தொடர்கள்
கவர் ஸ்டோரி
லண்டனில் கம்பன் விழா ! ஒரு நேரடி ரிப்போர்ட் ! -கோமதி லண்டனிலிருந்து...

20240620002234886.jpeg

தனது சொந்த நாட்டை விட்டு அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு கலாச்சாரம், பண்பாடு போன்றவை மாறுபட்டால் கூட அதில் ஒரு பெரிய தாக்கமோ, இழப்பின் எண்ணமோ ஏற்படுவது மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். தாங்கள் வாழும் நாட்டிற்கு அல்லது தான் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு ஓரளவு தங்களை மாற்றிக் கொள்ள முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் தனது தாய்மொழி அல்லது மொழி சார்ந்த மரபுகளை இழக்கும் பொழுது அதன் தாக்கம் அளவிட முடியாததாக இருக்கும். அதுவும் இலக்கியங்கள் குவிந்து இருக்கும் தமிழ் மொழியில், நமது மொழிக்கே உரித்தான பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதை அரங்கம் போன்றவை எத்தகைய மதிப்பு வாய்ந்தது என்பதை அயலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் அறிவான். இதிலும் குறிப்பாக கம்பன் விழா என்பது ஒரு தனித்துவமான நிகழ்வு, லண்டன் வாழ் தமிழர்களுக்கு எட்டாத கனியாக அமைந்திருந்த அந்த விழாவை எட்டும் கனியாக மாற்றியிருக்கிறது அறிவு அறக்கட்டளை.

20240620002809565.jpeg

கடந்த வாரம் 13, 14ஆம் தேதிகளில் லண்டன் வெம்பிளி ஆல்பெர்ட்டன் கம்யூனிட்டி பள்ளி வளாகத்தில் கம்பன் விழா கோலாகலமாக துவங்கியது. நட்சத்திர பேச்சாளர்களாக இலங்கை ஜெயராஜ், பாரதி பாஸ்கர், பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் பிரசாந்தன், தமிழருவி சிவகுமார் மற்றும் டாக்டர்.இரத்னகுமார் அவர்களும் பங்குபெற்று விழாவை சிறப்பித்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர், மலேசியா தேசிய துணைத் தலைவர் சொல்வேந்தர் திரு. டத்தோ சரவணன் அவர்களும் இந்த விழாவில் பங்குபெற்றார்.

20240620002830168.jpeg

முதல் நாள் விழா, போரில் உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌனம் அனுசரித்த பின்பு இனிதே துவங்கியது. கடவுள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திருமதி.பவானுஷா தனது தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஸ்ருதியோடு இனிமையாக பாடிய விதம், நேர்த்தியின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திழுத்தார். அறிவு அறக்கட்டளையை சேர்ந்த பிரபா செல்லதுரை வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து திருமதி. பிரேமலதா அவர்களின் மாணவியர் சிறப்புற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.

டத்தோ சரவணன் தனது சிறப்புரை நிகழ்த்த துவங்கியபொழுது அவரது கணீர் குரலால் அரங்கை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். கம்பனின் சிறப்பையும், ஆளுமையையும் கூறிய சரவணன், அடுத்த தலைமுறையினர் கம்பனை படிப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி கம்பன் விழாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றார். அவரது பேச்சை தொடர்ந்து, விழா "சிந்தனை அரங்கத்திற்கு" தயாரானது. இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர் அன்பு தேவன், பன்முக திறமையாளர் மதுரன் தமிழவேள் இவர்களோடு நமது பாரதி பாஸ்கர் இணைந்து சிறப்பித்தது அவரது பெருந்தன்மையையும், அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் பாங்கையும் உணர்த்தியது. "கம்பன் என்றொரு மானுடன்" என்ற அவரின் பேச்சு அனைவரின் சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. தனக்கே உரிய எளிய நடையில் திரு.வ. வே. சு அய்யர் லண்டனிலிருந்து கம்ப ராமாயணத்தோடு சென்றது முதல், அவரது "Comparitive studies on Kamba Ramayana" நூல் வரை நடந்ததை முன்னுரையாக தந்து, கம்பனை பல கோணங்களில் காண்பித்து மானுடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பிரமிப்பூட்டியது. பள்ளி மாணவர் அன்பு தேவன் தமிழின் மேன்மையை தங்கு தடையின்றி பேசி அவையோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

20240620002856781.jpeg

கவிஞர். மதுரன் தமிழவேள் "நடையில் நின்றுயர் நாயகன் - சொற்செம்மையும் மனச்செம்மையும்" என்ற தலைப்பில் அவரது உரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. கம்பனின் சொல்வன்மையோடு, சந்த நயத்தையும் எடுத்துக்காட்டி கம்ப ராமாயணப் பாடல்களை அவர் விளக்கிய விதம், இன்றைய தலைமுறையினர் கம்பனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதற்கு சான்று.

