தொடர்கள்
தொடர்கள்
பஜ்ரு தொழுகை-எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20221101222253520.jpg

பயஸ் அஹமது அரக்கபரக்க எழுந்தான். கண்களை கசக்கி கொண்டான்.
சுவர் கடிகாரத்தை வெறித்தான். மணி காலை 8,10 ஓடிப்போய் கை கடிகாரத்தை
எடுத்து நேரம் பார்த்தான். 8,12. மேஜை இழுப்பறையை இழுத்து கைபேசியில் நேரம்
பார்த்தான் 8,11.
“ஆஷிகா! ஏய் ஆஷிகா!”
பம்மி பம்மி வந்து நின்றாள் பயஸின் மனைவி.
“என்ன காரியம் பண்ணிருக்க?”
“புரியலைங்க!”
“பஜ்ரு தொழுகை தொழ பள்ளி வாசலுக்கு போக நாலேமுக்காலுக்கு என்னை
எழுப்பச் சொன்னேனே.. ஏன் எழுப்பல? ஷைத்தானை என் காதுல ஒண்ணுக்கு
இருக்க வச்சிட்டியே… நம்ம வீட்டை ஷைத்தானின் குடியிருப்பு ஆக்கிட்டியே?”
அழுவது போல பேசினான்,
“என்னங்க ஒண்ணுமே நடக்காத மாதிரி நடிக்கிறீங்க.. நாலைரை மணிக்கு
டைம்பீஸ் அலாரம் வச்சிருந்தேன்.. அலாரம் ஒலிக்க ஆரம்பிச்சவுடன் ரோபோ மாதிரி
எழுந்து அதை தூக்கி போட்டு உடைச்சிட்டீங்க. நாலே முக்கால் மணிக்கு நான்
தலைல ஹெல்மெட்டை போட்டுக்கிட்டு உங்களை எழுப்பினேன். என்னை நாலு
அறை அறைஞ்சு நெட்டி தள்ளிட்டு திரும்ப தூங்க போய்ட்டீங்க.. திரும்ப தூங்க
போகும் போது என்னை எத்தனை கெட்ட வார்த்தைகளில் திட்னிங்க தெரியுமா?”
“கப்ஸா விடுறியா? நானாவது அப்படி செய்றதாவது? அதிகாலை நேரத்துக்கும்
சூரிய உதயத்துக்கும் இடையே இறைவன் ரிஜக் எனும் வாழ்வாதாரத்தை
வழங்குகிறான். ஏனெனில் உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில் தான்
பிரித்து அறியப்படுகிறார்கள் என்கிறது நபிமொழி. என்னை பஜ்ரு தொழாமல் தூங்க
விட்டு சோம்பேறி ஆக்கி விட்டாயே பொண்டாட்டி!”
“கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு பேச்சை பாரு!”
“பஜ்ரு தொழுதவர் மறுமையில் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக
கடப்பார் ஆஷிகா!”
“பஜ்ரு தொழறவங்க தானே?”

