தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
சமையலறை கேஜட்ஸ் ,வரமா ? - கோமதி

2024925161508102.jpg

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த உடல் நலம் பற்றிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த என் மகள், தன்னுடன் அந்த நிகழ்ச்சியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த என் அம்மாவிடம், "பாட்டி! நீயும் அம்மா மாதிரி இருக்கும்பொழுது இப்படித்தான் டயட்டிங், ஜிம்முன்னு போவியா?" என்று துடுக்குடன் என்னை பார்த்து கண் சிமிட்டியவாறு வினவினாள். "போடி! அதுக்கெல்லாம் எங்க நேரம் !" என்ற என் அம்மாவின் பதில் என்னை சிந்திக்க தூண்டியது.

அதற்காக நான் ஒரேடியாக பழங்காலத்துக்கு சென்று 'அம்மி, ஆட்டுக்கல்' என்று கூறினால் நீங்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தாலும் செய்வீர்கள். அந்த அளவிற்கு நான் செல்லவில்லை. ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அந்த அளவு கூட செல்ல வேண்டாம், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கை முறையை நான் திரும்பிப் பார்க்கிறேன். இன்றைக்கு பெண்களுக்கு இருக்கும் பெரும் சவால்களான ஸீரோ சைஸ், ஃபிட்னெஸ் போன்றவை இருந்தனவா என்றால் நிச்சயம் இல்லை. என் அம்மா கூறியது போன்று அதை பற்றியெல்லாம் யோசித்திருக்க கூட மாட்டார்கள். நேரமும் இருந்திருக்காது என்பதும் உண்மையே !

2024925161549591.jpg

பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் அது அரசாங்கம் சார்ந்த பணியாகவோ, அல்லது தனியார் அலுவலகம் சார்ந்த பணியாகவோ தான் இருந்திருக்கிறது. இன்றைக்கு இருப்பது போன்று ஒவ்வொரு வீட்டிலும் வாகன வசதியும் இருந்திருக்காது. இன்றைக்கு நாம் அனைவரும் தாரக மந்திரமாக கொண்டிருக்கும் 10k ஸ்டெப்ஸ் என்பது அன்று நமது வாழ்வோடு இயைந்திருக்கும் ஒரு செயலாக அமைந்திருந்தது. வீட்டு சாப்பாடு என்பதும் பிரதானமாக இருந்திருக்கிறது. ஹோட்டல் சென்று சாப்பிடுவது என்பதும் அரிதாக நிகழும் ஒரு நிகழ்வு தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டால், வாரம் ஒரு படம் என்பதால், இன்று மணிக்கணக்கில் உட்காரும் வழக்கமும் அன்று இருந்திருக்காது. கைபேசி என்பது அறியப்படாத ஒரு காலம். கணிப்பொறியும் கண்டிராததால் அனைத்து விதமான சேவைகளுக்கும் நேரே சென்று பெறுவதே ஒரே வழி.

இன்று தொழில் நுட்பம் வளர்ந்து உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், நம்முடைய உடல் நலனை பேணுவது என்பது நம் முன்னே இருக்கும் ஆகப் பெரிய சவால். நமது வேலைகள் அனைத்தையும் சுலபமாகி கொடுத்திருக்கும் இந்த கணிப்பொறி, நுண்ணறிவு யுகத்தில், நம்மை, நம் உடல் நலனை பேணுதல் என்பது மிகவும் அவசியம், கட்டாயமும் கூட. "நான் பிஸி" என்று ஒரு பேச்சுக்காக கூறலாமே தவிர, உண்மை அதுவல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கைபேசி முதல் கணிப்பொறி வரை, ரீல் ஸ் முதல் யூ டியூப் வீடியோ வரை, சினிமா முதல் சீரிஸ் வரை என்று நம்முடைய பொன்னான நேரத்தை நாமே வீணடித்து கொண்டிருக்கிறோம்.

2024925161645477.jpg

தவிர நமது சமையலறையில் உள்ள நவீன சாதனங்கள் அதிக உடல் உழைப்பை குறைத்து விட்டது . கிரைண்டர் ,மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் ,டிஷ் வாஷர் ,பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் நம் நேரத்தை மிச்சப்படுத்தி ,வேலைகளை சுலபமாக்கி விட்டன , நம் அம்மாக்கள் வீட்டு வேலைகளை செய்வதன் வழியாகவே தங்கள் உடல் பருமனைக் குறைத்து பிட்டாக இருந்தனர் . சாதரணமாக வெங்காயம் ,காய்கறி நறுக்குவதற்கும் ,மாவு பிசையவும் கருவிகள் வந்து விட்டதால் வேலை சுலபமாக முடிகிறது .நாம் கைகளால் வேலை செய்வது தடை படுகிறது .வீடு பெருக்கவும் , துடைக்கவும் ரோபோ வந்து விட்டது .நாம் குனிந்து ,நிமிர்ந்து வேலை செய்வதில்லை

இவற்றில் இருந்து மீண்டு ஒரு ஒழுங்கோடு கூடிய வாழ்க்கை முறையை பின்பற்ற முடியுமா என்பதுஒரு கேள்விக்குறியே .முடிந்த வரை நம்மால் இயன்ற வேலைகளை கருவிகளின் உதவி இன்றி செய்தால் ஜிம்மை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எளிதில் கைப்பற்றலாம்.