அமெரிக்கா போய் இறங்கியதும் முதலில் எல்லோரையும் கவர்வது அங்குள்ள பொது இடங்களின் தூய்மைதான். எத்தனை குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தாலும் பொது வெளிகளில் குப்பைகளை வீசி எறியும் நமக்கு இவர்களால் எப்படி பொது இடங்களை எப்போதும் தூய்மையாக பராமரிக்க முடிகிறது என்கிற வியப்பு எழத்தான் செய்கிறது. தூய்மை என்பது கலாச்சாரத்தில் ஆழமாய் பதிந்த ஒரு விஷயம் என்பது மெல்ல புரிகிறது. குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது குற்றம் என்பதைவிட அநாகரீகம் என்பது தலைமுறைகள் தாண்டியப் பண்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே பொதுவெளித் தூய்மையில் கவனமாய் இருக்கிறார்கள்.
நாமும் தூய்மையை விரும்பினாலும் தெருக்களில் குப்பையை எங்கே கொட்டுவது என்பதே நமக்கு பெரிய பிரச்சனை. எங்காவது வேலியில்லாத காலிப் பிளாட்டு கிடைத்து விட்டால் அது குப்பை மேடாக மாறிப் (நாறிப்) போகும். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தாலும் அவை போதுமானதாக இருப்பதுமில்லை, சரியான முறையில் பராமரிக்கப் படுவதுமில்லை. ஆனால் இங்கே குப்பைகளை சேகரிக்க ட்ராஷ் காம்பாக்டர் (Trash Compactor) என்கிற சிறப்பான வசதியை செய்துள்ளனர். எல்லா கம்யூனிட்டிகளிலும் போதுமான “ட்ராஷ் காம்பேக்டர்கள்” அமைக்கப் பட்டுள்ளன. அதன் ராம்ப் வழியாக சென்று வாய்ப்பகுதியில் குப்பைப் பைகளை போட்டு விட்டால் போதும், அது தானாக சறுக்கி கொண்டு போய் காம்பாக்டர் முன் விழுகிறது. காம்பாக்டர் குப்பைப் பைகளை அவ்வப்போதே அழுத்தி இறுக பேக் செய்கிறது. பேக் செய்யப்பட்ட குப்பைகளை எடுத்துச் செல்ல தினமும் வாகனங்கள் வந்து விடுகின்றன. பவர் காம்பாக்ட் செய்வதால் குப்பைகள் வெளியே சிதறுவதில்லை. உடனுக்குடன் அகற்றப்படுவதால் துர்நாற்றமுமோ சுகாதார சீர்கேடோ ஏற்படுவதில்லை.
அமெரிக்காவில் பொது மின்சாரம் 110V/60 Hz தரையில் புதைக்கப்பட்ட கேபிள்கள் மூலம் வினியோகமாகிறது. இந்தியாவில் வீடுகளுக்கு 230V சப்ளை, ஆனால் அமெரிக்காவில் உபயோகிப்பாளர் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு குறைந்த அழுத்த 110V சப்ளைதான். மின்மாற்றிகள் (Transformers) ஆங்காங்கே பெட்டிகளாக வைக்கப் பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் எல்ஈடி மின் விளக்குகள் சிப்பிளாகவும் சிறப்பாகவும் இரவு நேர போக்குவரத்திற்கு பளிச்சென்ற வெளிச்சத்தைத் தருகின்றன.
தொலைத்தொடர்பு என்பது நவீன உலகின் ஆகத்தலையாய கட்டமைப்பாக மாறிவிட்டது. தொலைத்தொடர்பில் சிறு தடங்கல் ஏற்பட்டால் கூட எல்லா நெட்வொர்க்களும் செயலிழந்து, திருவிளையாடல் திரைப்பட பாடல் வரிகள் போன்று “அசையும் பொருளனைத்தும் அசைவின்றி” ஸ்தம்பித்து விடக்கூடும். இந்த அபாயத்தை உணர்ந்து இருந்தாலும் நம்மவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு உரிய பாதுகாப்பு முன்னுரிமை நெடுஞ்சாலைகளில் கொடுப்பதில்லை. நம் ஊர்களில் டெலிகாம் கேபிள்களுக்கு எப்போதும் மாற்றான்தாய் ட்ரீட்மெண்ட்தான். நமது சாலைகளில் ஜேசிபி எந்திரங்கள் “மில்லியன் ஜீபி” டேட்டா அனுப்பும் ஆப்டிகல் பைஃபர் கேபிள்களை மானாவரியாய் வெட்டி சிதைப்பது சாதாரணமாய் நடக்கிற விஷயம். ஆனால் அமெரிக்காவில் அப்படி எல்லாம் நடப்பதில்லை. டெலிகாம் சாதனங்களுக்கு உரிய பாதுகாப்பும் முன்னுரிமையும் நெடுஞ்சாலைகளில் கொடுக்கப் படுகிறது.
அடுத்தபடியாக மழைநீர் வடிகால் அமைப்பு மிகச்சிறப்பு. மழை நீர் தேங்காத வண்ணம் சாலையின் இரு புறமும் சறுக்கலான சிமெண்ட் வடிகால் தடம் அமைக்கப் பட்டுள்ளது. சாலையில் விழும் மழைநீர் தடம் வழியே வழிந்தோடி சட்டென வடிகாலில் சேர்ந்து விடுகிறது. இந்த அமைப்பினால் சாலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்பதில்லை. மேலும் குப்பைக் கூளங்கள் வடிகாலுக்குள் சென்று சிக்கி அடைபடுவதைத் தடுக்க சரியான கம்பித் வலைத்தடுப்பு உள்ளது. நம்மூர்களில் ப்ளாஸ்டிக் குப்பைககள் டன் கணக்கில் வடிகால்களில் சிக்கிக் கொள்வதால் மழைநீர் சாலைகளில் தேங்கித் தெப்பமிட்டு அழையா விருந்தாளியாய் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
குடிநீர் வினியோகம் ஓவர்ஹெட் டேங்க் இல்லாமல், மிகுந்த கண்காணிப்போடு நேரடி பம்பிங் அமைப்பில் (Direct Pumping water distribution system) இயங்குகிறது. சாலைகளின் இருபுறமும் அழகாக லேண்ட்ஸ்கேப்பிங் (Landscaping) செய்து செடிகொடி புல்வெளிகளுக்கு இரவு நேரங்களில் சொட்டுநீர் பாசணமாய் தெளிக்கப்படுகிறது.
இங்கே வளர்ப்பு பிராணிகள் வீட்டுக்கு வீடு தாராளமாய் வைத்திருக்கின்றார்கள். நடைப்பயிற்சியின் போது வளர்ப்பு பிராணிகள் கழிக்கும் “டூ டாய்லெட்டை” அவற்றின் எஜமானர்களே கையுறை அணிந்து எடுத்து ஆங்காங்கே உள்ள பெட் வேஸ்ட (Pet Waste) தொட்டிகளில் இட்டு விட வேண்டும் என்பது சட்டம். அப்படியே விட்டுவிட்டு நைசாய் நழுவினால் கடும் அபராதம்தான்!
தொடர்ந்து பேசுவோம் …
Leave a comment
Upload