போன வாரம் பேசியது போலவே இந்த வாரம் சிற்றிலக்கியங்களில் சிலவற்றை தொடை நயங்களுடன் பார்ப்போம் என்று ஆரம்பித்துவிட்டார் பரணீதரன்.
முதலில் அந்தாதி தொடையில் இருந்து ஆரம்பிப்போம்.
பொதுவாக தொடைகள் நமது ஞாபக சக்தியை மிகைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.
அந்த காலத்தில் இன்று உள்ளது போல டிஜிட்டல் புத்தகங்களோ அல்லது பேப்பர் புத்தகங்களோ கிடையாது.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் சிலரே.
காதால் கேட்டு, மனதில் நிறுத்தி, வாயால் கூறும் முறையே மிகுதியாக இருந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் கேட்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் மனதில் நிறுத்தி ஞாபகப்படுத்திக் கொள்வது மிகவும் கடினமான ஒரு செயல். அந்த செயலை சுலபமாக செய்வதற்கு உருவாக்கப்பட்டதே தொடைகள் ஆகும்.
எடுத்துக்காட்டாக, அந்தாதி இலக்கியத்தில் கடைசியாக முடிகின்ற தொடரிலோ, சொல்லிலோ அல்லது எழுத்திலோ அடுத்த தொடரோ, சொல்லோ அல்லது எழுத்து ஆரம்பிக்கும் என்று போன வாரம் பார்த்தோம்.
இதற்கு காரணம், முதல் பாடலில் வரும் சொல்லையோ அல்லது முதல் வரியையோ நாம் நன்றாக மனப்பாடம் செய்து விட்டால் அதற்கு அடுத்த சொல் அல்லது வரி இதை தொட்டு வருகின்ற காரணத்தால் நம்மால் எளிதாக மனப்பாடம் செய்து மீண்டும் ஒப்பிக்க முடியும். இதற்கு சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.
முதலில் வருவது நாம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த அபிராமி அந்தாதி ஆகும்.
பாடியவர் : அபிராமி பட்டர்
பாடப்பட்டவர் : திருக்கடவூர் அன்னை அபிராமி
பாடப்பட்டதன் நோக்கம்: சரபோஜி மன்னரிடம் மேற்கொள்ளப்பட்ட சவால்.
பாடப்பட்ட பாடல்கள் : 102 (100 பாடல்கள், 1 காப்பு, 1 நூற்பயன்)
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே
துணையும் தொழும் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் - பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவ தறிந்தனமே. (த் + அறிந்தனமே)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப்
பிறிந்தேன்நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமள மேகொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த
புனிதரும் நீயும்என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
மேலே உள்ள பாடல்களில், அந்தாதித் தொடை மட்டுமில்லாமல், மற்ற தொடைகளும் மிகுதியாக வந்து உள்ளன. எடுத்துக்காட்டாக :
எதுகை தொடை :
உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற
துணையும், பணையும், கணையும், அணையும்
அறிந்தேன், செறிந்தேன், பிறிந்தேன்நின், மறிந்தே
மனிதரும், குனிதரும், பனிதரும், புனிதரும்
இங்கே எதுகை தொடை என்று இரண்டாவது எழுத்தை காட்டியிருந்தால் கூட, ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்தை தவிர மற்ற எழுத்துக்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.
மோனை தொடை :
உதிக்கின்ற, உச்சித், உணர்வுடையோர்
மதிக்கின்ற, மாணிக்கம், மாதுளம், மலர்க்கமலை
துணையும், தொழும், தெய்வ, தாயும்
பணையும், பதிகொண்ட, பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்
அறிந்தேன், அறியா, அறிந்துகொண்டு
பிறிந்தேன்நின், பெருமைஎண்
மனிதரும், மாயா, முனிவரும்
பனிதரும், பாம்பும், பகீரதி
புனிதரும், புந்திஎந், பொருந்துகவே
மோனை தொடையில் அதே எழுத்தோ அல்லது அதனுடைய வரிசையில் அமைந்துள்ள எழுத்தோ வருமாறு இந்த செய்யுள் அமைக்கப்பட்டுள்ளது.
