காயத்ரி மந்திரம் இந்துக்களின் பழமையான, சக்தி வாய்ந்த மிகவும் புனிதமான மந்திரம். இந்த மந்திரத்தைத் தினமும் ஒவ்வொருவரும் சொல்லி வந்தால் உடல் வலிமை, மன வலிமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார். அத்தகைய உயர்வானது. ரிக் வேதத்தில் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்திரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது. காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர். இந்த மந்திரத்தின் பெருமையால் தான் ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனி காயத்ரி மந்திரம் உருவானது.
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்”. என்ற சொல் வழக்கிற்கு விளக்கமாக நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் மன நலமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதற்குத் தேவையான சக்தி இந்த காயத்ரி மந்திரத்தில் உள்ளது. இந்த மந்திரத்தைச் சொல்வதால், உயிர் வலிமை பெறும். உடலில் சக்தி அதிகமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். உள்ளம் தூய்மை அடையும் நம்முள் இருக்கும் ஆன்ம ஒளி காயத்ரியை ஜெபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும். நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும். காயத்ரி மந்திரம் இந்த பிரபஞ்சத்திற்கே பொதுவானது. மேலும் நாடு, மொழி, இனம் மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இதனைச் சொல்லலாம்.
காயத்ரி மந்திரம் உருவான கதை:
ஒரு சமயம், சத்திரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மன்னன் பஞ்சம் தீர்க்க வசிஷ்ட மகரிஷியிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்றுப் பிள்ளையான நந்தினி என்ற பசுவை இரவல் கேட்டார். அதனை வசிஷ்ட மகரிஷி நிராகரித்தார். அதனால் கோபமுற்ற கௌசிக மன்னன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி தழுவினான். அந்த சமயம் வசிஷ்டர், கௌசிக மன்னனிடம் “பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, நந்தினி என்ற பசுக்கள் கட்டுப்படும்” எனவே நீர் பிரம்மரிஷியானால் இந்த பசுவைத் தருகிறேன் என்றார். மேலும் தவம் இயற்றினாலும் சத்திரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கௌசிக மன்னன். தான் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாகச் சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கொண்டு கடும் தவம் புரிந்தார். மனம் குளிர்ந்த அன்னை பராசக்தி கௌசிக மன்னன் முன் தோன்றி, தனது கோயிலில் உள்ள விளக்கில் பஞ்சமுக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று சொல்லி மறைந்தார். சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாளான பௌர்ணமி அன்று அன்னை சக்தியின் கோயில் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்றினார். ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே மன்னன் அந்த விளக்கில் தன் தலை, இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காகப் போராடுவதைக் கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார். தனது உடலைத் திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கௌசிக மன்னன் தான் அறிந்த நான்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாடனம் செய்தார்.
தன் உடலையே திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தின் பெயரைக் கொண்டே காயத்ரி தேவி என அழைக்கின்றோம்.
ஶ்ரீகாயத்ரி தேவி:
வேதங்களின் கடவுளாக காயத்ரி போற்றப்படுகிறார். காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி இந்த மூன்றும் இணைந்த ஸ்வரூபமாக காயத்ரி விளங்குகிறார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றமும், ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கைகளும் கொண்டவர்.
காயத்திரி மந்திரம்:
“ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்”
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தும் இந்த காயத்திரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் வேதங்களின் தாயான காயத்ரி தேவி இருப்பார். காயத்ரி மந்திரத்தை முழு கவனத்துடன் இருவேளையும் அனைவரும் சொல்லலாம்.
மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் விந்திய மலையாகவும், மந்திரங்களில் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகையில் மிகக் கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி மகா பெரியவர் காயத்ரி ஒரு சிறந்த மனத் தூய்மைக்கான அருமருந்து என்கிறார்.
ஸ்ரீ சத்ய சாயி பாபா "ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முறையாவது கூறுங்கள். குறிப்பாகக் குளிக்கும் போது கட்டாயம் கூறுங்கள். அப்போது உடல் தூய்மையுடன் மனத்தூய்மையும் ஏற்படும்" என்கிறார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்கின்றாரோ அவர் எந்த நோய்க்கும் ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரம் சொல்வதால் என்ன பலன்கள்:
வேதங்களின் சாரமாக காயத்ரி மந்திரம் விளங்குகின்றது. இவைகள் நம் உடலின் மீது உளவியல் ரீதியான தாக்கத்தையும், உடலியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
காயத்ரி மந்திரமும்..உடல்நல பயன்களும்..
மனதை அமைதியாக்கும் இந்த மந்திரம் ஓம் எனும் சொல்லோடு தொடங்கும். இந்த ஒலியின் விளக்கக் கூற்று உங்கள் உதடு, நாக்கு, மேல் வாய், நாக்கின் பின்புறம் மற்றும் மண்டை ஓட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும். இது மனதை மிகவும் சாந்தப்படுத்தும் என்றும் ஹார்மோன்களை அமைதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவர் மனதை ஒருமுனைப்படுத்தி அதனால் அவர் மனம் அமைதியடையும் வண்ணம் காயத்ரி மந்திரத்தின் அசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இந்த மந்திரத்தின் அதிர்வுகளின் மூலம் மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதலாமஸை (நோய் எதிர்ப்புச் சக்தி உள்பட உடலில் உள்ள பல செயல்பாடுகளையும் சுரப்பதையும் சீராக வைத்திருக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள சுரப்பி) மிகவும் சிறப்பாகச் செயல்பட வைக்கும். சந்தோஷ ஹார்மோன்கள் சுரப்பதற்கும் இந்த சுரப்பியே காரணமாக உள்ளது எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதனால் இதுவே உடலையும் மனதையும் இணைக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது.
இதைத்தவிர இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உடலில் உள்ள சக்கரங்களை ஊக்குவிக்க உதவும். உடலில் உள்ள குறிப்பிட்ட சில முக்கியமான நிணநீர் கணுக்கள் மற்றும் ஒட்டுமொத்த உடலின் செயற்பாடுகள் சீராக நடைபெற உதவும் உறுப்புகளில் இந்த சக்கரங்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ளும்.
இந்த மந்திரங்களை உச்சரித்தவர்களின் நினைவாற்றலும், ஒருமுனைப்படுத்தும் ஆற்றலும் சிறப்பாக இருந்ததாக, இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் ஒருவர் சுவாசம் சீராகி, அவரது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் எனப் பிரிட்டிஷ் ஜர்னல் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.
மனதை வலுவடையச் செய்து மன அழுத்தத்தைப் போக்கும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் மூளை ஊக்குவிக்கப்படும். இதனால் அமைதி கிட்டும். இதைத்தவிர ஆழமாகச் சுவாசிக்கும் போது, சருமத்திற்கு அதிகமாக ஆக்சிஜென் கிடைக்கும். மேலும் சருமம் இளமையுடனும் பொலிவுடனும் காணப்படும்.
சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை அனைவரும் அன்றாடம் சொல்லி உடல் வலிமையும், மன வலிமையும் பெறுவோம்!!
https://youtu.be/l7j-B-1TmfA
Leave a comment
Upload