தொடர்கள்
ஆன்மீகம்
எங்கள் வரதர் - சரளா ஜெயப்ரகாஷ்

20220329195313109.jpg

எனக்கு காஞ்சி வரதரின் கருடசேவை தரிசனம் ஒன்பது வருடங்களுக்கு பிறகு கிடைத்தது. அந்த இனிய தருணத்தை, என் உணர்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

பிறந்த ஊருக்கு வருவது என்றாலே பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுவும் சிறு வயதில் நாம் மகிழ்ச்சியுடன் சுவைத்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் மீண்டும் நினைவு கூர்ந்து பார்ப்பது, தூசு தட்டிய பழைய வீணையில் இருந்து எழும் நாதம் போல இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இராஜவீதிக்கு சென்றோம், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு காத்துக்கொண்டிருந்தோம். காவலர்கள் சாலையில் போகும் அனைத்து வண்டிகளையும் ஒரமாக நிறுத்தச் சொன்னார்கள். இராஜவீதியில் வண்ணமயமான ஆடைகளை உடுத்திக்கொண்டு பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் சர சர வென நடந்துக்கொண்டிருந்தார்கள். நல்ல உச்சி வெயில் நேரம் வந்தது, எல்லோரும் நிழலை தேடி சாலையின் ஓரங்களில் இருந்த கடைகளின் வாயிற்படியில் மற்றும் வீடுகளின் வெளியில் உட்கார்ந்துக்கொண்டும், மரங்களுக்கு கீழே நின்றுக்கொண்டும் இருந்தார்கள். சிறுதொழில் வியாபாரிகள் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். சாலையோரக் கடைகளில் இளநீர் மற்றும் குளிர்பானங்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. குழந்தைகளின் விளையாட்டு புல்லாங்குழலின் ஓசையும், பீ பீ என்று ஊதும் ஓசையும் காதுகளில் ரீங்கரமாக ஒலிக்க, டம் டம் என மேள சத்தம் கேட்க, கோயில் யானை அசைந்து கொண்டு வர, அதன் கழுத்தில் இருந்த மணி டிங் டிங் என்று ஒலிக்க, வானத்தில் பட் பட் என வெடி வெடிக்க, அந்தணர்கள் கூட்டமாக நடந்து வந்து கொண்டிருக்க, அவர்கள் வாயிலிருந்து மந்திரங்கள் ஒலிக்க மக்கள் அவர்கள் முன்னால் வணங்கி எழ, சாலையோரம் இருந்த மக்கள் கூட்டம் வழிமேல் விழிவைத்து பார்க்க அந்த இனிய காட்சி நடந்தது.


பிரமாண்டமான இரு குடைகளுக்கு நடுவே தங்க கருடனின் தோள்மேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு அழகான சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணமாலையுடன் , ஊதா மற்றும் இளஞ்சிவப்பு பட்டு ஆடையுடன் எங்கள் வரதர் காட்சி அளித்தார். வரதரைப் பார்த்த அந்த வினாடியிலிருந்து என் கண்களிலிருந்து 'கர கர' வென எனக்கு கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. வரதா வரதா என்ன தவம் செய்தேனோ! நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த வருடம் பார்க்க முடிந்ததே என பரவசமானேன். எனது உணர்வுகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளவதைப் போல வரதரை பார்த்து சொல்லியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனந்தம் அமைதி மற்றும் இறை உணர்வுடன் இருந்த மக்கள் கூட்டத்தினருடனும், என் குடும்பத்தினருடனும் சேர்ந்து நின்று வரதரை தரிசிதத்தில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கும் வரதா வரதா பெருமாளே கோவிந்தா என குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. இந்த தருணத்தில் என் மனம் சற்று காலத்திற்கு பின்நோக்கி போக ஆரம்பித்தது. பழைய பொற்கால நினைவுகளை மனம் அசைபோட ஆரம்பித்தது.


