அமெரிக்க அனுபவங்கள் - அட்லாண்டா நகர்வலம் ….
அட்லாண்டாவில் வசிக்கும் மக்கள் தொகையில் கருப்பின மக்களின் சதவீதம் சற்று அதிகம். மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 48% கருப்பின மக்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது. கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடிய மாவீரர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் பிறந்து வளர்ந்து இயக்கம் தொடங்கியது இங்குதான்.
1929ல் பிறந்த மார்ட்டின் லூதர் கிங் 1948ல் மகாத்மா காந்தியின் அகிம்சை வழி தத்துவங்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டு அகிம்சை வழியில் ஒடுக்கப்பட்ட அமெரிக்க கருப்பின மக்களின் பொது உரிமைகளுக்காக தன் வாழ்வின் கடைசி நாள் வரை போராடினார். தனது 26வது வயதில் ஆராய்ச்சி பட்டம் பெற்று 1964 ல் மிக இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். கல்வி, குடியிருப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சமஉரிமை கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தியவர். 1968 ஏப்ரல் 4ம் நாள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார். அவரது நினைவாக அட்லாண்டா நகரில் “மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் தேசிய வரலாற்று பூங்கா” அமைந்துள்ளது. அங்கு அவர் பயணித்த வாழ்க்கை, முன்னெடுத்தப் போராட்டங்கள், ஆற்றிய உரைகள், எழுத்துக்கள், மரணித்த மணித்துளிகள், இறுதி ஊர்வலம் எல்லாம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
பூங்கா வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழுஉருவ உலோகச் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. மகாத்மா காந்தியின் வழியில் அமெரிக்க கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காக போராடி மறைந்த மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் நம் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்கிறார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய மீன்வளக் காட்சியகம் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா அக்வேரியம் (Georgia Aquarium) ஆகும். சமீப காலம் வரை இது உலகில் மிகப்பெரிய அக்வேரியமாகப் பெயர் பெற்றிருந்தது. தற்போது சீனா சிங்கப்பூர் அக்வரியங்களுக்கு அடுத்ததாக விளங்குகிறது. ஐம்பது டாலர் நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு காலை ஒன்பது மணி முதல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். உள்ளே ஏழு பெரிய காட்சியகங்கள் உள்ளன. இதற்காக மொத்தம் நான்கு கோடி லிட்டர் (11 Million Gallon) அளவில் திரும்பிய திசையெல்லாம் நீர்தொட்டிகள். அவற்றில் நீந்தித் திளைக்கும் பல இலட்சக்கணக்கில் வகை வகையான மீன்கள் மற்றும் கடல் பிராணிகள்.
இவ்வூர் தொழிலதிபரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கட்டுமான மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையகமான “ஹோம் டிப்போ (Home depot)” இணை நிறுவனருமான “பெர்னார்ட் மார்களின்” நன்கொடையால் தொடங்கி இன்று பன்மடங்காய் வளர்ந்திருக்கிறது இந்த அக்வேரியம்.
இங்கு ஒவ்வொரு பகுதியிலும் மில்லியன் கேலனுக்கு அதிகமான கொள்ளளவு கொண்ட கண்ணாடி தொட்டிகளில் நீந்தி விளையாடும் வண்ணவண்ண மீன்கள், திமிங்கலங்கள், சுறாக்கள், கடல் சிங்கங்கள், டால்பின்கள், கடல் நீர்நாய்கள், வட்ட வட்ட நிலா ஜெல்லி மீன்கள், ஆறடி நீளமான நார் மீன்கள், கால் நீண்ட அமெரிக்க கடல் நண்டுகள், கண்கவர் கடல் குதிரைகள் என்று ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் பார்போரின் கண்களைக் கவர்கின்றன.
குகை போன்று பாதையில் பார்வையாளர்கள் நடந்து செல்ல, சுற்றிலும் மீன்களும் சுறாக்களும் நீந்தி மகிழ்விப்பது நமக்கு அற்புதமான அனுபவம். தலைக்கு மேலாய் ஹாயாய் வந்து நம்மைப் பார்வையிடும் சுறா/திருக்கை மீன்கள். சின்னதும் பெரிதுமாய் இருத்தாலும் அவை ஒற்றுமையாய் ஓடிப்பிடித்து விளையாடுவது பார்ப்போருக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்வதாய் தெரிந்தது.
டால்பின் காட்சியகத்தில் துள்ளி வந்து வணக்கம் சொல்லும் டால்பின் குட்டிகள் காண்போரை கவர்ந்திழுக்கின்றன. பயிற்சியாளர்கள் வார்த்தைகளுக்கு நாட்டியமாய் சுழன்று ஓடி ஆடும் ஒரு டஜன் டால்பின்கள், மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவையில்லை என்று மேடையேறி நிரூபிக்கின்றன. டால்பின்கள் எழுப்பும் ஒலிகள் தனியொரு இசை. காட்சி முடிவில் இந்த குட்டிப் பிராணிகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் எழுந்து வந்தோம். இதைப் போலவே வேறொரு அரங்கத்தில் கடல் சிங்கங்களின் சாகசங்களும் டால்பின்களைப் போலவே நம்மை பிரமிக்க வைத்தன.
ஐந்து பெலுகா வகை திமிங்கலங்கள் தனியொரு பகுதியில் எட்டு லட்சம் கேலன் தண்ணீரில் நீந்தி பந்து விளையாடுவது கண்கொள்ளா காட்சி. இந்த பெலுகா திமிங்கலங்கள் ஒவ்வொன்றும் பதினோறு அடி நீளம், குழந்தமையான முகம், பால் வெண்மை நிறம், ஓய்வின்றி நீந்தி விளயாடும் குதூகலம். பார்வையாளர்கள் குறிப்பாக குழந்தைகள் பலர் இதன் முன்னே நீண்ட நேரம் சம்மணமிட்டு அமர்ந்து விளையாடி ரசிக்கின்றனர்.
“If there is a magic on this planet, it is contained in the water” - “இந்த பூமியில் அதிசயம் என்றொன்று இருந்தால் அது தண்ணீரில்தான் இருக்கிறது” என்று எழுதப் பட்டிருந்த வாசகத்தின் பொருளை உணர்ந்து ஆமோதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
தொடர்ந்து அடுத்த வாரம் கோகோ கோலா உலகம் மற்றும் அட்லாண்டாவின் பிற சிறப்புகளைப் பார்ப்போம் …..
பயணம் தொடரும்
Leave a comment
Upload