தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் -10 - பொன் ஐஸ்வர்யா

20240424115658875.jpg

புளோரிடா கடற்கரைகள்:

அமெரிக்காவின் தென்கோடி மாநிலம் புளோரிடா.

இது அமெரிக்க மக்கள் அதிகம் விரும்பும் ஓய்வு ஸ்தலங்கள் நிரம்பிய பகுதி. இங்கேதான் உலகப்புகழ்பெற்ற டிஸ்னி வேர்ல்ட் அமைந்துள்ளது. டிஸ்னிவேர்ல்டுக்கு அடுத்த படியாய் பெயர் பெற்றது அட்லாண்டிக் கடல் வளைகுடா பகுதிகளில் அமைந்த நீண்ட அழகிய கடற்கரைகள். டாம்பா தொடங்கி மியாமி வரை ஏராளமான பீச்சுகள்.

20240424115915451.jpg

அவற்றில் ஒன்றான க்ளியர்வாட்டர் பீச்சைப் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினோம். புளோரிடாவின் மேற்கு மத்திய கடற்கரையில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ளது க்ளியர் வாட்டர் பீச். “க்ளியர் வாட்டர்” என்பது பெயரடை அல்ல, “பெயர்ச் சொல்”. இந்த இடத்தின் பெயரே க்ளியர் வாட்டர். க்ளியர் வாட்டரில் பன்னாட்டு விமான நிலையமும் உண்டு. இது டவுன்டவுன் டம்பாவிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்து உள்ளது. டாம்பாவிலிருந்து க்ளியர்வாட்டர் செல்லும் வழியில் causeway எனப்படும் தரைப்பாலம் வழியே சென்றோம். இது சுமார் 15 கிலோமீட்டர் நீளம். அமெரிக்க நகரங்களில் வானுயர்ந்த கட்டிடங்களைப் போலவே தீவுகளை இணைக்கும் நீண்ட நெடிய causeway தரைப்பாலங்களும் பிரசித்தி பெற்றவை.

உலகின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக க்ளியர்வாட்டர் தீவுப்பகுதியில் பரந்துபட்ட ரிசார்ட்கள் நிறைந்துள்ளன. அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் கோடை காலத்தில் இங்கு வந்து குவிகின்றனர். ஹயாத், ஹில்டன், மெரிடியன் போன்ற புகழ்பெற்ற ஹோட்டல் நிறுவனங்கள் பிரமாண்டமான நட்சத்திர விடுதிகளை இங்கே எழுப்பி இருக்கின்றன.

20240424120042875.jpg

வளைகுடாவை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீள வெள்ளை வெளேர் கடற்கரை. பீச் நெடுக சர்க்கரை-வெள்ளை மணல், அலைகள் இல்லாத தெள்ள தெளிந்த கடல் நீர். இளஞ்சூடான சூரிய ஒளி, சூரிய அஸ்தமன காட்சிகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இது அமெரிக்காவின் சிறந்த கடற்கரையாகவும், உலகின் ஆறாவது சிறந்த கடற்கரையாகவும் கருதப் படுகிறது.

இப்பகுதியில் ஷாப்பிங், உணவகங்கள் நிறைய உள்ளன. நாங்கள் வீட்டிலிருந்தே உணவு தயாரித்து எடுத்து சென்றிருந்தோம். அதை பிரித்து வைத்து சாப்பிட முடியாத அளவுக்கு Seagulls எனும் கடற்பறவைகள் ஏராளமாய் எங்களைச் சுற்றி வட்டமிட்டன. பிட்டு பிட்டு பறவைகளுக்கும் பகிர்ந்து கொடுத்ததில் குழந்தைகள் அதிகம் சந்தோஷப் பட்டன.

பாராசெயிலிங், ஜெட் படகு சவாரிகள் சற்று தூரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அலங்கரிக்கப்பட்ட "பைரேட் ஷிப்" பயணம் இங்கே முக்கிய சுற்றுலாக் கவர்ச்சி அம்சம். சில நேரங்களில் கரையை ஒட்டிய பகுதிகளில் டால்பின்கள் துள்ளி வந்து சர்ப்ரைஸ் விசிட் கொடுப்பதும் உண்டு. மிகவும் மென்மையான வெண்மையான தூள் போன்ற மணலில் நடப்பது, அழகிய சூரிய அஸ்தமனத்தைக் காண்பது அரிய அனுபவம். இந்த இனிய அனுபவத்திற்காக மற்ற எந்த பீச்சையும் விட இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

இதே வரிசையில் இன்னொரு பிரசித்திப் பெற்ற கடற்கரை “சியஸ்டா” பீச். இதுவும் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கிளியர் வாட்டர் பீச்சிற்கு சற்று கீழே அமைந்துள்ளது. இங்கும் ஒரு நாள் பகோடா, ஸ்நாக்ஸ் எல்லாம் செய்து கையில் எடுத்துக்கொண்டு நண்பர்கள் சூழ சென்று விட்டோம். அதிசயமாக இலவச பார்க்கிங் வசதி இங்கே இருந்தது.

இந்தப் பகுதி படகு சவாரிகளுக்கு சிறந்த இடமாக விளங்குகின்றது. சியஸ்டா பீச் அமெரிக்காவில் உள்ள கடற்கரைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஒன்று. இங்கு கடற்கரைக்கு அருகில் உள்ள அதன் ஆழமற்ற அலைப் பகுதி மற்றும் ஆண்டு முழுவதும் உயிர்காக்கும் பாதுகாப்பு வசதி போன்றவை குழந்தைகளோடு குடும்பமாய் வருபவர்களுக்கு உகந்த இடம். வந்ததும் சின்னதாய் கூடாரம் அமைத்து, மடக்கு சேர்கள் விரித்துப்போட்டு அமர்க்களப் படுத்தும் குழுக்களைப் பார்க்கலாம்.

குழந்தைகள் வரிசையாய் மணல் வீடு/கோட்டை கட்டி குதூகலித்து விளையாடுவது கண்கொள்ளா காட்சி. இங்கும் பிரமிக்க வைக்கும் வெள்ளை குவார்ட்ஸ் மணல்தான். மீன்பிடித்தல் முதல் பாராசெய்லிங் வரை நிறைய அவுட்டோர் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.

சரசோட்டா “பைக் டூர்ஸ்” மூலம் சியஸ்டாவின் கடற்கரை மணற்பரப்பில் மின்சார பைக்கை ஓட்டி மகிழும் மக்கள் ஒருபுறம். நிகரற்ற வளைகுடா கடற்கரை சூரிய அஸ்தமனத்தைக் காண்பதற்கு சன்செட் பாயிண்ட். நீண்ட கடற்கரையில் பாராசெய்லிங் சாகச விளையாட்டுகள் மறு புறம்.

இன்னும் தொடர்து கடலோர சாலையில் பயணித்தால் மியாமி சென்று விடலாம்.

மத்திய புளோரிடாவின் அழகிய வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள டாம்பா விரிகுடா கடல் ஆய்வுக்கு ஒரு உயிரோட்டமான இடமாகும். இங்கிருந்து மேற்கு கரீபியனின் தீவுகளுக்கு தினசரி நிறைய சுற்றுலா கப்பல்கள் செல்கின்றன. அடுத்த முறை குரூஸ் கப்பலில் பஹாமஸ் போன்ற கரீபியன் தீவுகளுக்கு பயணம் செயய வேண்டும்!

பயணம் தொடரும் ….