கோடை விடுமுறையில் வரும் வரதர் திருவிழாவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம் வரதராஜ பெருமானின் ஒன்பது நாள் திருவழாவில் கருட சேவை தேர் தவிர மற்ற எல்லா நாட்களின் உற்சவங்களும், எங்கள் தெரு வழியாகதான் போகும். அதனாலயே எங்கள் உணர்வுகளுடன் வரதர் கலந்து விட்டார். அந்த விடியற்காலையில் வெடி சத்தம் கேட்டு நாங்கள் வேகமாக முகம் கழுவிக்கொண்டு வருவோம். அம்மா அவசர அவசரமாக வீட்டிற்கு வெளியே தண்ணீர் தெளித்து விட்டு கோலம் போடுவார்கள். அதிக கடவுள் பக்தி இல்லாத அப்பாவுக்கு வரதரிடம் மட்டும் ஒரு பிடிப்பு அவரை தரிசிக்க ஆவலுடன் வெளியே காத்துக்கொண்டிருப்பார் அப்போது மந்திரங்கள் ஒலித்தப்படியே அந்தணர்கள் நடந்து வந்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன்னால் எல்லோரும் விழுந்து கும்பிடுவோம் அப்படி விழுந்து கும்பிடும்போது நாம் என்ன வேண்டுகிறமோ அது பலிக்கும் என கொள்ளுபாட்டி சொல்வார்கள். அந்தணர்களுக்கு பின்னால் வரதர் கம்பீரமாக வந்து கொண்டிருப்பார் அந்த அழகே தனிதான்.
கருடசேவை தேருக்கு நாங்கள் அருகில் உள்ள சித்தப்பா வீட்டிற்குப்போய் பார்ப்போம். அன்றைய தினங்களில் நாங்கள் பட்டுப்பாவாடை அணிந்துக்கொண்டு காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல்கள், தலையில் மல்லிகைப்பூ, கால்களில் கொலுசு அணிந்துக்கொண்டு தயாராகிகொண்டிருப்போம் அப்போது வெடி சத்தம் கேட்கும் உடனே நாங்கள் ஓடி, மூங்கில் மண்டபத்தில் இருக்கும் சித்தப்பா வீட்டிற்கு போவோம் அங்கு பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் படைசூழ நின்றுக்கொண்டு எங்கள் காஞ்சி மநாகரின் திருவிழா கோலத்தை இரசித்துக்கொண்டே வேடிக்கைப்பார்ப்போம். ஆங்காங்கே பானக தண்ணீர், நீர்மோர், அன்னதான பந்தல் வைத்திருப்பார்கள். எங்கள் ஊர் மக்கள் வெளியூரில் இருந்து வரதரை காண வரும் பக்தர்களுக்கு இலவசமாக இதனை விநியோகம் செய்வார்கள். எங்கள் தெருவே பரபரப்பாக இருக்கும். ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும்.


நகர்புறங்களில் பல கோயில் திருவிழாக்கள் ஆங்காங்கு பல வண்டிகளின் சத்தத்துடனும் போக்குவரத்து இடர்பாடுகளுடனும் சம்பிரதாயத்துக்கு மட்டுமே நடப்பதாக தெரியும். வெகு சில மக்களே சாமிக்கு முன்னும், பின்னும் நடப்பார்கள் ஆனால் எங்கள் ஊரில் வீதி தோறும் திரளான மக்கள் கைகூப்பி வேண்டுவதும், ஆர்த்தி காட்டுவதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வு, வரதருக்கு முன்னால் வரும் ஐயர்கள் மற்றும் வரதரை தூக்கி வரும் பக்தர்கள் வெறும் காலுடன் காலணி இல்லாமல் நடந்து வருவார்கள் உற்சவம் வருவதற்கு முன்னால் லாரியில் இருந்து தண்ணீர் சல சலவென்று கொட்டிக்கொண்டே போகும். எங்கள் தெருவில் வரதரின் மோகினி உற்சவம் நல்ல உச்சி வெயிலின்போது தான் வரும். அப்போது எல்லோர் வீட்டிலும் பெண்கள் அவர்கள் வருவதற்கு முன்னால் குடம் தண்ணீரை சாலையில் ஊற்றுவோம் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு முன்னால் ஆரத்தி தட்டில் தேங்காய், பழம், பூ, வைத்து கற்பூரம் ஏற்றி வரதரை கும்பிடுவோம்.

20220329195439382.jpg
பிறகு நிகழ்காலத்திற்கு வந்தேன். இந்த கருடசேவையின் போது சிலர் அக்னி வெயிலில் ‘உஸ் உஸ்’ என சத்தம் எழுப்ப நாங்கள் சகோதரிகள் மட்டும் எங்கள் பிறந்த வீட்டின் சொந்தங்களை நேசத்துடன் பார்ப்பதைப்போல வரதரைப் பார்த்தோம்.

உறவினர்களில் சிலர் அக்னி நட்சத்திர வெயிலில் நின்றுகொண்டு எப்படிதான் பார்த்தீர்களோ நாங்கள் போகவே இல்லை என பெருமிதமாக சொன்னார்கள். இதனை நான் தவறு சொல்லவில்லை. இது ஒரு மகிழ்சியான உணர்வு எனக்கு. இதை நான் உணரத்தான் முடியும் அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியாது.

20220329195541842.jpg

”இது எனக்கே எனக்கான உணர்வு இனம்புரியாத இனிய உணர்வ”

நன்றி வரதா