அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'டைம்ஸ்' இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பெயர்களை பட்டியலிட்டு கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு பட்டியலில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இந்தியாவை சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளர் பூர்ணிமா தேவி பர்மனும் ஒருவர்.
அசாம் மாநிலம் காமரூப் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா தேவிக்கு சிறு வயது முதலே பறவைகள் விலங்குகள் மீது தனி ஆர்வம்.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அதில் முனைவர் பட்டம் பெற பிஎச்டி படித்தார்.
அப்போது நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.
2007-ஆம் ஆண்டு முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் பூர்ணிமாதேவி ஈடுபட்டிருந்த போது நாரை கூட்டை ஒருவர் வெட்டுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் சண்டையிட்டு அப்படி செய்யாதீர்கள் என்று தடுத்தார்.
அப்போது அவர் கோபமாக நாரை மிகவும் அழுக்கான பறவை, அதன் உணவு பழக்கம் கூட அருவருப்பாக தான் இருக்கிறது அதனால் தான் நாரைகளை அசாம் மக்கள் வெறுக்கிறார்கள் என்றார்.
அவர் இந்த பதில் பூர்ணிமா தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தனது ஆராய்ச்சி படிப்பையே சிறிது காலம் நிறுத்திவிட்டார் பூர்ணிமா.
நாரைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட தொடங்கினார்.
சுற்றுச்சூழலில் நாரைகளின் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.
அவர்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நாரைக்கு அசாம் மொழியில் ஹர்கிலா என்று பெயர் .
இவற்றைக் காப்பதற்காக அர்ப்பணிப்புள்ள பெண்களை ஒன்றுபடுத்தி இதைக் காப்பதின் அவசியத்தை எடுத்துரைத்து ஒரு குழுவை ஏற்படுத்தினார்.
அந்தக் குழுவிற்கு "ஹர்கிலாஆர்மி" என்று பெயர் சூட்டினார்.
இந்த ஆர்மியின் பணிகள் நாரைகள் கூடு கட்டும் இடங்களை பாதுகாத்தல்,காயம் அடைந்த நாரைகளுக்கு சிகிச்சை இப்படி நாரைகள் மீது அபரித பிரியத்துடன் பல்வேறு பணிகளை இவர்கள் செய்து வந்தார்கள்.
இப்போதும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் அழிந்து வரும் நிலையிலிருந்து நாரை இனத்தை மீட்டனர் .
பூர்ணிமா தேவியின் பணி நாரைகளை பாதுகாப்பதோடு நின்றுவிடவில்லை .பல பெண்களை தொழில் முனைவராக மாற்றும் நடவடிக்கையிலும் இறங்கினார்.
அவர்கள் நெசவுத்தொழில் ஈடுபட உதவி செய்தார். இப்போது அந்தப் பெண்கள் நரைகளின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட துணிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
இவரது பணியை பாராட்டும் வகையில் 2017- ஆம் ஆண்டு பெண்களுக்கான மிக உயர்ந்த பிரதான நாரி சக்தி' விருது வழங்கப்பட்டது.
அதே ஆண்டில் 'கிரீன் ஆஸ்கர் 'என அழைக்கப்படும் விட்லி விருதையும் பெற்றார் இவர் .
நேஷனல் ஜியோகிராபிக் இந்தியாவும், பூர்ணிமா தேவியை பாராட்டியுள்ளது.
இப்போது கூடுதல் சிறப்பாக டைம் பத்திரிக்கையின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் பூர்ணிமா தேவி.
Leave a comment
Upload