தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 32 "பாடம் எடுத்த பல்பு " - மோகன் ஜி

2024925161635912.jpg

“இந்த அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நீங்கள் எடுக்கப்போகும் முதல் வகுப்பு ‘ஸ்டெரெஸ் மேனேஜ்மென்ட்’ பற்றியது தான் மோகன் ஜி. வகுப்பு நடுநிலை அதிகாரிகளுக்கானது. சேனல் ஒன்றில் இந்த சனிக்கிழமை இரண்டாவது வகுப்பு உங்களுக்கானது. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம ஜமாய்ங்க! ஆல் தி பெஸ்ட்!”என்று இரண்டு நாட்களுக்குமுன் சக பயிற்சியாளர் சீதாராம் சொல்லியிருந்தார்.

ஒன்றரை மணி நேரத்திற்கு எடுக்க வேண்டிய வகுப்பை வங்கிப் பணி, இல்லம் மற்றும் சமூகத்தில் என உதாரணங்களும் மேற்கோள்களென சில சம்பவங்களுமாகத் தொகுத்து கொண்டேன். ஆர்வத்துடன் அந்த வகுப்புக்குத் தயாராகவே இருந்தேன்.

அடுத்த இரண்டு நாட்களும், ஹைதராபாதுக்கு லாரியில் வந்த வீட்டு சாமான்களைப் புதுவீட்டில் இறக்கி ஒழுங்கமைக்க விடுப்பு எடுத்து இருந்தேன்.

அந்த சனிக்கிழமையும் வந்தது. இரண்டாம் வகுப்பு தொடங்கியதும், சேனல் 1ல் ஜானவாச மாப்பிள்ளை போல் டிப்டாப்பாக நுழைந்தேன். என் பின்னாலே கல்லூரி முதல்வரும் இன்னொரு மூத்த பயிற்சியாளரும் நுழைவதையும் பார்த்தேன். நான் எப்படி வகுப்பெடுக்கிறேன் என்று மதிப்பாய்வு செய்ய வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நேரே மேடைக்குச் சென்று, அந்த அதிகாரிகளுக்கு என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்து, அந்த வகுப்புக்கான அவசியத்தையும் குறிப்பிட்டு நேரே வகுப்பை தொடங்கினேன்.

வகுப்பில் இருந்த அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பின்னால் அமர்ந்திருந்த கல்லூரி முதல்வரைத் திரும்பிப் பார்த்தபடியும் இருந்தாலும், சில நொடிகளில் வகுப்பில் ஈடுபட்டு ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள். கனஜோராகத் தொடங்கி விட்டதை உணர்ந்து கொண்டேன். அந்த அதிகாரிகளிடம், சில நிலைமைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் எனக்கேட்டும் அவர்கள் விடையிலிருந்து வகுப்பை தகவமைத்தும் நடத்தினேன்.

வகுப்பு முடிந்ததும் அதை சிலாகிக்கும் வண்ணம் பலமாக கரகோஷம் எழுப்பினார்கள். ஒரு மூத்த அதிகாரி எழுந்து, அந்த வகுப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் அதை நடைமுறைக் கண்ணோட்டத்தில் தெளிவுபடுத்தியதையும் பாராட்டினார்.

பாட நிரலில் இல்லாத போதும் மன அழுத்தம் பற்றிய அத்தியாவசிய வழிகாட்டுதலை பாடமாக்கி வழங்கிய முதல்வருக்கும் நன்றி கூறினார்.

பலரும் எனக்குக் கைக்குலுக்கி அகன்றார்கள். கல்லூரி முதல்வர் என் முதுகில் ஓங்கித் தட்டி “சபாஷ் மோகன் !அட்டகாசமாக வகுப்பெடுத்தீர்கள். இங்கு முடித்துக் கொண்டு என் காபினுக்கு வாங்க!” என்று அகன்றார்.

“மே ஐ கம் இன் சார்?’’ என்றபடி அவர் அறைக்குள் நுழைந்தேன்.

“வாங்க மோகன்! என் வாழ்த்துகள்! முதல் வகுப்பிலேயே வாணவேடிக்கை நிகழ்த்தி விட்டீர்கள்!”

