தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 10-  பித்தன் வெங்கட்ராஜ்

20240424112544291.jpg

நாம் பள்ளியில் கற்கும் மிகமிக முக்கியமான பாடம் என்னவென்றால், மிகமிக முக்கியமான பாடங்களை நாம் பள்ளியில் கற்கமுடியது என்பதுதான்.

-ஹருக்கி முரகாமி (ஜப்பானிய எழுத்தாளர்)

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் இன்னும் சில நாள்களில் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகளில் சேர்க்கைக்கான பணிகளும் தேடல்களும் எப்போதோ தொடங்கிவிட்டன எனலாம். நாம் கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இப்போது மழலையர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று கற்குமிடங்களில் பல படிநிலைகள் உள்ளன. போலவே, அக்காலத்திலும் இருந்தன. ஆனால், அவை சற்று வேறுபட்டவை. பள்ளி, மன்றம், அவை என்பவையே அவை.

முதலில், பள்ளி என்றால் படுக்கை. பள்ளியறை என்றால் படுக்கையறை. பள்ளி கொள்ளுதல் என்றால் உறங்குதல். பிறகெப்படிக் கல்விகற்கும் இடத்திற்குப் பள்ளி என்று பெயர் வந்தது என்று நாம் யோசிக்கலாம். இப்போது, உண்டு உறைவிடப் பள்ளி அதாவது Residential school என்று தனியே பள்ளிகள் உள்ளன அல்லவா!. ஆனால், அப்போது எல்லாமே உண்டு உறைவிடப் பள்ளிகள்தாம். அதாவது, கல்விகற்கும் இடமே உண்டு உறங்கும் இடமாகவும் இருந்தது. அதாவது பள்ளிகொள்ளும் இடமாகவும் இருந்தது. அக்காரணத்தாலேயே அவ்விடம் பள்ளி என்றே அழைக்கப்பட்டது. அங்கு எண்ணும் எழுத்தும், பிற கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டன. பள்ளி பற்றிய சங்கப்பாடலைப் பார்க்கும்முன் மற்றவை பற்றிப் பார்த்துவிடுவோம்.

2024042411265251.jpg

மன்றம் என்பது கற்ற கல்வியை, கலைகளை அரங்கேற்றி அடுத்தடுத்த நிலையை அடையும் இடம் எனப்படுகிறது. கீழ்வரும் புலவர் மோசிகீரனாரின் பாடல்வரிகளைப் பாருங்கள்.

'அன்னாய் இவன் ஓர் இளம் மாணாக்கன்

தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?' - குறுந்தொகை 33

'அன்னை போன்ற தோழியே! இவன் ஓர் இளம் மாணவன்போல உள்ளான். அவனது ஊரில் உள்ள மன்றத்தில் எந்த நிலையில் உள்ளவனோ தெரியவில்லை' என்கிறாள் தலைவி. அதாவது, 'பார்த்தா படிக்கிற பையன் மாதிரி இருக்கான். எத்தனாங் கிளாஸ் படிக்கிறவனோ தெரியலை' என்று சொல்வதுபோல்தான் அது.

20240424112852204.jpg

அடுத்தது அவை. அவை என்பது சான்றோர்கள் நிறைந்த இடம். இங்குக் கல்வி சார்ந்த, அறிவுசார்ந்த, நீதி சார்ந்த விவாதங்கள் நிகழ்த்திப் பின் முடிவுகள் எட்டப்படும். கீழ்க்காணும் மதுரைக்காஞ்சி வரிகள்‌ ஓர் அவை பற்றிக் கூறுகின்றன.

‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீங்கிச்

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்

சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும்' (மதுரை- வரிகள்: 489-492)

அச்சம், துன்பம், பற்று இவையெதுவுமில்லாமல், கோபமோ மகிழ்ச்சியோ எதையும் காட்டாமல், எமனைப்போல் நேர்மையாக இருந்து சிறந்த அறத்தை, முடிவைக் கூறும் அவை என்பது பொருள்.

சரி, மீண்டும் பள்ளிக்குப் வருவோம். மதுரைக் காஞ்சியில் ஓர் அழகான காட்சி.

'திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை

ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்

தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்

தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்

காமர் கவினிய பேரிளம் பெண்டீர்

பூவினர் புகையினர் தொடுவனர் பழிச்சிச்

சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்' - (மதுரை - வரிகள்: 461-467)

'கதிர்போல ஒளிவீசக்கூடிய அணிகலன்களை உடைய ஒரு பெண்ணும், அவள் புணர்ந்து முயங்கும் அவளது கணவனும், தேன்கொண்ட தாமரை மொட்டைக் கையில் பிடித்திருப்பதுபோலத் தம் பிள்ளைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்காக, பூக்களைத் தூவி, தூபமிட்டுத் தொழுதல் நடத்தும் சிறந்த பௌத்தப் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர்' என்றொரு காட்சியைத் தருகிறார் புலவர். அம்மாவும் அப்பாவும் தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அட்மிஷன் போடச் செல்லும் காட்சிபோலவே இருக்கிறதல்லவா!.

பௌத்தப் பள்ளியைப் போலவே அந்தணர் பள்ளி, அமண் பள்ளி அதாவது சமணர் பள்ளி ஆகியவை பற்றியும் மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது.

அக்காலப் பள்ளிகளை அழகுபடச் சொல்லி நம் கண்முன் நிறுத்திய மதுரைக்காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனார், மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் தமிழவையில் தலைவராகவும் இருந்துள்ளார் என்பதைப் புறநானுற்றுப் பாடல் 72இன் மூலம் அறிகிறோம். அவ்வகையிலும் சேர்த்துத் தமிழவையின் தலைவர்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் படிப்போர் அனைவர்க்கும் ஒரு சிறந்த கல்விச்சாலையாக விளங்கும் நம் தமிழுக்கு இது பத்தாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்..‌.