"உடலே உன்னை ஆராதிக்கிறேன்" என்ற வாக்கியம் நாம் அடிக்கடி கேட்கும் வாக்கியம்
:அழகே உன்னை ஆராதிக்கிறேன்" என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் இந்த சொற்றொடரும் என் நினைவுக்கு வரும்.
உடல் என்றால் அழகை மட்டுமே முன்னிறுத்தும் நிலை தாண்டி, அவ்வப்போது கையோ காலோ வலிக்கும் போதுதான் உடலை ஆராதிக்க வேண்டிய நினைவு நமக்கு வருகிறது .
அப்போது நம் உடல் நம்மிடம் "ஏதோ சொல்ல விரும்புவதை" நம்மால் உணர முடியும்.
நடுத்தர வயதை நாம் அடையும் போது நம் உடலுக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டிய அவசியம் தோன்றும். சரியான உணவு வழக்கம் ,உடற்பயிற்சி இவை ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் .
நம்மில் பலர் புது வருடம் துவங்கும் போது இவற்றை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி எடுக்கிறோம். சில நாட்களில் உடற் பயிற்சி செய்ய முடியாத காரணம் தேட ஆரம்பிக்கிறோம் ,
கடைசியில் காரணமும் கரைந்து போய் நாமும் அடுத்த வருடத்திற்கு தயாராகி விடுகிறோம்.
நாம் ஐம்பது வயதில் அனுபவிக்கும் தொல்லைகளை தற்போது இளம் பெண்கள் இருவது வயதிலேயேஅனுபவிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு சீஸ் பீட்சாவும் வேண்டும் ஸீரோ சைசும் வேண்டும். உங்கள் வீட்டில் இருவது வயது பெண்கள் இருந்தால் நான் சொல்லப்போவது உங்களுக்குப் புரியும்.
அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப் படுபவர்கள் -
அவர்கள் தரும் ஹெல்த் டிப்ஸ் நமக்கு கடினமாக தோன்றினாலும் , உண்மையில் தேவையானவையே
"எப்ப பாத்தாலும் சாதமா? கார்ப்ஸ் தான்!" எப்போதான் புரியப் போகுதோ உங்களுக்கு!"
"நீங்க செய்யற பருப்பு குழம்புல என்ன இருக்கு?
"ப்ரோடீன் இருக்கே?"
"அதெலாம் எந்த மூலைக்கு? சோயா சாப்பிடு."
"சுகர் ஃ பிரீ சாப்பிடு. ஜீனி வேண்டாம். கெடுதல்."
ஐம்பது வரை ஒரு விதமாக பழகி இருக்கும் நம் உடல் தற்பொழுது நிறைய மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது.
என்னதான் "இதெல்லாம் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு தானே என்று நாம் நினைத்தாலும் அவர்கள் சொல்லுவதில் உள்ள நியாயம் புரிகிறது
உணவு என்பது நம் கலாச்சாரம்.
அதுவும் தென்னகத்தில் சாப்பாடு வகைகள் கேட்கவே வேண்டாம். சாதாரணமாக ஒரு வேளைக்காவது ஒரு சாலட் உடன் சாப்பாட்டை நிறுத்திக் கொள்ள முடியவில்லை
நம்மில் பலரால். ஒரு குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அப்பளம் இல்லாமல் சாப்பிட முடியவில்லை.
ஒரு வேளையாவது இத்தனையும் வேண்டும்.இதெல்லாம் விட்டு விட்டு சிகப்பு அரிசி கம்பு,கேழ்வரகு என்று மாறச் சொல்லும் போது மனம் தடுமாறத்தான் செய்கிறது.
அத்தனையும் முயற்சித்து விட்டு மறுபடியும் தனக்கு பழக்கப்பட்ட சாப்பாடு முறைக்கு வருபவர்கள் எத்தனையோ பேர்.
மேலும் சமூக வலைத்தளங்களின் வரும் ரீல்ஸ்நம்மை மேலும் அழுத்தத்தில் தள்ளுகிறது
யூ ட்யூபர்கள் மூட்டு வலியிலிருந்து, நீரழிவு நோய் வரை அத்தனைக்கும் மருந்து சொல்கிறார்கள் கிளைகீமிக் இன்டெக்ஸ், கார்டிசால் லெவெல்ஸ், கீட்டோ டயட், லோ கார்ப் டயட், ஹை ப்ரோடீன் டயட், பிஎம்ஐஎன்று முன்பு நாம் அறிந்திராத வார்த்தைகள் இன்று நம் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிவிட்டது.
அதீத அறிவு நம்மை பயமுறுத்துகிறது
நம்மை சுற்றி முறையான மருத்துவம் படிக்காத மருத்துவர்கள் மேலும் நம்மை குழப்பும் கால கட்டத்தில் இருக்கிறோம்.
உதாரணமாக "தேங்காய் எண்ணை கூடவே கூடாது.. கடலெண்ணெய் அதிலும் மோசம்.." ஆனால் இப்போது, அளவுடன் உபயோகிக்கலாம் என்று சொல்கிறார்கள்.
ஆராய்ச்சி செய்ய செய்ய புது புது கண்டு பிடிப்புகள் புதுப் புது வழி முறைகள். இவை எல்லாவற்றையும் நம் மனதில் ஏற்றி மருக தேவை இல்லை .
நம்மை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
என் இருபது வயது பெண் ஜிம் சென்று வர, ஐம்பது வயதில் நான் நாற்பது நிமிடம் நடை பயிற்சி செய்து வருகிறேன், எண்பது வயதில் என் அம்மாவோ தேய்த்த பாத்திரத்தை எடுத்து வைத்து, காய்கறியை நறுக்கி வைத்து, அடுப்பை துடைத்து கோலம் போட்டு, "சாயங்காலம் சாப்டாச்சு, ஒரு டம்ளர் மோரு போறும் என்று சொல்லி, தரையில் அமர்ந்து, உடலை வளைத்து குனிந்து ராமஜெயம் எழுதுகிறாள் தினமும்.
முதிர் வயதிலும் பரபரப்பாக இயங்கி தன் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்கிறாள் ,
அம்மா நாம் வாழும் வழியை நமக்கு கற்பிக்கிறாள் செயலால் !!
நம் உடலை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பின் அதை ஆராதிக்க வேண்டிய முறையில் ஆராதிக்கவேண்டும்.
உடலினை உறுதி செய்யும் உபாயம் அறிதல் வேண்டும் .
அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவையும், உடற்பயிற்சியையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்
தேவையான முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் .
வீண் குழப்பங்களுக்கு இடம் தராமல் நம் வாழ்வை வாழ்வோம்
உடலினை உறுதி செய்வோம் .
Leave a comment
Upload