“யார் இரு குளிர்ந்த நேர தொழுகைகளை தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில்
நுழைவார்!”
“பேசுறது வக்கனையா பேசுங்க. செயல்ல நீங்க மிகபெரிய பூஜ்யம்!”
‘பஜ்ரு தொழுகையில் இரவின் வானவர்களும் பகலின் வானவர்களும்
கூடுவதால் அவ்விரு வானவர்களும் பஜ்ரு தொழுகையை தொழுதவருக்கு சாட்சி
பகரும் சான்றாவர். நான் பஜ்ரு தொழப் போயிருந்தா இரு வானவர்களையும்
பார்த்திருப்பேனே…”
“தூங்கி தூங்கி ஷைத்தானைதான் தினம் ஸைட் அடிச்சுக்கிட்டு இருக்கீங்க!”
“படுக்கை போர்வை மனைவி மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறி
விட்டு ஒரு அடியான் அதிகாலையில் எழுந்து விட்டான் எதற்கு? இறைவனின்
அருளின் மீது ஆசை வைத்தா? இறைவனின் தண்டனைக்கு பயந்தா? இல்லை
இல்லை பஜ்ரு தொழுகையில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே எழுகிறான் அடியான்
என்கிறான் இறைவன்.. பஜ்ரு தொழாத நான் ஒரு மாபாவி!”
“ஏன் இவ்வளவு அட்டகாசம் பண்றீங்க? நாலரைக்கு பதில் அஞ்சரைக்கு எழுந்து
பஜ்ரு தொழுகையை வீட்லயே தொழுதிட்டு போங்க…”
“போடிபோடி போக்கத்தவளே… ஜமாஅத்தோட சேர்ந்து தொழுறதுதான் பெரிய
நன்மை…”
“இனிம உங்களை விறகு கட்டையால் அடிச்சு எழுப்பிதான் பஜ்ரு தொழ
அனுப்பனும்.. பஜ்ரு தொழப் போற உங்களுக்கு மண்டை கொழுக்கட்டை மாதிரி
வீங்கியிருக்கும் பரவாயில்லையா?”
முப்பது நொடி ஆழமாக யோசித்தான் பயஸ் அஹமது. “இனி வீட்டை நம்பி
பிரயோஜனமில்லை ஒரு போர்க்கால நடவடிக்கை எடுக்கிறேன்….”
எழுந்து சட்டையை அணிந்து கொண்டான்.
“எங்க போறீங்க?”
“பள்ளிவாசலுக்கு!”
“இப்ப போய் என்ன பண்ணப் போறீங்க?”
“ஒரு புதுதிட்டம் கைவசம் வச்சிருக்கேன் அது பத்தி பள்ளிவாசல் இமாம்
அல்லது மோதினார்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணப் போறேன்!”
“குளிச்சிட்டு சாப்ட்டுட்டு போங்க!”
“நைட்டே ஒளு செஞ்சுட்டுதான் படுத்தேன். ஒளு முறியாம இமாம்
மோதினாரை சந்திக்கிறேன்!”
புல்லட்டில் கிளம்பினான் பயஸ் அஹமது. நண்டுமார்க் லுங்கியும் கைவைத்த
காடா பனியனும் அணிந்த மோதினார் டேலா கட்டிகள் தயாரித்துக் கொண்டிருந்தார்.

தொழுகையாளிகள் சிறுநீர் கழித்துவிட்டு சிறுநீர் துளிகளை டேலாகட்டி வைத்து ஒற்றுவர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.