சிந்தனை அரங்கத்தை தொடர்ந்து திரு.செல்வராஜா, பேராசிரியர். ஸ்ரீஹரன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு தங்களின் துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், சமுதாய பணிக்காகவும் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. திருமதி. துஷ்யந்தி மற்றும் திரிவேணி அவர்களது மாணவியரின் நடனத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவேளைக்கு பின் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பட்டிமன்றம் துவங்கியது. அரங்கம் நிரம்பி வழிந்து, வெளியில் அமைத்திருந்த இருக்கைகளிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்ததை பார்த்து வியக்காத ஆள் இல்லை. "இன்றைய தலைமுறையினருக்கு கம்பன் வழி காட்ட முடியும்! முடியாது !" என்பது பட்டிமன்ற தலைப்பு. இலங்கை ஜெயராஜ் அவர்களின் முன்னுரை, கம்பனை அறிமுகமில்லாதவர்க்கும் அவனின் பால் ஈடுப்பட்டை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. அயோத்தியை பற்றி அவர் கூறிய உவமை, அந்த காட்சியை நம் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தியது. பாரதி கிருஷ்ணகுமார், சிவகுமார் இருவரும் கம்பன் வழி காட்ட முடியும் என்ற தலைப்பிலும், பாரதி பாஸ்கர், பிரசாந்தன் ஆகியோர் கம்பன் வழி காட்ட முடியாது என்ற அணியிலும் வாதாடினார். பட்டிமன்றம் நிறைவுக்கு பின், இரவு உணவோடு முதல் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

20240620002925122.jpeg

இரண்டாம் நாள் மதியம், விம்பிள்டன் மற்றும் கால்பந்து இறுதியாட்டம் இருந்ததால் விழாவிற்கு மக்கள் வருவார்களா என்கிற எண்ணத்தை தவிடு பொடியாக்கும் விதத்தில் அரங்கம் நிரம்பி வழிந்திருந்தது . கடவுள் வாழ்த்து ஜெயஸ்ரீ பத்மநாபன் பாட, குத்து விளக்கேற்றிய பின் , டத்தோ சரவணன் அவர்களின் உரையோடு விழா முன்னேறி சென்றது. கம்பனையும் கண்ணதாசனையும் ஒப்பிட்டு அவர் கூறிய பல தகவல்கள் கேட்போர் மனதில் ஆணி அடித்தார் போன்று பதிந்தது என்றே கூற வேண்டும்.அர்ச்சனா இளகாந்தன், ஆகாஷ் திருச்செல்வம் ஆகிய இளம் தலைமுறையினரோடு பாரதி கிருஷ்ணகுமார் சிந்தனை அரங்கத்தை துவக்கி வைத்தார். "அன்னவர்க்கே சரண் நாங்களே" என்கிற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாரின் உரை நம்மையும் அறியாமல் பலே போட வைத்து. "பித்தனும் உறங்கினர்" என அவரின் விளக்கமும், அன்னவர்க்கே என்கிற அந்த வார்த்தையை பலவித கோணங்களில் விவரித்ததும் அவரது மொழியின் ஆளுமையை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. டாக்டர். பராமநாதன், திரு. தர்மேந்திரன் மற்றும் நடா மோகன் அவர்களின் சமுதாயப் பணிக்கு மரியாதை செய்து விழாக் குழுவினர் கௌரவித்தனர். "வியத்தகு வீரர்கள் நிறைந்த பூமி அயோத்தியா ? இலங்கையா?" என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் தலைமையில் வீராவேசமான பட்டிமன்றம் அவையோரின் ஆரவாரத்தோடு சிறப்புற நிகழ்ந்தது.

இரண்டாவது நாள் விழாவில் குறிப்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. இலங்கை ஜெயராஜ் அவர்கள் அறிவு அறக்கட்டளை குழுவினரிடம் கம்ப ராமாயண புத்தகத்தை அளித்து கம்பன் கழகத்தை முறைப்படி துவக்கி வைத்தார். பேச்சாளப் பெருமக்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர் விழாக் குழுவினர். பாரதி கிருஷ்ணகுமார் "சிந்தனைச் செம்மல் " என்ற விருதையும், "இயல் அரசி" என்று பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், "எழுதழிழ் ஏந்தல்" என்று பிரசாந்தன் அவர்களும், "இயல் வேந்தர்" என்று தமிழருவி சிவகுமார் அவர்களும், "செந்தமிழ்ச் செல்வர்" என்று திரு. டத்தோ சரவணன் அவர்களுக்கும் பட்டம் வழங்கப் பட்டது.

