தொடர்கள்
ஆன்மீகம்
குறைகள் தீர்க்கும் குன்றக்குடி முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Kunrakkudi Murugan solves grievances!!

குன்றக்குடி, தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள முருகன் கோயில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருப்பதால் குன்றக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இது பிரார்த்தனை ஸ்தலங்களில் முதன்மையானது.
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த மலையில் ஆறுமுகமும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான்” என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
சூரியன், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் அகத்தியர் மற்றும் பாண்டவர்கள் வழிபட்ட சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு.
இக்கோயில் முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.

ஸ்தல புராணம்:
ஒருசமயம், அசுரர்கள் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில்
அசுரர்கள் ஒன்று திரண்டு மயிலிடம் சென்று, பிரம்மதேவரின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை தாங்கள்தான் மயிலைவிட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறினர். அசுரர்களின் சூழ்ச்சி அறியாத மயில் கோபம் அடைந்து,
பிரம்மாண்ட உருவம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. இதனை அறிந்த இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டுத் தந்தார். தனது தவற்றுக்கு வருந்திய மயில், அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டது. முருகப் பெருமானும் மயிலை மன்னித்து சாப விமோசனம் அளித்தார். பின்னர் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தலத்திலேயே இருந்து அருளாட்சி செய்து வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்.

Kunrakkudi Murugan solves grievances!!

ஸ்தல வரலாறு:
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தையது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மருது சகோதரர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியதாக வரலாற்றுச் செய்தி.

ஸ்தல அமைப்பு:

Kunrakkudi Murugan solves grievances!!


குன்றக்குடி மலையின் மேலே முருகனுக்கும், கீழே சிவபெருமானுக்கு குடைவரைக் கோயிலாக (தேனாற்று நாதர் - அழகம்மை) அமைந்துள்ளது. குன்றக்குடி மலையானது ஒரு மயில் படுத்து அடைகாக்கும் வடிவில் இருக்கின்றது. மலையின் நுழைவாயில் மயில் தோகை போல் இருப்பதால் அங்கிருக்கும் ‘தோகையடி விநாயகரை’ பக்தர்கள் முதலில் வழிபட்ட பின்னரே மேலேறிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பின் குன்றக்குடி முருகனைத் தரிசிப்பதற்காக 149 படிகள் ஏற வேண்டும். வழியில் கார்த்திகை விநாயகர், இடும்பன் மற்றும் வீரபாகுவின் சந்நிதிகளையும் காணலாம். குன்றின் மீதேறிச் செல்லும் வழிகளில் பக்தர்கள் இளைப்பாறும் விதத்தில் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது மலைக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் சிறிய மண்டபங்களுடனும் ஒரே திருச்சுற்றுடனும் விளங்குகிறது. மகாமண்டபத்தின் இடப்பக்கம் கணபதி காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. மற்றும் தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ண விநாயகர், குழந்தை வடிவேலர், இடும்பன், நடராஜர், நவகிரகங்கள், வல்லப கணபதி, நால்வர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். அலங்கார மண்டபத்தில் மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் உள்ளன. ஆறுமுகப் பெருமாளின் உற்சவர் சந்நிதி இங்கு உள்ளது. இதனை அடுத்துள்ள மயில் மண்டபத்தில் த்வஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளது.
கர்ப்பக் கிரகத்தில் மூலவர் ஷண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி ஆறு முகங்களுடன் பன்னிரு திருக்கரங்களுடன் மயிலின் மீது வலது காலை மடித்தும் இடது காலைத் தொங்க விட்டவாறு அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர்.

Kunrakkudi Murugan solves grievances!!


ஸ்தல விருட்சம் : அரசமரம்
ஸ்தலத் தீர்த்தம் : தேனாறு

ஸ்தலச் சிறப்பு:
இக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் முருகன் வள்ளி தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழ்ந்ததற்கான கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளது. குன்றக்குடி முருகனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுத்தல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு, பல பக்தர்களை ஈர்க்கிறது.
பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் குறிப்பாக செட்டி மக்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழப் பாற்குடமும் எடுத்து தேனாற்றுடையானை வணங்கி வருகின்றனர். மேலும், சித்திரையில் பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இங்கு வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்குத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்குக் காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடனாகக் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர, சொறிபடை நீங்கச் சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். தவிரச் சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், இதைத்தவிர ஏழைகளுக்கு அன்னதானம், திருப்பணிக்குப் பொருளுதவி செய்கின்றனர்.

Kunrakkudi Murugan solves grievances!!

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். கோயில் நேரங்கள் திருவிழாவிற்கு ஏற்ப மாறுபடும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
காரைக்குடியிலிருந்து 12 கிமீ தொலைவிலும் , புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 89 கிமீ தொலைவிலும், குன்றக்குடியின் மையப் பகுதியில் இந்த முருகன் கோயில் உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.

நம் குறைகளை தீர்க்கும் குன்றக்குடி முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!