“என் பெயர் பயஸ் அஹமது. எங்கத்தா பெயர் நத்தார்ஷா.. வெட்கிரைன்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இருக்கிறேன். பல்லடத்தில் தான் பெண் எடுத்தேன். திருமணமாகி ஐந்தாண்டு ஆகின்றன. நான்கு வயதில் மகன் இருக்கிறான் தினம் ஐந்து வேளைகளில் நான்கு வேளைகளை சிறப்பாக தொழுது விடுகிறேன். பள்ளிவாசலில் பஜ்ரு தொழுகை தொழ நானும் கடந்த ஆறுமாதங்களாக
தலைகீழ் நின்று தண்ணீர் குடிச்சு பாக்றேன்.. நடக்கல…”
“தினமும் பஜ்ரு தொழுகைக்கு பத்து பேரே வருகின்றனர். அதிகாலை தூக்கம் மக்களுக்கு அவ்வளவு முக்யமாக போய்விட்டது!”
“எனக்கொரு உதவி செய்வீர்களா மோதினார்?”
“சொல்லுங்க!”
“தினமும் இரவில் சாப்பாட்டை முடித்து விட்டு ஒளுவுடன் பள்ளிவாசலில் வந்து படுத்துக் கொள்கிறேன் பாங்கு சொல்லும் போது என்னை எழுப்பி விடுங்கள் உங்களோட தொழுது விட்டு வீடு திரும்பி விடுகிறேன்!’‘
“ஸாரிப்பா.. இருபத்தி நாலுமணி நேரமும் திறந்திருக்கும் பள்ளிவாசல் சிலபல அரசியல் காரணங்களுக்காக இப்போதெல்லாம் பூட்டப்படுகிறது. வெளி பள்ளி மட்டும் திறந்திருக்கும்!”
“உங்க அறைல உங்களோட தூங்கிக் கொள்கிறேனே..”
“பள்ளிவாசலின் அனைத்து பழைய சாமான்களையும் என் அறைல வச்சுதான் பூட்டி வச்சிருக்காங்க பள்ளி நிர்வாகிகள்..”
‘எனக்கு ஹெல்ப் பண்ணிங்கன்னா உங்களுக்கு தினமும் இரவு சாப்பாடு எடுத்திட்டு வருவேன்!”
“எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு எனக்கு போதும். வெளிசாப்பாடு எனக்கு ஒத்துக்கிரதில்லை.”
“அவுட் ஆப் தி வே போய் எனக்கு உதவ முடியாதா?”
“தம்பீ! இப்பல்லாம் போலீஸ் ராத்திரி ரவுண்ட் அப் வந்து பள்ளிவாசல்கள்ல அந்நியர்கள் படுத்திருக்காங்களான்னு செக் பண்ராங்க. எல்லாம் தீவிரவாத. அச்சுறுத்தல் காரணம்தான்”
“அப்டின்னா பள்ளிவாசல்ல யாரும் வந்து தங்கிறதில்லையா?”
யோசித்து சூரியனித்தார் மோதினார்.
“தப்லிக் ஜமாஅத்காரர்கள் வியாழன் இரவு தங்கி அமல்களை செய்வார்கள் அது விதிவிலக்கான சமாச்சாரம்!”

“இமாம் அறைல என்னையும் தூங்க அனுமதிக்க மாட்டாரா?”

“பொண்டாட்டி கூடவே படுத்துக்க விரும்பமாட்டார். கையகால தூக்கி போடு வாங்களேன்னு பயம். அவர் ஒரு தனிமை விரும்பி. நைட் புரோட்டாவோ பீப். பிரியாணியோ வாங்கித் தந்தாலும் அவர் மயங்க மாட்டார்!”
“பள்ளிவாசலின் வெளிவாசல் அருகே கயித்து கட்டில் போட்டு படுத்துக்கவா?”
“அது உங்க சாமர்த்தியம்..”
“பஜ்ரு தொழுகைக்கு வர விரும்பும் ஒரு அடியானை நீங்களும் இமாமும் அரவணைச்சு போக மாட்டேங்றிங்க. இந்த பாவம் உங்களை சும்மா விடாது!”


“எங்களுக்கு எந்த பாவமும் இல்லை வில்பவர் துளியும் இல்லாத உங்களை பார்த்து தான் மஹல்லா மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள்!”
“நான் வடிவேலுவா? என்னை பார்த்து எல்லாரும் சிரிக்க. சாமிகிட்ட வரம் கேக்காம பூசாரிகிட்ட போய் வரம் கேட்கிறேன் பாரு.. என் மண்டையை பள்ளி தூண்ல நங்நங்குன்னு முட்டிக்கனும்!”
“தூண் டேமேஜ் ஆச்சுன்னா அதற்குரிய பணத்தை நீங்கதான் தரணும்!”
“மோதினார்! நீங்க வேறெந்த ஆணியும் பிடுங்க வேணாம். இமாமோட கைபேசி எண்ணும் முத்தவல்லி கைபேசி எண்ணும் தாங்க. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்…”
“கொடுக்கிறேன் ஆனா நம்பர் நான்தான் கொடுத்தேன்னு அவங்ககிட்ட சொல்லாதிங்க!’
“சரிங்க மோதினார் செல்லம்!”
இரு பத்து இலக்க எண்களை கொடுத்தார் மோதினார்.
“ஐ.. மோதினார் நீங்க ஐ போன் வச்சிருக்கீங்க!”
“துபாய்லலிருந்து வந்த என் அக்காமகன் கொடுத்தான்..”
“டிஸ்னி ஹாட்ஸ்டார்ல சீரியல்கள் எல்லாம் பாப்பீங்களா?”
“யூட்யூப்ல பயான்கள் கேட்பேன்… மார்க்க சந்தேகங்களை கூட கூகுளில் சர்ச் பண்ணி நிவர்த்தி செய்து கொள்வது உண்டு. அபூர்வமாக திருஷ்யம் 2 போன்ற சில மலையாள படங்கள் பார்ப்பேன். மற்றபடி தவறான உபயோகம் ஏதுமில்லை!”


