தொடர்கள்
பொது
நாங்களும் கொண்டாடுவோம் அன்னையர் தினம் - ப ஒப்பிலி

20240410203522314.jpg

மேலை நாட்டில் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் பதின் பருவம் வரும் வரைதான் தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். பிறகு குழந்தைகள் தனி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் விலங்குகளில் பிறந்த சில நிமிடங்களிலேயே தனியாக இரை தேடி போக வேண்டியதுதான்.

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஊர்வனங்களில் முதலைகளும், ராஜ நாகங்களும் மிகவும் வித்தியாசமானவை. அதிலும் குறிப்பாக பாம்புகள் இனத்திலேயே ராஜா நாகங்கள் முட்டை இடுவதற்கு மலைப்பகுதிகளில் இருந்து சருகுகள் மற்றும் இலை தழைகளைக் கொண்டு கூடு கட்டி அதில் முட்டைகளை இடும் பெண் ராஜநாகம். முட்டைகள் இட்ட பின் பெண் ராஜநாகம் மிகவும் ஆக்ரோஷமாக முட்டைகளை பாதுகாக்கும். மனிதர்களோ அல்லது உடும்பு போன்ற விலங்கினங்களோ முட்டைகள் அருகில் வந்தாலே பேராபத்தை சந்திக்க நேரிடும். ஏனெனில் ராஜ நாக விஷத்திற்கு முறிவு மருந்து இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்படவில்லை, என்கிறார் ராஜ நாகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் கௌரிசங்கர்.

புலிகளை போன்றே ராஜ நாகங்களும் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. புலிகள் போலவே அதிக வெயில் ராஜ நாகங்களால் தாங்கமுடியாது. எனவேதான் அவை கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கு மேல் உள்ள வனப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன.
20240410203559250.jpg

உலகிலேயே மிகவும் பெரிதான அதிக விஷத்தன்மை உள்ள ஒரே பாம்பு ராஜநாகம் தான். கர்நாடகாவில் உள்ள ஆகும்பேயில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ராஜ நாகங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் அடிக்கடி இந்த ராஜ நாகங்கள் புகுந்து விடும். ஆனால் இது வரை ஒருவரையும் இந்த பாம்புகள் தாக்கியதில்லை, என்கிறார் கௌரிஷங்கர்.

நீண்ட நாட்கள் ராஜ நாகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ரோமுலஸ் விட்டேகர் கூறுகையில் பாம்புகளில் மிகவும் புத்திசாலியானவை ராஜ நாகங்கள். இந்த வகை பாம்புகளின் பார்வை திறன் மிகவும் கூறியதாகும், எனவேதான் மனிதர்களின் நடமாட்டத்தை வன பகுதிகளில் கண்டால் உடனே மனிதர்கள் அவற்றை பார்ப்பதற்கு முன்பே ராஜ நாகங்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடும்.

முதலைகளும் அதே போலதான். பெண் முதலைகள் முட்டைகளை நீர்நிலைகளின் அருகில் உள்ள மணற்பாங்கான இடத்தில் இட்டு விட்டு அதனை மண்ணால் மூடிவிடும். பின்பு இரைதேட நீர் நிலைக்குள் இறங்கிவிடும். உடும்புகளோ அல்லது வேறு ஏதும் விலங்கினங்களோ முட்டைகள் உள்ள பகுதிக்கு அருகில் வந்தால் உடனே தண்ணீரில் இருந்து வெளியே வந்து விலங்குகளை துரத்திவிடும். முட்டைகள் பொறிக்கப்பட்டு குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றை மிக பத்திரமாக தனது இரு தாடைகளுக்கும் இடையில் வைத்துக் கொண்டு நீரில் இறங்கி விட்டு விடும். இதற்குமேல் குஞ்சுகளின் சாமர்த்தியம். அதனால்தான் தக்கன பிழைத்து வாழ்தல் முறை விலங்குகளில் காணப்படுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பெண் பங்குனி ஆமைகளும் இதே முறையைத்தான் கையாளும். கடலிலிருந்து கடற்கரைக்கு வந்து இரவு நேரங்களில் 100 முதல் 140 முட்டைகள் வரை இட்டு விட்டு கடலுக்குள் சென்று விடும். இந்த முட்டைகளிலிருந்து 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் ஆமை குஞ்சுகள் வெளியே வரும். அவை தானாக கடலுக்குள் சென்று பிழைத்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வகையான உயிரினங்களுக்கும் ஒரு பொதுவான குணம் தன் குட்டிகளை/குஞ்சுகளை பிறப்பதற்கு முன் வரைதான் பாதுகாக்கும். பிறந்தபின் அந்த குஞ்சுகள்/குட்டிகள் தங்கள் சுய முயற்சியால் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கை நியதி, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.