தொடர்கள்
அனுபவம்
ஒரு இளநீர்க் காலை - மயிலை கிரிவாசன்

20240514054017758.jpeg

கென்னடி ஸ்ட்ரீட் இடதுபுறம் திரும்பினால் நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட். வலது புறத்தில்லஞ்ச் சர்ச். திரும்பாமல் நேரே சென்றால் இடதுபுறம் நாகேஸ்வரராவ் பார்க். வலது புறத்தில் உள்ள பிளாட்பாரத்தில், (எனக்குத் தெரிந்து 20 வருடங்களாக), கட்டாயம் 30 வருடங்களுக்கு மேல் இளநீர் தள்ளு வண்டி மேல், ஆனால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு வியாபாரம் செய்து கொண்டிருப்பவர் பெரிய கருப்பன்.

நான் இளநீர் குடிக்கும் விஷயத்தில் Regularly irregular. குடித்தால் நல்லது என்று தெரியும். ஆனால் Atomic habits புத்தகத்தில் Jame clear கூறியது போல் இன்னும் கிளியராக ஹாபிட்வரவில்லை. பெரிய கருப்பன் இளநீர் கடைக்கு எதிரில் உள்ள பிரஸ் டுடேவில் தான் அடிக்கடிகாய்கறி வாங்குவேன் என்பதால், வரும்போதும் போகும்போதும் அவரைப் பார்த்துஎப்போதாவது புன்னகை செய்வேன். அவரும் “என்ன அண்ண! அடிக்கடி வருவதில்லை!”என்பார். மெட்ரோ தோண்ட ஆரம்பித்ததில் இருந்து அந்த வழியை உபயோகிப்பதுகுறைந்துவிட்ட காரணத்தால், கடந்த ஐந்து மாதங்களில் 10 அல்லது 15 தடவை மட்டுமேஅவரிடம் இளநீர் வாங்கி இருப்பேன்.

பெரிய கருப்பனின் இளநீர் கடை உள்ள இடம் நல்ல உயரமான ஸ்டெர்குலியா ஃபோடிடா (Sterculiafoetida) மரத்தின் கீழ் சற்று நிழல் வசதியுடன் இருக்கும். (உனக்கு எப்படி தெரியும் மரத்தின் பெயர்? என்றுகேட்பவர்களுக்கு: ஒரு முறை மரத்தின் கீழ் விழுந்த ஒரு காயை பார்த்தவுடன் ஏற்பட்ட கியூரியாசிட்டியில், அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் கேட்டு வைத்திருந்தேன்.) எல்லா இளநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள்நின்று கொண்டு தான் குடிப்பார்கள். ஆனால், பெரிய கருப்பன் கடையின் பின்புறம் உள்ள ஒரு பர்னிச்சர்கடையினுடைய காம்பவுண்ட் அருகில் நான்கடி நீளம் உள்ள மரக்கட்டையும், அதன் கீழே தாங்குவதற்கு சிலடிரம்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பெஞ்ச் அமைப்பு. அங்கு நிறுத்தி இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அதன்மேல் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம் பெரிய கருப்பன் என்னை அதில்உட்கார்ந்து குடிக்க சொல்லி இருக்கிறார். ஆனால், இப்போது பிளாட்பாரத்தை விரிவுபடுத்த

செப்பணிட்ட போது அது எடுக்கப்பட்டிருக்கிறது.

எப்போதாவது நேரம் கிடைக்கும் போது, பெரியகறுப்பனிடம் சற்று பேசியிருக்கிறேன். அறந்தாங்கியைச் சேர்ந்தஅவர், பல்வேறு வேலைகளை சென்னையில் செய்துவிட்டு, கடைசியில் இந்த தொழிலை எடுத்திருக்கிறார். 70 வயதை தாண்டிய அவர், ஒரு முறை தான் சிறிய வயதில் சாப்பிட்ட கம்பு ,கேழ்வரகு முதலிய சத்து மிகுந்ததானியங்களை பற்றி கூறியிருக்கிறார். அவ்வளவுதான் !எங்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தைகள் குறைவாகவேஇருக்கும். பெரிய கருப்பன் பார்ப்பதற்கு சற்று கடுமையான தோற்றத்தை தந்தாலும், இளவயது இளைஞர்கள்சாப்பிட வரும்போது, அவர்களிடம் இளநீரின் பயன்களை கூறுவதை கேட்டிருக்கிறேன்.

