"அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே".
மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் அன்னை பராசக்தியின் திருவுருவே பேரின்பம் என்பர். ஞானத்தின் திருவுருவும் அவளே, ஞானத்தை அளிப்பவளும் அவளே என்பர் . ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் அவளது விருப்பப்படியே நடக்கின்றன .
முழுமுதற் கடவுளாகிய சிவனும் சக்தியின்றி எதுவும் நடக்காது என அறிந்திருக்கிறான் என்று திருமூலர் கூறியுள்ளார்.
அம்மா என்று மனமுருகி அழைத்தால் ஓடோடி வருவார். நம் துயர் நீக்கிட, நம்மைக் காத்திடப் பல வடிவங்களில் அவதாரம் தரித்தார் அன்னை பராசக்தி. சிலர் தங்களுடைய துன்பங்கள் தீர வேண்டும் என்று அன்னை பராசக்தியைப் பிரார்த்திப்பார்கள். இன்னும் சிலர் தாங்கள் செய்யும் செயல்கள் நல்லபடியாக நிறைவேற வேண்டி வழிபடுவார்கள்.
தமிழ்நாட்டில் அன்னை பராசக்தி அதிசய கோலங்களில் வீற்றிருக்கும் ஸ்தலங்கள்…
கிடந்த கோலத் துர்க்கை சந்நிதி உள்ள ஸ்தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள ஸ்தலம் திருவெண்காடு.
அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவ மூர்த்தம் திருமாற்பேறு கோயிலில் உள்ளது.
துர்க்கையம்மனுக்கென்று தனிக்கோயில். மயிலாடுதுறையை
அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.
திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.
திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.
குழந்தையுடன் அம்பிகை காட்சி தரும் ஸ்தலங்கள்:
இசக்கியம்மன்-நெல்லை மாவட்டம், சிதம்பராபுரம் கிராமம்.
பிள்ளை இடுக்கி அம்மன் மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு.
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளார்.
அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.
அம்மனின் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடும் ஸ்தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையைத் தடவிய கோலத்தில் உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளார்.
தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனைக் கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சிதம்பரம் தில்லைக் காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்ம சாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் பெரியநாயகி சந்நிதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சந்நிதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.
துர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில், மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.
வடக்கு நோக்கி சிவனைப் பூஜை செய்யும் அம்பிகை சந்நிதி உள்ள ஸ்தலம் தக்கோலம்.
தனித்துவமான, திருமேனி வடிவமைப்புள்ள அம்பிகை மூக்குத்தி போடுவதற்கான துவாரமும், தலைப்பின்னலில் ஜடை குஞ்சத்துடன் இருக்கும் அரிய காட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது.
திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார ஸ்தலம் திருப்பாச்சூர். இக்கோயிலில் காளி அம்மன் தனி சந்நிதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறார்.
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் ஸ்தலத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இத்தலத்து அம்பிகை சௌந்தரநாயகிக்கு, சிவபெருமான் போல் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருக்கின்றது. அம்பிகைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும்போது அவருடைய மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்க முடியும். மற்றும் சந்தனாபிஷேகம் செய்யும்போது, கர்ப்பிணிப் பெண் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இந்த அம்மனின் உள்ளங்கையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் கை ரேகைகளும் அடங்கி இருப்பதாக ஐதீகம். பாலாபிஷேகம் செய்யும் போது அம்மனின் உள்ளங்கை ரேகைகளை நாம் பார்க்கலாம்.
புன்னைநல்லூர் முத்துமாரியம்மனுக்கு முத்து முத்தாக
வியர்க்கும் அதிசயம் இக்கோயிலில் நடைபெறுகிறது.
நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோயில் ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள சிறுகரும்பூரில் உள்ளது.
ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோவிலில் அன்னை சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.
அன்னை கன்னியாகுமரி, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இலுப்பைப் பூமாலையை ஒரு திருக்கரத்தில் தரித்து மற்றொரு திருக்கரத்தைத் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக அன்னை நின்றபடி அருள்பாலிக்கிறார்.
இதைத்தவிர கொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.
பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறார்.
அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.
“அன்னை பராசக்தி! ஜெய ஜெய ஆதி பராசக்தி!
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!!”
இத்தனை அதிசய கோலங்களில் அன்னை பராசக்தி அருள்பாலிக்கும் ஸ்தலங்களை நாம் மனதார நினைத்து வழிபடுவோம்!!
Leave a comment
Upload