தொடர்கள்
அழகு
ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் - ராம்

20240515065850125.jpg

ஆப்பிள் பயனாளர்களுக்கு ( அது ஒரு தனி மதம்) இதைப் பற்றி விலாவாரியாக சொல்லத் தேவையில்லை.

ஏனெனில் இந்த வாரம் நடந்து முடிந்த IOS 18 அறிமுக படலத்தை பார்த்திருப்பார்கள்.

ஐ.ஓ.எஸ் 18ல் என்னென்ன விஷயங்கள் செய்யப் போகிறோம் என்று ஆப்பிள் நிறுவனம் ஒலியும் ஒளியும் போட்டு சொல்லிக் கொண்டிருக்க, என்னடா ஐகானை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் மாத்துவதற்கா ஒரு வருடம் உழைத்து கொண்டிருந்தீர்கள் என்று ஒரு புறம் உள்ளூர கேள்வி எழுந்தது.

பின்னர் மாக் ஓஎஸ், ஐபாட் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ், ஆப்பிள் டிவி ஓஸ் என்று அனைத்து சமாச்சாரங்களும் விளக்கப்பட்டு மாக் கணணி வைத்திருந்தாலே ஐபோனை எடுக்காமலேயே ஐபோனை உபயோகப்படுத்தலாம் என்ற கண்டினியுட்டி ஆப்ஷன் கொஞ்சம் கவர்ந்தது.

இன்னமும் சில பல அம்சங்கள் அதிலும் ஃப்ரீ பார்ம் என்று சொல்லப்படும் ஆப், இதை எத்தனை பேர் உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனாலும் அதுவும் கவர்ந்து.

முத்தாய்ப்பாக சொன்ன ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் தான் கேம் சேஞ்சர்.

அதாவது கூகுள், சாம்சங் இப்படி அத்தனை பேரும் தற்போது துரத்துவது ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவைத் தான்.

தலைவர் சுஜாதா இருந்திருந்தால், இந்தக் காலகட்டத்தில் ஜல்லி ஜல்லியாக பிரித்து இந்த தொழில்நுட்பங்களை ரசித்து பாராட்டி, அல்லது கவலையோடு எழுதியிருப்பார்.

செயற்கை நுண்ணறிவை ஐபோனில் எப்படி நுழைப்பார்கள்.

ரொம்ப எளிதாக விளக்க வேண்டுமெனில், ஒரு குறுஞ்செய்தி வருகிறது, ஒரு மின்னஞ்சல் வருகிறது, ஒரு வாட்சப் வருகிறது ஒரே விஷயம் ஆனால் துண்டு துண்டாக பல வழியாக வருகிறது என்றால், உதாரணத்திற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஒரு பயணத்தைப் பற்றி, இப்போதிருக்கும் சூழ்நிலையில் விமானம் பற்றியோ டிக்கெட் பற்றியோ, விமானத்தின் நேரம் பற்றியோ தேட நீங்கள் மூன்று செயலிகளில் மெனக்கெட வேண்டும்.

ஆப்பிள் இண்டெலிஜென்சில் சிரி, அத்தனை செயலிகளுக்குள்ளும் புகுந்து நமக்கான விஷயங்களை தேடி ஒரே வரியில் சொல்லி விடும்.

அது போலவே நோட்ஸ் எனப்படும் செயலியில் நீங்கள் எழுதி விட்டு அருகே ஒரு கட்டிடம் போல கோண கோணயாக ஒரு ஸ்கெட்ச் போட்டு விட்டு அதை ஒரு ஆப்பிள் பென்சிலால் கட்டம் கட்டினீர்கள் என்றால் ஆ.இ. அந்த கிறுக்கலை ஒரு அழகான படமாக மாற்றி விடும்.

அது மட்டுமல்ல நாம் ஒரு ஈமெயில் அடித்து விட்டு இதை கொஞ்சம் நாசூக்காக மாற்று என்று சொன்னால் அதை அழகாக கட்டமைத்து நல்ல வார்த்தைகளைப் போட்டு மாற்றிக் கொடுக்கும்.

எழுத்துப் பிழை இல்லாமல் ப்ரூஃப் ரீட் செய்து கொடுத்து தப்பில்லாமல் டைப் அடித்துத் தரும். இதெல்லாம் உங்கள் செட்டிங்கில் யு.எஸ். இங்லிலீஷில் இருந்தால் மட்டும் தான் வேலை செய்யும். தமிழில் இப்போதைக்கு வருமா தெரியாது. தமிழில் இருந்தால் விகடகவியில் எழுத்துப் பிழை இல்லாமல் வலையேற்றலாம். ஹூம்.

இப்படி ஆ.இ. ஏகப்பட்ட செயற்கை நுண்ணறிவு வேலை செய்ய இருக்கிறது.

இதை சாட் ஜிபிடியுடன் இணைந்து செய்யப் போகிறோம் என்று டிம் சொன்னது தான் வினையாக போயிற்று.

அதெப்படி நமது தரவுகளை சாட் ஜிபிடியில் கொடுத்தால் அது பாதுகாப்பானதில்லையே என்று பலர் குதிக்கிறார்கள்.

அதிலும் எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களில் ஆப்பிள் இனி வேலைக்காவாது என்றே அறிக்கை விட்டிருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் தெரியும் இந்த ஆ.இ. என்னென்ன விதத்தில் நம்மை இன்னும் சோம்பேறியாக்கப் போகிறது என்று........

ஐந்து நிமிடத்தில் ஆப்பிள் இண்டெலிஜென்ஸை விளக்கும் குட்டி வீடியோ இங்கே.....