தொடர்கள்
அனுபவம்
பூக்கள் பூக்கும் தருணம் மரியா சிவானந்தம்

20240424194424739.jpg

நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ?

எனக்கு லேசாதாங்க நினைவுக்கு வருகிறது . ஐந்து வயதானதும் கிராமப்பள்ளியில் 'ஒன்னாப்பு' சேர்த்தாங்க .வலது கையை எடுத்து ,தலையைச் சுற்றி வந்து இடது காதைத் தொட வேண்டும். சரியா தொட்டு விட்டால் உடனே அட்மிசன். ஐந்து வயது நிறைந்ததுக்கான சோதனை அது . அதைத் தவிர பெயர் மட்டும் கேட்டிருப்பங்களோ ?நினைவில்லை . வேறு நுழைவுத் தேர்வு கிடையாது.

என் பிள்ளைகளைச் எல் கே ஜி சேர்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது. மகளைச் சேர்க்கும் போது பெற்றோருக்கும் தனியாக ஒரு இன்டர்வியூ வச்சாங்க. நான் ஆபிஸ்க்கு சேரும் போது சந்தித்த இன்டர்வியூக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அது. "What is the nature of your work ?" என்று கூட கேட்டாங்க .நானும் ஐநூறு சொற்களுக்கு மிகாமல் விளக்கி கூறினேன் . கணவருக்கும் அதே போல வேறு வேறு கேள்விகள் ..

20240424194528409.jpg

மகளிடம் ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று நிறங்கள் ,உருவங்கள் , பறவைகள் , மிருகங்கள் என்று அடையாளம் காட்டச் சொன்னார்கள் .அவளது மொழித்திறனைச் சோதித்தார்கள் .சின்ன சின்ன கேள்விகள் கேட்டார்கள் ."அபியும் நானும்" திரைப்பட காட்சி போலத்தான் இருந்தது அது. நாம் தான் முதலிலேயே செமையா பயிற்சி கொடுத்து அழைத்துப் போனோமே. அட்மிசன் கிடைத்து விட்டது .

முதல் நாள் வகுப்புக்கு மகளை அழைத்துப் போன போது தைரியமாக சென்றாள். ஆனால் மற்ற குழந்தைகள் அழுவதைப் பார்த்து அவளும் அழ ஆரம்பித்தாள் . சன்னல் வழியாக கலவரத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த மிஸ் பாவம்.அழுகிற குழந்தையை சமாதானப்படுத்த ஒவ்வொருவராக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டார்கள். சாக்லேட் கொடுத்தார்கள் . பாட்டுப் பாடி நடனம் ஆடினாரகள். பிள்ளைகளின் அழுகை ஓயவே இல்லை

20240424194619265.jpg

கொஞ்ச நேரம் கழித்து இன்டர்வல் விட்டார்கள். மகள் சிரித்துக் கொண்டே வந்தாள் . என்னவென்று கேட்டேன் ."பக்கத்தில் ஒரு பையன் பீடிங் பாட்டிலில் பால் குடித்தான் " என்று விழுந்து விழுந்து சிரித்தாள் .

நான்கு வருடங்களுக்குப் பின்னர் மகனைப் பள்ளியில் சேர்த்தது அத்தனை சிரமம் இல்லை..மகள் படித்த பள்ளியில் தான் சேர்த்தோம் . அக்காவுடன் ஜாலியாக போனான் .இப்போது மகள் வீட்டுக்கு அழுதுக் கொண்டே வருகிறாள்."என்னாச்சு?" என்று கேட்டால் ,"தம்பி அவன் க்ளாசில் உட்காருவதில்லை .என் வகுப்பில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.எனக்கு கஷ்டமாக இருக்கிறது " என்றாள் .

நினைத்தாலே இனிக்கும் தருணம் , நாம் பள்ளியில் படித்த தருணம். நம் பிள்ளைகளைப் படிக்க வைத்த நினைவுகளும் உள்ளத்தின் அடி ஆழத்தில் மென் தென்றலாக வீசிக் கொண்டு இருக்கின்றன. அவர்களோடு நாம் சேர்ந்து கற்றது , கற்பிக்க உதவியது எல்லாமே சாரலாக பொழிந்து , குளிர்விக்கிறது .

20240424194816163.jpg

இப்போது காலம் மாறி விட்டது .குட்டித் தலைமுறையினர் எல் கே .ஜிக்கு முன்பு இன்னும் இரண்டு வகுப்பு படிக்கிறார்கள் . ஒன்று பேபி கிளாஸ் , அடுத்தது பிரி கே ஜி . இது இரண்டும் முடித்த பின்னரே எல் கே .ஜி .அதன் பின் யூ கே ஜி . அப்புறமாத்தான் நாம் படித்த "ஒன்னாப்பு "பெரிய பள்ளிகளில் மாண்டிசோரி வழி நடத்தும் பள்ளிகளில் இந்த வகுப்புகளை M1, M2, M3, M 4 என்கிறார்கள் . எனவே "ஒன்னாப்பு" படிக்கும் முன் நான்கு படிகளைத் தாண்ட வேண்டும் .

இந்த பேபி கிளாஸ் அல்லது பிளே ஸ்கூலில் ,சின்ன சின்ன விஷயங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் .. "சூச்சு" போக வைப்பது (Toilet training) , டப்பாவைத் திறந்து பிஸ்கட் சாப்பிட வைப்பது , தானே தண்ணீர் குடிக்க வைப்பது என்று பயிற்சி தருகிறார்கள் .கூடவே எழுத்துக்கள் ,எண்கள் ,பாடல்கள் ...

20240424194927370.jpg

.ஊரெங்கும் , தெருவெல்லாம் பிளே ஸ்கூல்கள் நிறைந்து இருக்கிறது . அதிலேயும் brand name பார்த்துதான் சேர்க்க வேண்டி இருக்கிறது . இரண்டு மணி அல்லது இரண்டரை வகுப்புக்கு குறைந்தது 35k அல்லது 40k வரை செலவாகும் . இரண்டரை வயது குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு ரிடையர் ஆன தாத்தா அல்லது பாட்டி மெல்ல நடந்து செல்வதை நீங்கள் அன்றாட காட்சியாக காணலாம் .

பள்ளி முடிந்ததும் அவர்கள் அங்கேயே உட்கார்ந்து , குழந்தை சாப்பிடாமல் மீதம் வைத்த பிஸ்கட்டையோ,நொறுக்குத் தீனியையோ சாப்பிடும் கவிதைத்தனமான காட்சியை காணும் போது நமக்கு சிலிர்ப்பாக இருக்கும் . குழந்தையோடு, குழந்தையாய் தம் மழலைப்பருவ மகிழ்ச்சிகளை மீண்டும் அவர்கள் அனுபவிப்பது நெகிழ்ச்சியாக இருக்கும் .

சின்னச் சின்ன அரும்புகள் மெல்ல மொட்டவிழ்த்து பூவாக மலரும் தருணம் ஆரம்ப பள்ளி பருவம்.

பயமும் , மிரட்சியும் கொண்டு சின்ன வகுப்பில் சேரும் பிள்ளைகள் மிக அற்புதமாக வளர்ந்து ,அறிவும் தெளிவும் கொண்டு பள்ளி விட்டு வெளி வருவது பெருவிந்தை .இம்மாற்றத்தை அருகிருந்து ரசிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பேறு பெற்றவர்கள் .

பூக்கள் பூக்கும் தருணம்..இம்மண்ணில் இது இணையில்லாதது .எம்மொழியிலும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சுகமான அனுபவம் இது .