசம் கண்ட மிகச் சிறந்த தலைவர்களில் அவர் உண்மையில் ஒருவர்.
பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை, லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மோடி அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உஷா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதமர் மோடி விருதைப் பெற்றார்.
"பொதுவாக நான் இதுபோன்ற பாராட்டு விழாக்களில் இருந்து என்னை தூரமாகவே வைத்துக்கொள்கிறேன். என்னை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் லதா மங்கேஷ்கர் போன்ற மூத்த சகோதரியின் பெயரில் ஒரு விருது வந்தால், அதை ஏற்றுக்கொள்வது எனக்கு ஒரு கடமையாகிறது. என் மீது மங்கேஷ்கர் குடும்பத்தின் உரிமை" என்று பிரதமர் தனது விருது ஏற்பு உரையில் கூறினார்.
சிவசேனாவுக்கும், முன்னாள் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload