தொடர்கள்
கவிதை
அவளுக்குத்தான் தெரியும் - ஆரா

20240409151615807.jpg

அண்ணன்

அன்று எழுதி எங்கோ வைத்த

கணக்கு நோட்டு எங்கே என்று

ஆட்டோக்காரர் வந்த பின்னர்

அவசரமாய் தேடும் போதும்

அக்காள்

பின்னலிட்டு பவுடரிட்டு

பகட்டு ஆடை அணிந்தபின்னர்

கதவின் பின்னே அரைமறைவில்

பின்னை (pin) தேடி நின்ற போதும்

தம்பி

மாலை வேளை வீதி சேற்றில்

ஆடி களைத்து வந்த போது

காலில் பட்ட சிறுகாயம்

எந்த களிம்பால் ஆறும் என்று

தங்கை

பாட்டு கிளாசு நோட்டு புக்கில்

எந்த பாட்டு விட்டு போச்சு

விட்ட பாட்டை விடுமுறை நாளில்

விடாமல் விரட்டி பாட வைக்க

அப்பா

அலுவலகம் தனதுலகம் என

தவ வாழ்க்கை வாழும் போது

துண்டு விழும் வீடு கணக்கை

மடை மாற்றி வழி செய்ய

மேலும்

அரைப்படி அரிசியில்

வந்தோர்க்கெல்லாம் விருந்தமைக்க

உதயகாலம் விடியும் முன்னே

உதித்தெழுந்து –தன்

உலகை உயிர்த்திட

கடிகார முள்ளாய் ஓடி ஆடி

வீட்டைக்கிளப்பி தானும் கிளம்பிட

படித்த படிப்பு வீணாகாமல்

தனக்கென ஒரு பாதை வகுத்திட

இரட்டை மாட்டு வண்டி அறிந்து

தடம் பார்த்து தெளிவாய் ஓடிட

ஆட்டோமேட்டிக் காரொன்று வாங்கி

அனைவரையும் இதமாய் கடத்திட

அறிவியல் நாள் ப்ராஜெக்ட் எல்லாம்

அரைநாள் லீவில் அருமையாக்கிட

புரியாத கணக்கு புதிர்களை

புரியவைத்து நம்பிக்கை விதைக்க

PTA மீட்டிங், பிரின்சிபால் வரை

அளவாய் சிரித்து அழகாய் கவர் செய்ய

அபார்ட்மெண்டின் பாலிடிக்ஸ் எல்லாம்

வலைக்கதவிற்கு வெளியே நிறுத்திட

அவளுக்குத்தான் தெரியும்

வலை வீசி தேடினாலும் வலைத்தளத்தில் தேடினாலும்

AI Gen AI என புதிது புதிதாக வந்து நின்றாலும்

தன் தாயை (thaAI- ஐ) ஒத்தவர் எவரும் இல்லை

அவள் அறியா விஷயம் ஒன்றும் இல்லை!

அவளுக்குத்தான் தெரியும்

அவளுக்குத்தான் தெரியும்

இது

வீட்டாரின்

ஒப்புதல் வாக்குமூலம்

மட்டும் இல்லை

பெட்ரோமாக்ஸ் லைட்டையே கேட்டாலும்

பதறாமல் பாங்காய் பார்சல் பண்ணும்

நம் ஆல் இன் ஆல் அழகு ராணி

அம்மாவின்

இன்ஸ்டா DP டேக் லைன் தான்!!