“நன்றி சார்!”

“இந்த வகுப்பை எடுக்க உங்களுக்கு யார் சொன்னது மோகன்?”

“சீதாராம் தான் சார். அவர்தானே இந்த கோர்ஸ் கோ-ஆர்டினேட்டர்?”

“சீதாராமன் பயிற்சியாளர்களுடன் இன்று நம் கணனி மையத்திற்கு அல்லவா சென்றிருக்கிறார்? உங்களுக்கு இந்த மாறுதலை அவர் சொல்லவில்லையா?”

“இல்லையே சார்! அப்போது நான் இன்று வகுப்பு எடுத்தது யாருக்கு?” என்று குழப்பத்துடன் கேட்டேன்.

“அது தானா சங்கதி?! நீங்கள் எடுத்தது வேறு பயிற்சி பெற வந்த மூத்த முக்கிய அதிகாரிகளுக்கான வகுப்பு. இன்று இறுதி வகுப்பாக அதை எடுக்க வேண்டியவன் நான்!”என்று புன்முறுவல் பூத்தார்.

“சாரி சார்! நான் வகுப்பைத் தொடங்கியவுடனே நீங்கள் என்னை தடுத்துச் சொல்லி இருந்தால், நிறுத்திக் கொண்டிருந்திருப்பேனே சார்” என்றேன்.

“அதனால் என்ன மோகன்? மேலும், இந்தக் கல்லூரியில் இது உங்கள் முதல் வகுப்பு. ஆரம்பத்திலேயே அதை நான் தடுக்க விரும்பவில்லை. நீங்கள் எப்படி வகுப்பெடுக்கிறீர்கள் என்று பார்க்க வாய்த்த சந்தர்ப்பமாகவும் அமைந்துவிட்டது.”

நான் எடுக்கும் முதல் கிளாஸே பல்பு வாங்கி விட்டதே! ச்சே!

“நீங்கள் சொல்லவந்ததை நான் சொல்ல விடாதது பயிற்சியாளர்களுக்கு நஷ்டமாக அல்லவா போய்விட்டது?” என்று வருத்தம் தெரிவித்தேன்.

“அடடா! நெவர் மைண்ட் மோகன். அவர்களுக்கு ஏதும் நட்டமில்லை. மாறாக, சில வலிய சிந்தனைகளை அல்லவா அவர்களுக்குள் தூண்டி இருக்கிறீர்கள் அதுவரை அவர்களுக்கும் லாபம் தான்.”

“நன்றி சார்!” என்றேன்.

“ஒருவகையில் எனக்கும்கூட லாபம் தான் மோகன்” என்று புதிர்போட்டார் கல்லூரி முதல்வர்.

“உங்களுக்கு எந்த வகையில் லாபம் சார்?” என்று சகஜமானேன்.

அகப்பண்பு மற்றும் மனோவியல் வகுப்புகள் எடுக்க அவ்வப்போது ரூபாய் 4000, 5000 எனக் கொடுத்து வெளி ஆட்களை அழைத்து வருகிறேன். இனி அந்தச் செலவு உங்கள் மூலம் கணிசமாக்க் குறைவது லாபம் தானே?”

“அந்த நாயலாயிரம் ஐயாயிரத்தில் பாதியாவது எனக்கு கொடுப்பீர்களா?” என்று சிரித்தேன்.

“ஒய் நாட்?! அவசியம் தருகிறேன். அப்படித் தருவதை உங்கள் மாதசம்பளத்தில் கழித்துக் கொள்வேன் பரவாயில்லையா?” என்று கைகுலுக்கி விடை தந்தார்.

யோசனையுடன் எனது அறைக்கு திரும்பினேன்.

என் டேபிளின் ஒரு ஓரத்தில், ‘இன்று உங்கள் வகுப்பு கேன்சல் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே செல்கிறோம். என்ஜாய்! சீதாராம்’ என்றக் குறிப்பு கண்ணாடி கோளத்தின் கீழிருந்து என்னைப் பார்த்து நகைத்தது.

டேபிள் மேலயிருந்தக் கொண்டையைப் பார்க்க மறந்துட்டேனே!