முரண் தொடை :
அறிந்தேன், அறியா, அறிந்துகொண்டு
திங்களும், பாம்பும்
முரண் தொடையில் அறிந்ததையும் அறியாமையையும் ஒரே பாடலில் கூறியுள்ளார். அதேபோல திங்கள் என்று அழைக்கப்படுகின்ற சந்திரனையும், அவருக்கு எதிரியான பாம்பையும் (இராகு, கேது) ஒரே பாடலில் கூறியுள்ளார்.
தன்னுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொழுது கூட, இவ்வளவு அழகாக சந்த நயத்தையும் தொடை நயத்தையும் ஏற்றி அம்பிகையின் மீது இந்த அந்தாதியை பாடியுள்ளார் அபிராமி பட்டர்.
அடுத்ததாக நாம் பார்க்கப் போகின்ற அந்தாதி செய்யுள் கவிச் சக்கரவர்த்தி கம்பருடையதாகும்.
பாடியவர் : கம்பர்
பாடப்பட்டவர் : அன்னை சரசுவதி
பாடப்பட்டதன் நோக்கம் : அன்னையின் அருளை வேண்டி பாடப்பட்டது
பாடப்பட்ட பாடல்கள் : 31 (30 பாடல்கள், 1 காப்பு)
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே
வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே
உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே
இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே
இந்த அந்தாதிப் பாடலிலும் பலவகையான தொடைகளை கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாண்டு உள்ளார். எதுகை தொடை, மோனை தொடை மற்றும் அந்தாதித் தொடை ஆகிய மூன்றையும் போல்ட் (Bold) செய்து உள்ளேன்.
இது போலவே பல அந்தாதி செய்யுள்கள் நமது இலக்கியங்களில் பரவி கிடக்கிறது. அவற்றுள் சில இலக்கியங்களின் பெயர்களை மட்டும் கீழே கொடுத்துள்ளேன் :
பதிற்றுப்பத்து (சங்க இலக்கியம்) - நான்காம் பத்து
காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி
பதினோராம் திருமுறையை 'அந்தாதி மாலை' - 8 அந்தாதி உள்ளது
அதிவீரராம பாண்டியர் - திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
சிவப்பிரகாச சுவாமிகள் - திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
திருவரங்கத்தமுதனார் - ஆழ்வார்கள் மற்றும் இராமானுசர் மீது இராமானுச நூற்றந்தாதியை 108 கட்டளைக் கலித்துறைகளில் பாடியுள்ளார்.
கம்பர் - நம்மாழ்வார் மீது சடகோபர் அந்தாதியை 10 பாக்களில் பாடியுள்ளார்.
மணவாள மாமுனிகள் - திருவாய்மொழி நூற்றந்தாதி
அழகிய மணவாளதாசர் - திருவரங்கத்து அந்தாதி, திருவேங்கடத்து அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
திருவிடைமருதூர் அந்தாதி
இரு தலங்களின் மேன்மை போற்றப்பட்டுள்ளது - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
அந்தாதியில் பாட்டுடைத் தலைவர் இருவர் - அம்மை பாதி அப்பன் பாதி.
தண்டபாணி சுவாமிகள் - குருநாதன் அந்தாதி
அம்பிகை அந்தாதி
அருணகிரி வெண்பா அந்தாதி
அழகரந்தாதி
கந்தர் அந்தாதி
கருவை அந்தாதிகள்
கோணமலை அந்தாதி
சிவபெருமான் திருஅந்தாதி
திருத்தொண்டர் திருவந்தாதி
திருவருணை அந்தாதி
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவேகம்பர் அந்தாதி
நிராமய அந்தாதி
பந்தன் அந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
மகாமக அந்தாதிக் கும்மி
அடுத்த வாரம் வேறு ஒரு சிற்றிலக்கிய வகையை எடுத்து அதன் தொடைகளை விரிவாக பார்ப்போம் என்றே விடை பெற்றார்.
Leave a comment
Upload