நம் தமிழகத்தின் டாக்டர் .அமுதா , தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் இயக்குனராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
எப்போதுமே 'முதல்'வர்கள் ஸ்பெஷல் தான் .
முதல் பெண் பிரதமர் , முதல் பெண் கவர்னர் , முதல் பெண் முதலமைச்சர், முதல் பெண் ஐபிஎஸ் , முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்று எத்தனை பெயர்களை நம் இந்திய சரித்திரம் தன் ஏடுகளில் பதிவு செய்து வைத்துள்ளது. இவர்கள் வரிசையில் டாக்டர் அமுதா தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் இயக்குனராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
இந்திய வானிலை ஆய்வு மைய கட்டுப்பாட்டின்கீழ், நாடு முழுவதிலும் 7 மண்டல வானிலை ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம். இதன் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளின் வானிலை முன்னறிவிப்புகளை மேற்கொள்கிறது.
இம்மையங்கள் அனைத்தும் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்களைத் துல்லியமாக கண்டறிந்து வெள்ளம், புயல், பலத்த மழை போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த வானிலை மையத்தின் இயக்குநர்களாக இருந்த 'மழை மனிதர்; ரமணன் உள்பட பலர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மிகப் பிரபலம். ஏனெனில், ‘மழை பெய்யும், நிச்சயமாக பெய்யுமளவுக்கு துல்லியமாக கணித்து கூறியுள்ளனர். இதற்காக பருவமழை காலங்களில், பள்ளி விடுமுறை அறிவிப்புக்காக, ரமணனின் முகத்தை தொலைக்காட்சியில் மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய காலங்களும் உண்டு.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த பாலச்சந்திரன், கடந்த பிப்ரவரி 28-ம் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 1-ம் தேதி புதிய பெண் இயக்குநராக டாக்டர் அமுதா பொறுப்பேற்று கொண்டார். இவர், கடந்த 1991-ம் ஆண்டு பணியைத் துவங்கி, கடந்த 34 ஆண்டுகளாக இந்திய வானிலை மையத் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். வடகிழக்கு பருவமழை பற்றிய ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அமுதா, அத்துறையில் ‘டாக்டர்’ பட்டமும் பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவில் பருவமழை முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய இவர், வடகிழக்கு பருவமழையின் போக்குகள் பற்றி பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். டாக்டர் அமுதா இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பே, வானிலை முன்னறிவிப்பில் செயற்கைகோள் படங்கள், ராடார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் பழைய வானிலை தரவுகளை ஆய்வு செய்து, எதிர்கால வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்கும் திட்டங்களை டாக்டர் அமுதா செயல்படுத்தப் போகிறார். மேலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், வானிலை முன்னறிவிப்பு மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
தென்னிந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிர மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. சென்னையில் கடந்த 2015, 2021, 2023-ம் ஆண்டுகளில் வெள்ளப் பெருக்கு, வானிலை முன்னறிவிப்புகளின் கேர்ள் வயநாட்டில் கடும் நிலச்சரிவு போன்றவை குறித்து வானிலை ஆய்வு மைய தகவல்கள், அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன.
இது, வெறும் முன்னறிவிப்பு வெளியிடுவதோடு நின்றுவிடாமல். மக்களிடையே வானிலை எச்சரிக்கைகள் குறித்து பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சமூகப் பணிகள் டாக்டர் அமுதா தலைமையில் மேலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து “வானிலை அறிவியல் பற்றி அனைவருக்கும் புரியும் வகையில், எளிமையாக எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் மக்கள் செயல்பட முடியும்!” என்கிறார் டாக்டர் அமுதா. தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் டாக்டர் அமுதாவின் பணி மேன்மேலும் சிறக்க, விகடகவி சார்பில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.
Leave a comment
Upload