இமாமுக்கு கைபேசினான் பயஸ் அஹமது. அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
தனது பிரச்சனையை கூறி அவரது அறையில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டான்.
“உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். ஆனால் என் அறையில் தூங்க உங்களை அனுமதிக்க முடியாது. வேறு வழி யோசியுங்கள் இனி இது விஷயமாக என்னை தொந்திரவு செய்யாதீர்கள்!”
இருண்டான் பயஸ் அஹமது.

முத்தவல்லிக்கு கைபேசினான். அவர் எடுக்கவே இல்லை. அவரின் கடைக்கே
போனான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
பயஸ் சொல்வதை கேட்டு விட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் முத்தவல்லி.
“ஆயிரம் ஹதீஸ்க கோட் பண்ற நீ தியரில ஸ்ட்ராங் பிராக்டிகல்ல வீக்கோ வீக்.
உனக்கு பள்ளிவாசல்ல ராத்திரி தங்க இடம் கொடுத்தா உன் பொண்டாட்டி என்னை சபிப்பாள். அவளுக்கு நீ செய்யவேண்டிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும் தானே? யுவர் ரிக்குவஸ்ட் இஸ் ரிஜக்ட்டு தம்பீ!”
ஹார்டுவேர்ஸில் பணிபுரியும் 16வயது சிறுவன் ஓடி வந்தான் “உங்க பெயர் பயஸ் அஹமதுதானே?”
“ஆமாம்!”
“உங்களை முகநூலில் பார்த்திருக்கிறேன். நீங்க என்னை பிரண்டா அக்செப்ட் பண்ணி ஒரு வருஷமாகுது. நான் உங்களுக்கு உதவ முடியும்!”
“எப்படி?”
“நாளை காலை 4.45மணிக்கு தெரியும்!”
“உன் பெயர் என்ன?”
“இபுராகிம் சையது!”
காலை 4.45மணி. இபுராகிம் சையது இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் சேர்ந்து தப்ஸ் அடித்து கொண்டே பயஸ் அஹமது வீட்டு வாசலுக்கு வந்தான்.
“அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே தேடிவரும்..” நாகூர் ஹனீபாவின் பாட்டை பாடினர்.
பாடி முடித்ததும் “தூக்கத்தை விட தொழுகை மேலானது. பஜ்ரு தொழ எழுங்கள் மூமின்களே!” கூவினர்.
அந்த நூறு டெஸிபல் கூவல் பயஸ் அஹமதின் தூக்கத்தை துவம்சம் பண்ணியது. முடுக்கி விட்டது போல எழுந்தான்.
பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதான் பயஸ், தொழுது முடித்ததும் இமாம் பயஸை முஸாபஹா செய்து “அல்லாஹ் நாடி விட்டான். இனி நான்ஸ்டாப் பஜ்ரு தொழுகைகள் உங்கள் வாழ்வில்!”
நிலாவினான் பயஸ் அஹமது. கட்டைவிரல் உயர்த்தினான் இபுராகிம் சையது.