தொடர்கள்
பொது
மானாம்பள்ளி அனுபவம் - ப ஒப்பிலி 

20240424210519705.jpg

வால்பாறை: கடந்த வாரம் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கலாம் என முடிவு செய்து நண்பர் சுதர்ஷனுடன் வால்பாறை சென்றேன். சென்னை வெய்யிலிருந்து தப்பிப் பதற்கே இந்த பயணம். கோவையிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம். பின்பு அங்கிருந்து மானாம்பள்ளி வனப்பகுதிக்கு. இந்த பகுதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு அலைபேசி டவர் கிடையாது, அதனால் எந்த ஒரு செல்போனுக்கும் தொடர்பு கொள்ள முடியாது.

மானாம்பள்ளி வனப்பகுதி யானைகள் அதிகம் நடமாடும் ஒன்றாகும். இங்கு ஆற்றில் இருந்து நீரை இறைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் மின்வாரிய குடியிருப்பு உள்ளது. ஐம்பது குடும்பங்களுக்கு மேல் இங்கு வசித்து வருகின்றனர். இந்த மானாம்பள்ளி காட்டில் வசிப்பவர்களின் ஒரு நாள் பொழுது காலை ஒன்பது மணிக்கு மேல் தொடங்கி மாலை ஆறரை மணி அல்லது அதிகபட்சமாக ஏழு மணிக்குள் முடிந்துவிடும். ஏனெனில், தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தவுடன் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து விடும். இது தவிர அட்டைகள் (leach) அதிக அளவில் இருக்கும். இந்த இரண்டு தொல்லைகளை தவிர்க்கவே இங்கு இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கொள்வார்கள்.

ஆனால் சென்னையில் இருந்து செல்லும் என் போன்ற வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இரவு நேரம் வெளியில் சுற்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் இரவு நடமாட்டத்தின் போது யானை, காட்டு மாடு (Indian Gaur), சிறுத்தை, கரடி மற்றும் மான் வகைகளை காண முடியும். இம்மாதிரி இரவில் சுற்றும் பொழுது வனத்துறையின் வனக்காப்பாளரோ (Forest Guard) அல்லது வனவர் (Forester) உடன் கட்டாயமாக இருப்பார்கள். அவர்கள் கூட வரும்பொழுது எந்த பகுதியில் என்ன மாதிரியான விலங்குகளை காணலாம் என்று விளக்குவார்கள். மேலும் இவர்களுடன் வெளியில் செல்லும் பொழுது சரியான பாதுகாப்பு கிடைக்கும்.

முதல் நாள் மானாம்பள்ளியில் இருந்து மந்திரிமட்டம் என்ற வனப்பகுதிக்கு சென்று வந்தோம். இங்கு வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஒரு முகாம் உள்ளது அங்கு ஒரு மணி நேரம் இருந்து விட்டு மீண்டும் மானாம்பள்ளிக்கு திரும்பி வந்தோம். இரண்டாவது நாள் மதிய உணவை முடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது வனக்காவலர் கதிர்வேல் மலைவாழ் மக்கள் வசிக்கும் கூமாட்டி பகுதிக்கு லாரியில் செல்கிறேன் வருவதானால் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

கூமாட்டி பகுதி டாப் ஸ்லிப் பிற்கும் (Topslip) மானாம்பள்ளிக்கும் இடைப்பட்ட வன பகுதியில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் குடியிருப்பு பகுதி. இங்கு மொத்தம் இருபத்தி இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு கல்லால் ஆன வீடுகள் கட்ட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மண் கொண்டு செல்ல இருந்த லாரியில் தான் பயணம். சும்மாக பொழுதை கழிப்பதற்கு பதில் கூமாட்டி வரை சென்று வரலாம் என முடிவு செய்து நானும் சுதர்ஷனும், கதிர்வேலுடன் கிளம்பிவிட்டோம்.

20240424210709479.jpg

கிட்டத்தட்ட 35 டன் மணலுடன் லாரி அந்த காட்டுப் பாதையில் அதிக குலுக்கல்களோடு ஆடி அசைந்து சென்றது. லாரி டிரைவர் சபரி மிகவும் லாவகமாக அந்த மலைப்பாதையில் வண்டியை செலுத்தினார். இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கூமாட்டியை அடைந்து விடலாம் என்ற நிலையில், திடீரென லாரியின் பின் பக்க டயர்கள் சேற்றில் சிக்கிக்கொண்டு சுழன்று கொண்டே இருந்தது. பல முறை முயற்சித்தும் அந்த சேறான பகுதியில் இருந்து லாரி நகர மறுத்தது.

மெதுவாக பொழுது ஏறிக்கொண்டே சென்றது. லேசான தூறல் ஆரம்பித்து விட்ட நிலையில், ஓட்டுனரின் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. நான்கு மணி அளவில் சிக்குண்ட லாரி ஒரு மணி நேரத்திற்கும் மேல் நகர மறுத்து வம்பு செய்து கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக எனக்கு மனதில் ஒரு பயம் சூழ ஆரம்பித்தது. ஏனெனில் லாரி சிக்குண்ட பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணம்.

கடைசியில் ஓட்டுநர் சபரீஷ் வன காவலர் கதிர்வேலிடம் லாரியில் உள்ள மொத்த மணலில், பாதியை வந்த பாதையிலே கொட்டிவிட்டு, வீடு கட்டும் ஒப்பந்ததாரரை (contractor) ஒரு டிராக்டர் கொண்டு வந்து கொட்டிய மணலை அள்ளிச்சென்று விட சொல்லலாம் என யோசனை கூறினார். உடனே லாரியில் இருந்த மணலில் பாதியை கொட்டிவிட்டார்.

ஒரு வழியாக கூமாட்டி பகுதிக்கு சென்று மீதம் இருந்த மணலை கொட்டி விட்டு மானாம்பள்ளி திரும்பும் பொழுது நன்றாக இருட்டி விட்டது. பல முறை இரவினில் வனப்பகுதிக்குள் சுற்றியிருக்கிறேன் ஆனால் இது மாதிரி ஒரு திக் திக் அனுபவம் இது வரை கிட்டியதில்லை.