தொடர்கள்
தொடர்கள்
தேவதைகளுக்குப் பெயர் உண்டு! (3)   - என் குமார்

20240514070251143.jpg

தடக்… தடக்… தொடர்ந்து கேட்கிறது. இரயில் முழுக்க எதிரிலும், பக்கத்திலும்,தூரத்திலும், உட்கார்ந்தபடி… படுத்தபடி… நடந்தபடி… விதவித முகங்கள். என்முகத்தையும் யாராவது இப்படி வேடிக்கை பார்க்கிறார்களா?

என்னைப் பார்க்காத – எதையுமே பார்க்காத என் வரிசையின் ஜன்னலோரமே ஒருத்திஇருந்தாள். தடக்… தடக்… மீறி சன்னமாக ஒரு ஒலி கேட்கிறது. பாட்டொலி. அவளிடமிருந்துதான்.

அந்த ஒலி, ஜன்னல் காற்றால் விசிறியடிக்கப்பட்டு என் முகத்தில் பட்டது. அது, நான்கேட்டுக் கேட்டுக் கேட்டுச் சலிக்காத பாட்டு. இப்போது ஞாபகத்திற்கு வராமல்கஷ்டப்படுத்தியது. பொறுக்கமுடியாமல், என் இருக்கையிலிருந்து குனிந்து, நடுவிலிருந்தவரைத் தாண்டி, அவளிடம் என் குரலை அனுப்பினேன்.

“ஹாய்… எக்ஸ்கியூஸ் மீ… நீங்க ஹம் பண்ற பாட்டு…?”

ஜன்னல் விட்டுத் திரும்பினாள். அப்போது, அந்தப் புரண்டு விரிந்த கூந்தல் கலைத்துக் கலைத்துக் காட்டிய அவளது முகம் தெரிந்தது. ஜன்னல் கம்பியின் தடம் நெற்றியில் கோடுபோட்டிருந்தது. திரும்பிய வேகத்தில் பதில் வந்தது.

“என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது?...” சொல்லும்போதே ராகம்வந்தது.

“ஸ்..ஆமாம்… பட்…. அதோட சரணம் தானே ஹம் பண்ணினீங்க?“

என்று கேட்டுவிட்டு, மெலிதாகப் பாடிக்காட்டினேன்…“மஞ்சளைப் பூசிய மேகங்களே… மேகங்களே… மோகங்களே… மல்லிகை மாலைகளே… ” என்று நான் பாடியகணத்தில்,என் குரல் மீது ஏறி, அந்த வலி மிகுந்த ஆலாபனையை ’ஹம்’ செய்தாள்.

“மல்லிகை முல்லையின் மாலைகளே… மார்கழி மாதத்துக் காலைகளே…சோலைகளே… என்றும் என்னைக் கூடாயோ…!” இப்போது சேர்ந்து ஹம்மிங்செய்துகொண்டிருந்தோம்.

நடுவிலிருந்தவர் எப்படி இன்னமும் நடுவில் இருப்பார். எழுந்து நடக்கஆரம்பித்துவிட்டார். இப்போது, இடைவெளி இல்லாத வெளி கிடைத்தது.

”ஓபனிங்ல வருமே ஒரு கிடார்… அதுக்குப் பின்னாடியே நிழல் மாதிரி புல்லாங்குழல்பீஸ்… அதெல்லாம் கவனிப்பீங்களா?” நான் பரிதவிக்க…

“விரக தாபத்துக்கு இதைவிட ’ஆப்ட்’ பேக்-ரவுண்ட் ஸ்கோர்-லாம் இருக்குமா?” அவள்கண்களைக் கூர்மையாக்கிச் சொல்ல…

“இதெல்லாம் ஒரு மனுஷன் பண்ணின ம்யூசிக் மாதிரியாங்க இருக்கு?” நான் தழுதழுக்க…

ஒரு பாட்டால் படாதபாடுபட்டுக்கொண்டிருந்தோம்.

”எல்லா வரிகளுமே தெரியுமா? நான் இதுல வீக்!” என்றாள்.

”அச்சோ இல்ல… லிரிக் மறந்து, ஹம் பண்ணிப் பாடும்போது, அது என்னை இழுத்துட்டுப்போறதும், நான் காணாமப்போறதும் அடிக்கடி நடக்கும். கண்ணெல்லாம் தண்ணிகொட்டியிருக்கும்.”

