தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 13 -பித்தன் வெங்கட்ராஜ்

20240513165152381.jpg

உங்கள் ஆன்மாவிலிருந்து செயல்களைச் செய்யும்போது உங்களுக்குள் ஒரு நதி ஓடுவதை உணர்கிறீர்கள், அதுவே மகிழ்ச்சி.

-ரூமி.

நம் தமிழ்நாட்டின் முக்கிய நதியான பொன்னியைப் பற்றி இந்தவாரம் பார்ப்போம். ஆம், போன வாரம் பொன். இந்த வாரம் பொன்னி. அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம், “பொன்னிநதி பாக்கணுமே”பாடல் ஆகியவை நம் காவிரிக்குப் பொன்னி என்னும் மற்றோர் அழகான பெயர் இருப்பதை இந்தத் தலைமுறையினர்க்கு எடுத்துரைத்துள்ளன.

இந்நதி பொன்னி என்றழைக்கப்படக் காரணம் என்னவாயிருக்கக்கூடும் என்றெண்ணிக்கொண்டிருந்தபோது கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்

றிசைதிரிந்து தெற்கேகினுந்

தற்பாடிய தளியுணவிற்

புட்டேம்பப் புயன்மாறி

வான்பொய்ப்பினுந் தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும்"

-பட்டினப்பாலை - வரிகள்: 1-7

என்று பாடிக்கொண்டே போனார்.

அதாவது, 'குற்றமில்லாத ஒளியுடன் விளங்குகின்ற வெள்ளி விண்மீனானது பொதுவாக வடக்குத் திசையில் இருக்கும். அது தெற்குத் திசைக்கு வந்துவிட்டால் இனி மழைபொழியாமல்போய் வறட்சி ஏற்படும். அப்போது மழைநீரை உணவாகக்கொள்ளும் ‘கொண்டைக் குயில்’ என்னும் வானம்பாடி வகைப் பறவையும் அருந்த மழைநீர் இல்லாமல் வருந்தும். இப்படி வானம் மழைபெய்யாமல் பொய்த்துப்போனாலும், மலைமீது பிறந்து பரவிப் பின் கடலில் கலக்கும் காவிரியாறு பொய்க்காமல் ஓடிப் பொன்கொழிக்கும்' என்கிறார் அப்புலவர்.

20240513165235519.jpg

இதே கருத்தை 'இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட' என்று வெள்ளைக்குடி நாகனார் புறாநானூற்றின் 35ஆம் பாடலிலும், 'விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்' என்று சிலப்பதிகாரத்தில் நாடுகாண்காதையில் இளங்கோவடிகளும், 'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை' என்று மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனாரும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் குறிப்பிடாத ஒரு குறிப்பை மேலே பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் நமக்குத் தந்திருக்கிறார். அஃதாவது, 'காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும்' என்கிறார் அவர்.

20240513165946299.jpg

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால், பொதுவாகத் தங்கம் இரண்டு வழிகளில் கிடைக்கின்றது. ஒன்று பாறைப்படிமங்களில் இருந்து கிடைப்பது. சுரங்கங்கள் தோண்டி அவற்றை அகழ்ந்தெடுத்துப் பிரித்தெடுக்கவேண்டும். இன்னொன்று ஆற்றுப்படுகைப் படிமங்களிலிருந்து கிடைப்பது. அதனை ‘வண்டல் தங்கம்’ என்பர். இதுவும் பாறைப் படிமங்களிலிருக்கும் தங்கம்தான். ஆனாலும், அவற்றை நாம் வெட்டி எடுப்பதற்குப் பதில், அவை பல தட்பவெப்ப நிலைகளுக்குட்பட்டு, அரிக்கப்பட்டு, ஆறுகளால் அடித்துக்கொண்டுவரப்பட்டு ஆற்றுப்படுகைகளில் படியவைக்கப்படும். அவற்றை எடுத்து அலசி, கழுவி அதிலுள்ள தங்கத்துகள்களைப் பிரித்தெடுக்கவேண்டும். அண்மையில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான 'ஜப்பான்' திரைப்படத்தில் இவ்வழியில் தங்கத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறையையும், அதையே குலத்தொழிலாகக் கொண்டோரின் வாழ்வையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். (படத்தில் தங்கநகைக் கடைக் கழிவுநீரிலிருந்து பிரிப்பதாகக் காட்டியிருந்தாலும், வழிமுறைகள் ஒன்றே!)

20240513165339539.jpg

சரி, இதற்கும் காவிரிக்கும் என்ன தொடர்பு?

கோலார் தங்கச் சுரங்கத்தை ஒட்டி ஓடும் இந்தக் காவிரியின் ஆற்றுப்படுகையில் தங்கம் கிடைத்தது என்றால் அதில் நாம் வியப்படைய ஒன்றுமே இல்லையல்லவா!. இப்படி இந்த ஆற்றுப்படுகையில் பொன் கிடைத்ததால்தான் அந்நதிக்குப் பொன்னி என்றே பெயரிட்டனர் தமிழர் எனலாம்.

அப்படியானால் காவிரி என்றால் என்ன? கா என்றால் சோலை. விரி என்றால் பெருக்குவது, வளமாக்குவது. நதி பாய்ந்து சோலைகளைப் பெருக்கி வளமாக்குவதால் காவிரி எனப் பெயர்பெற்றிருக்கலாம் என்கின்றனர் சொல்லாய்வறிஞர்கள்.

காவிரி உருவாகும் இடமான குடகு மலையிலிருந்து எங்கெல்லாம் பாய்ந்து அவ்விடங்களை வளப்படுத்துகிறது என்று பாடி, அக்காவிரியைப்போன்ற வள்ளலே என்று ‘இதயக்கனி’ திரைப்படத்தில் புலவர் புலமைப்பித்தன் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் போற்றியிருப்பார். அவரினும் சற்று வித்தியாசமாய் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் தாமப்பல் கண்ணனார், சோழன் நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தானைக் கீழ்க்கண்டவாறு வாழ்த்துகிறார்.

"'...சிறக்க நின் ஆயுள்

மிக்கு வரும் இன் நீர்க் காவிரி

எக்கர் இட்ட மணலினும் பலவே!"

-புறம் 43- வரிகள்: 21-23

'பொங்கிவரும் இனிமையான நீரைக்கொண்ட காவிரி ஆறு ஏற்படுத்திய மேடுகளிலுள்ள மணற்துகள்களின் எண்ணிக்கையைவிட அதிக ஆயுள்பெறுவாயாக' என்று வாழ்த்துகிறார்.

“மாய்ந்தபின் மண்ணாகிப் போவது மனித உடல். மண் அல்லாததுதான் மணல் “ என்பார் இசைஞானி இளையராஜா. அப்படி, ‘மண்ணல்லாத மணல் துகள்களைவிட அதிகமாக மன்னவன் ஆயுள் நீளவேண்டும்’ என்று பெரும்புரிதலோடு வாழ்த்திய புலவர் தாமப்பல் கண்ணனார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும், நமக்கும், யாவர்க்குமாய் என்றென்றும் இருந்து, காவிரி குவித்த மணல்மேடுகளின் மணற்துகள்களைவிட அதிக ஆயுள்கொண்ட நம் தமிழுக்கு இது பதின்மூன்றாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.