தொடர்கள்
பொது
குலசேகரத்தில் வருது ராக்கெட் தளம் - மயில்சாமி அண்ணாதுரை - மாலா ஶ்ரீ

20221101223607957.jpg

சென்னை மாநகர காவல் துறை சார்பில், தமிழக அரசின் 'சிற்பி' திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் கடந்த 30-ம் தேதி மேற்கு தாம்பரம், ஶ்ரீ சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், சென்னையில் 100 அரசு பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு போன்றோர் அரசு பள்ளி மாணவர்களாக இருந்து, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

ஆகவே, அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம். இதற்கு எடுத்துக்காட்டாக இருவரும் மேடையில் அமர்ந்துள்ளனர்.

20221101223629509.jpg

பின்னர் நிருபர்கள் சந்திப்பின்போது, "குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் எப்போது அமையும்? அதனால் தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எவ்விதம் பயனடைவர்? இதனால் தமிழகத்துக்கு என்னென்ன பயன்கள் உண்டாகும்?" என்று நாம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், "இந்திய விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி துறைகள் எனப் பார்க்கும்போது, அதில் விண்வெளி துறையும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்த ஆண்டு, இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

2022110122365264.jpg

இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்கள் செல்லவில்லை என்பதை தவிர, மற்றபடி அனைத்து விதமான செயற்கைகோள் செய்வது, அவற்றை விண்ணுக்கு அனுப்புவது, அதை முறையாக பார்த்துக் கொள்வது என அனைத்திலும் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அமையவுள்ள புதிய ராக்கெட் ஏவுதளம் விரைவில் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக உருவெடுக்கும்.

இந்தியாவின் துணைகோளான நிலவு மற்றும் செவ்வாய் கிரகம் வெகுதூரத்தில் இல்லை. இது, மனிதர்கள் வாழ அடுத்த வாய்ப்பாக அமையும். நம்முடைய கல்வி, உலகளாவிய தேவைகளுக்காக இருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை

கல்வி நிலையங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மால் விவசாயம் முதல் விண்வெளி வரை ஏராளமான தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும். சிற்பி திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ-மாணவி களுக்கு கல்வியில் பல்வேறு ஊக்கங்களை தமிழக அரசு அளித்து வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகிறது.

தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது, தமிழகத்தை பொறுத்த வரைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமையும்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு பெரும் வாய்ப்புகள் ஏற்படுத்துவதாக அமையும். ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டவுடன், இன்னும் சிக்கனமாக செயற்கை கோள்கள் செய்ய முடியும். உலகளவிலான போட்டியில் நாம் இன்னும் சிறப்பாக முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவ்வகையில், தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு திறப்புமுனையாக குலசேகரத்தில் ராக்கெட் ஏவுதளம் சிறப்பானதாக உருவெடுக்கும்!" என்று மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்தார்.

மாலா ஶ்ரீ