கம்பன் விழா பற்றி அறிவு அறக்கட்டளை தலைவர் திரு.நவேந்திரன் அவர்கள் கூறும் பொழுது "இது என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. 2022 இல் இலங்கை ஜெயராஜ் அவர்கள் வேறு ஒரு நிகழ்விற்கு லண்டன் வந்திருந்த பொழுது நீங்கள் ஏன் கம்பன் கழகம் தொடங்கக் கூடாது என்று வினவினார். அறிவு அறக்கட்டளை மூலம் செய்யலாமே என்றும் கூறினார். அது எனக்கு ஒரு ஊக்கத்தை அளித்தது. பல முயற்சிகளுக்கு பின் பிப்ரவரி 2024 இல் கம்பன் விழாவை ஜூலையில் நிகழ்த்தியே தீர வேண்டும் என்ற முடிவோடு இதை நிகழ்த்தி காட்டியுள்ளோம் " என்று கூறினார். விழா ஏற்பாட்டாளர் திரு.குமார நாயகம் அவர்களும் இந்த விழாவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பாரதி பாஸ்கர் கூறியது போன்று கம்பன் விழா என்ற இந்த விதை லண்டனில் தழைத்து விழுதாக மாற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

20240620064034635.jpeg

இலவசமாக இந்த விழாவை ஏற்பாடு செய்து, இரவு உணவோடு நடத்தியது என்பது சாதாரணமான காரியமல்ல . சிறிதும் பண பலம் இல்லாமல் விளம்பரதாரர்கள் உதவியோடும், மக்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விழா முன்னெடுத்து செல்லப்பட்டது. மேலும் கம்பன் விழாவிற்கு முந்தைய நாள் வெள்ளி இரவு நட்சத்திர பேச்சாளர்களுடன் ஒரு சந்திப்பு என்ற பிரத்யேக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அந்த நிகழ்வுக்கு வருவோர் கட்டணம் செலுத்தி பங்கு பெரும் வகையில் அமைத்து, அதிலிருந்து ஓரளவு முதல் ஈட்டப்பட்டது என்று கூறலாம். இந்த விழாவிற்கு உதவியவர்கள் "லண்டன் சடையப்ப வள்ளல்கள்" என்ற வரிசை பட்டியலில் சேர்த்து அதை பார்வையாளர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் விழா மலரும் வழங்கப்பட்டது. அதில் இந்த விழா துவங்கியதன் நோக்கம், பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் அவர்களது கட்டுரைகள் இடம்பெற்றதோடு விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்களை அதில் பிரசுரித்திருந்தனர். விளம்பரங்களின் அளவிற்க்கேற்றவாரு ஒரு சிறு தொகை வசூலிக்கப்பட்டது இந்த விழாவின் செலவிற்கு உதவி செய்யும் வகையில் அமைந்திருந்தது. அறிவு அறக்கட்டளையின் தலைவர் நவேந்திரன் , விழாக் குழு தலைவர் குமார நாயகம், உறுப்பினர்கள் திரு. மதுரன் தமிழவேள், ஞானேந்திரன், சண்முகதாசன், பிரபா செல்லதுரை, குமாரி மற்றும் ஷேக் தாவூத் இவர்களுடன் நானும்.

20240620002958664.jpeg

இவர்களது உழைப்பு போற்றுதலுக்குரியது. நான் இவர்களோடு பிந்தைய கட்டத்தில் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிட்டியதை பெருமையாக உணர்கிறேன்.

விழாவின் தனிச் சிறப்பு எது என்று கேட்டால் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட கூர்ந்து கவனித்து சிறப்பாக விழாக் குழுவினர் செயல்படுத்தி கட்டியிருந்தனர். விழாவின் அலங்காரங்கள், தோரணம் அமைத்த விதம், விழாவிற்கு வருவோரை எதிர் கொண்டு அழைத்து வரவேற்று இருக்கையில் அமரச் செய்தது, பேச்சாளர்களை சிறப்பு மரியாதையோடு விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது என இந்த விழாவின் நேர்த்தியை நாம் பாராட்டிக்கொண்டே செல்லலாம்.

20240620064122778.jpeg

(நவேந்திரன் மற்றும் குமாரநாயகம் இலங்கை ஜெயராஜுடன்)

நிகழ்ச்சிகளும் காண்போருக்கு சலிப்பு ஏற்படாத வகையில் அமைத்திருந்தது கூடுதல் சிறப்பு. மக்களின் நன்கொடை வேண்டி பெட்டி வைக்கப்பட்டிருந்தது, அதில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு உதவும் வகையில் நிதி வசூலிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே.

இருப்பினும் இந்த கம்பன் விழா செய்ததன் மிக முக்கிய நோக்கம் அடுத்த தலைமுறையினருக்கு எப்படியும் கம்ப ராமாயணத்தை எடுத்துச் சென்று விட வேண்டும் என்ற தாகம், உறுதியான எண்ணம்.

அதன் வெளிப்பாடே லண்டன் கம்பன் விழா.

பல தடைகளை உடைத்தெறிந்து இந்த விழாவை நடத்தி சாதித்திருக்கும் அறிவு அறக்கட்டளைக்கு மீண்டும் ஒரு சபாஷ், பாராட்டுகள்.

அடிக்கடி நாம் கேட்கும் வசனம் தான். தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது !!!

20240620003717376.jpeg