மொட்டைமாடியில் பெருகும் கடல்
உப்பு பாலங்களில் உருகும் குழம்பு!
தொலை ஞானம் தகிக்கும் தழல்
துக்கப்பொழுதுகளின் கெக்கலிப்பு
வெட்டவொண்ணா மொட்டைக் கத்தரி
விரிசல்கள் வானத்தின் அசையாக் கிளைகள்
வறண்ட சுனையின் உறுபிளவுகள்
உடைந்த கண்ணாடி சீசா
ஊறிய உதடுகள் உலர்ந்த வார்த்தைகள்
அலைவுறும் தக்கைக்குறி சமண் குலைந்து
தைலப்பதனத்தில் உறங்கும்
துர்சொப்பனத்தின் மீளமுடியாத மத்தியில்
மூச்சுக்குழாயில் டிராகனின் மயிர்க்கற்றை
செவிக்கூத்து வெடிப்புறும் தோலிசை
புலன்களின் விழிகளில் உதிரப்பெருக்கு
ஒளிர்ந்து அணையும் தொடுதிரை
நாய்கள் பிறாண்டும் தகரத்தடுப்பு
தூக்கிலிட்ட நிலவு – ஜன்னல் காட்சி
மசிக்கம்பிகளில் முகம் தோய்க்கும்
சாக்குருவியின் அலகில்
இலக்கமிடப்பட்ட இறைச்சித்துண்டு
தாரென இறுகும் இசைத்தட்டு
பிக்ஸல் பொத்தல் வழியும் சாம்பல் கிண்ணம்
பழுப்புக் கண்ணாடி பச்சயப்பிணி
படர்ந்து பரவும், நீலம் தொடும்
வடக்கேறும் ரசவாதத்தின் சர்ப்பமுடுக்கு அது
சிதிலங்களின் மீதான கடப்புப் பாலத்தை
தீண்டி திரும்பும் முரண் நகையின்
பயணக்குறிப்புகளில்
சொற்கள், அடையாளங்கள் என்று எதுவுமில்லை
மீண்டும் வலசை மா(ற்)றி செலுத்த
சுக்கானைத் திருப்பும்
கரங்களில் ரேகைகளோ இல்லவே இல்லை
சுரப்பற்ற வெப்பத்தில் உருகிக்குலையும்
என் இறைஞ்சுதலுக்கான பிரார்த்தனை பாடலை
சிதைக்காதிரியும், இனியும்!
Leave a comment
Upload