மூன்று நாட்களுக்கு முன்னால், நான் வீட்டில் வரவிருக்கின்ற விருந்தினர்களுக்காக, இரண்டுஇளநீரை பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்த போது, அவருடைய பாக்கெட்டில்இருந்த நோக்கியா ஏதோ பாடிக் கொண்டிருந்தது. நான், “என்ன பெரிய கருப்பன்! எம்ஜிஆர் பாட்டு கேக்குறீங்களா?!” என்றேன். அவர் “என்ன பாட்டுன்னு தெரியாதுங்க! ஏதோபாடுது நான் கேட்டுட்டு இருப்பேன்!”

“ நம்மகிட்ட யார் பேசுறாங்க!. வழுக்கையா! தண்ணியா தோசை பதமா! பத்து ரூபாகுறைச்சு குடுங்க! இதைத்தவிர வேற பேச்சு கிடையாது” என்றார். நான் எனக்கு அப்போதுதோன்றிய எங்கள் தங்கம் படத்தின் எம்ஜிஆர் பாட்டை முணுமுணுத்து விட்டு நகர்ந்தேன்.

இன்று, சவேராவிலிருந்து திரும்பியவுடன், ஹேபிட் ஸ்டாக்கிங் (Habit Staking) பண்ணவேண்டும் என்று முடிவு செய்து, பெரிய கருப்பன் கடைக்கு சென்று, அவர் இருக்கும் இடத்தில்இருந்து பத்தடி தூரத்தில், கவுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தெர்மோகோல் டப்பாவின் மேல், அமர்ந்து நெட்டை ஆன் செய்து whatsapp பார்த்தேன். அவர், நின்று கொண்டிருந்தஒருவருக்கு இளநீர் வெட்டி கொடுத்துவிட்டு, என்னிடம் வந்து இளநீரை தந்தார். நான்இளநீரை குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, மீண்டும் அருகில் வந்து, பிளாட்பாரத்திற்குவெளியே ரோட்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த, ஒரு ட்ரை சைக்கிள் மேல் தன்னுடையநோக்கியாவை விழாதபடி, மியூசிக் ப்ளேயரை ஆன் செய்துவிட்டு சென்றார். அதில் சுசீலா“அத்தை மகனே போய் வரவா அம்மான் மகனே போய் வரவா!” என்று பாடினார். நான் சிறியஆச்சரியத்தில் பெரிய கருப்பனை நோக்கினேன்.

அவர் மீண்டும் வந்திருந்த வாடிக்கையாளருக்கு இளநீர் வெட்டிக் கொண்டே, என்னை பார்த்து சிறிய புன்னகையுடன் தலையை கீழே அசைத்தார்.

நிழல் தரும் அந்த மரமும், குளிர்விக்கும் பதமான இளநீரும், சாந்தமாக பாடிக் கொண்டிருந்த சுசீலாவின் குரலும், எனக்கு இசை பிடிக்கும் என்று மூன்று நாட்களுக்கு முன்னால் அறிந்துகொண்ட பெரிய கருப்பனின் உள்ளமும் மனதை மயிலிறகால் வருடிக்கொடுத்தன. மியூசிக்சிஸ்டம் பொருத்தப்பட்ட ஏசி ரெஸ்டாரண்டில், Drive in வசதியுடன், பிளாட்பாரத்தில் இளநீர்குடித்த முதல் ஆள் நானாக தான் இருக்க வேண்டும்.

பெரிய கருப்பனே …… போய் வரவா…….. என்று மனதில் பாடிக்கொண்டே, என்னுடையஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் கீயை பாக்கெட்டில் இருந்து எடுத்தேன்..