என் வார்த்தைகளின் ஈரத்தை உணர்ந்து… அவளும் சொன்னாள்.

”அதே எக்ஸ்பீரியன்ஸ் தான் இங்கேயும். ஆனா, எனக்கு இப்படில்லாம் சொல்லத்தெரியல. அதான் அப்படியே ’ஸ்டன்’ ஆகிப் பார்க்கறேன். …உருவம்தான் வேறயோ?”

அந்தக் கேள்வியோடு பேச்சு நின்றது.

தடக்… தடக்…

இரயிலில் கூவிக் கூவி வந்து சென்ற உணவுப் பண்டங்கள், தண்ணீர் எதையும்கவனிக்கவேயில்லை.

”இவ்வளவு நேரம் தோணலை. இப்போ தாகமா இருக்கு!” என்றவளிடம், ”இருங்க… பார்க்கறேன்!” என்று உட்காரவைத்துவிட்டு, அடுத்த கம்பார்ட்மெண்ட் வரை போனேன்.

வாங்கிய பாட்டிலை நீட்டினேன். “ஓ…கூலிங்லயே கிடைச்சுதா? தேங்க்ஸ்… சரி, ஒண்ணு கேட்கவா?” என்று கேட்டுவிட்டு,

மூடியைத் திறந்து இரண்டு மடக்கு தொண்டையில் வழியவிட்டு என்னிடம் நீட்டினாள்.இப்போது வேண்டாமென்று சைகையால் மறுத்துவிட்டு, அவள் கேட்கப்போவதற்குக்காத்திருந்தேன். மெதுவாகக் கேட்டாள்.

“ம்… Just curiosity sake asking you… இப்போ போயிட்டு வந்த கேப்-ல என்னயோசிச்சீங்க?”

யோசிக்காமல், யோசித்ததைச் சொன்னேன்.

”ஒரு பாட்டை நம்மள மாதிரியே இன்னொரு ஜீவன் இவ்ளோ இரசிக்குதேன்னு சகபயணியா ஒரு த்ரில். அவ்ளோதான். Same vibes-ல? ஒரே frequency-யா இருக்கோம்ல?ன்னு பரஸ்பரம் ‘அட்டாச்’ ஆகவேண்டாம்னு தோணுச்சு. நம்பர் வாங்கவேண்டாம். யார்நீங்க-ன்னு தெரிஞ்சுக்க வேண்டாம்…”

…சொல்லச் சொல்ல, “Certainly… Certainly…” என்று ஒரு தேவதையின் கண்கள்போல் மின்னியது.

”எஸ்… இதுக்கு மேல வேற எதுவும் பேசிக்கவேண்டாம். எதையும் விசாரிச்சு தாட்-ல சுமக்கவேண்டாம்னு எனக்கும் இந்த ‘கேப்’ல தோணிச்சு“ என்று மெளனமானாள்.

“தோ… இதுலகூட ஒரே மாதிரி யோசிக்கறோம்னு, Same vibes-ல? ஒரே frequency-யாஇருக்கோம்ல?ன்னு பரஸ்பரம் ‘அட்டாச்’ ஆகவேண்டாம்ல?” என்று நான் சொல்ல…

சத்தமாகச் சிரித்துவிட்டாள். எல்லோரும் எங்களைப் பார்க்க…

அவளுக்கு மட்டும் கேட்கும்படி, ”…போதும்! உங்க ஜன்னல் ஹம்மிங் கன்டினியூபண்ணுங்க” என்று எழுந்தேன்.

தடக்… தடக்…

அதற்குப் பின் எத்தனையோ பயணங்கள்.

இரயில் முழுக்க எதிரிலும், பக்கத்திலும், தூரத்திலும், உட்கார்ந்தபடி… படுத்தபடி… நடந்தபடி… விதவித முகங்கள்… வரும்… போகும்.

அவள் நினைவு வரும்போது மட்டும், எதுவும் இல்லாத, எதுவாகவும் இல்லாத ஒருவெட்டவெளி ஞாபகத்திற்கு வரும்.

என்னால் யாரிடமும் வார்த்தைகளில் சொல்லமுடியாத ஒரு ’ஹம்மிங்’ மாதிரிதான்ஆகிவிட்டாள்.

*