தொடர்கள்
அரசியல்
வல்லரசு குரங்குகள் கைகளில் உக்ரைன் அப்பம்-தில்லைக்கரசிசம்பத்

நன்றி: தினமணி.

கடந்த பிப்ரவரி 28 ல் அமெரிக்காவில் நடந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பில் “இதுவரை $119.7 பில்லியன் பணம் கொடுத்து நஷ்டமாகியிருக்கிறோம்.

கடைசியில் மூன்றாம் உலகப்போரை கொண்டு வந்துவிடுவீர்கள் போல இருக்கிறதே!”என்று ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை நோக்கி கடுமையாக குற்றச்சாட்டியிருக்கிறார்.

எதிரியான ரஷ்யா அடித்தது கூட பரவாயில்லை உடன் நின்ற நண்பன் அமெரிக்கா, ட்ரம்ப் அதிபரான உடனேயே முதுகில் கத்தியால் குத்தியதால் நிலைத்தடுமாறி நிற்கிறது உக்ரைன்.

ஏற்கனவே உக்ரைன் இல்லாமலேயே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகள் ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து இடையேயான பேச்சுவார்த்தை பிப்ரவரி 18, 2025 அன்று நடைபெற்றது.

20250207171424149.jpg

இப்போது அமெரிக்கா ஜெலன்ஸ்கியை பேச்சுவார்த்தைக்கு வா என கூறி மறுபடியும் அவமானப்படுத்தி இருக்கிறது. வல்லான் வகுத்ததே சட்டம் என உலகில் உள்ள பலம் குன்றிய நாடுகளின் உள்ளே புகுந்து வல்லரசுகள் நாட்டாமை செய்வது வழக்கமான ஒன்று.

வல்லரசுகளின் நண்பனான தானும் வல்லரசு தான் என நம்பி தேவையில்லாமல் போரில் இறங்கிய உக்ரைன் இன்று அதற்கு மிகப்பெரிய விலை கொடுத்து உலகின் முன் மூக்குடைப்பட்டு நிற்கிறது. “மெக்ஸிக்கோவோ, கனடாவோ,பாலஸ்தீனமோ,ஈராக்கோ ,உகாண்டாவோ, சிரியாவோ,உக்ரைனோ சுயநலம் என்று வந்துவிட்டால் எனக்கு எல்லாமே ஒன்னுதாண்டா டோமருங்களா!” என அமெரிக்கா உக்ரைன் மண்டையில் தடியால் அடி போட்டிருக்கிறது.

ரஷ்யா உக்ரைன் மேல் குண்டுப்போடுவதை இன்னும் நிறுத்தவில்லை. ராணுவ உதவி மட்டுமல்லாமல் இதுவரை

அமெரிக்க உளவுத்துறை கொடுக்கும் தகவல்களை வைத்து ரஷ்ய தாக்குதல்களிலிருந்து முடிந்தவரை தப்பித்து கொண்டிருந்தார்கள் உக்ரைன் படையும்,மக்களும். இன்று அந்த புலனாய்வுத்தகவல் பரிமாற்றங்களையும் திடீரென அமெரிக்கா நிறுத்திவிட்டது.

“இப்போது எங்களது நிலைமை குருடன் சண்டை போடுவது போல. உக்ரைன் படையினர் மட்டுமின்றி குடியிருப்புகளும் தாக்கப்பட்டு பொதுமக்களும் பெருமளவில் உயிரிழப்பார்களே!” என உக்ரைன் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

நிலைமை தீவிரமாவதை உணர்ந்த ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கடிதம் அனுப்பி சரண் அடைந்திருக்கிறார். ஜெலென்ஸ்கி தனது கடிதத்தில், அமைதிக்கான வழிகளை விவாதிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா உக்ரைன் இடையே கனிமவள பங்கீடு குறித்த ஒப்பந்தத்தையும் அதன் மூலம் இருநாடுகளிக்கிடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் ஜெலன்ஸ்கி அதில் விவரம் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஷ்யாவை விட அமெரிக்காவிற்கு உக்ரைனின் கனிம வளங்களை ஆக்ரமிப்பு செய்ய அதிகம் சாதகமாக இருக்கும்.

இது ஜெலென்ஸ்கியின் ராஜதந்திர அணுகுமுறையாக, அமெரிக்காவின் ஆதரவை மீட்டெடுப்பதற்கும், போருக்கு ஒரு தீர்வை அடைவதற்குமான உக்ரைனின் முயற்சிகளாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தனது ஆதரவினை நிறுத்தி உக்ரைனை மிரட்டுவதால் உக்ரைனுக்கு வேறு வழியில்லாது ரஷ்யாவுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ட்ரம்பின் இந்த முடிவை அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜான் பிரென்னன் உள்பட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவின் உக்ரைனுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசரமாக சந்தித்து, உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளனர் .

ஜெர்மன் சேன்ஸலர் ஒலாப் ஷோல்ஸ், நேட்டோவின் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், உக்ரைனுக்கான இராணுவ நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.இந்த நிலைமையில் ரஷ்ய-உக்ரைன் போர் தொடர்ந்து நடைப்பெற்றுவரும் சூழலில் அண்மையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் உள்ள ஓட்டல் தாக்கப்பட்டது. இதில் இருவர் உயிரிழந்ததுடன், ஒரு குழந்தையை உள்ளடக்கிய 28 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவரான திமித்ரி மெட்வேதேவ், மாஸ்கோவின் லட்சியம் என்பது உக்ரைனுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்துவதே என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது உதவியை நிறுத்திய பின்னர், ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் செய்கை ஐரோப்பிய தலைவர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய தலைவலியே. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் ஒரு பக்கம் எதிரி , இன்னொரு புறம் நம்பிக்கை துரோகி என வாங்கிய அடிகளில் இப்போது உக்ரைன் நிலைக்குலைந்து போய் நிற்கிறது. இந்நிலையில் உக்ரைன் செய்ய வேண்டியது, சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பதே!

உக்ரைன் நேரடியாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது சூழ்நிலையின் வீரியத்தை குறைக்க உதவலாம்.

ரஷ்யாவும் மிகுந்த இழப்புகளை சந்தித்து வருகிறது.

ஒரு ஒப்பந்த முடிவுக்கு வருவது இரு தரப்பிற்கும் நல்லது.இதற்கு உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்தவேண்டும். நேட்டோ என்ற வார்த்தையையே ஜெலன்ஸ்கி உச்சரிக்காமல் இருந்தால் மிக நல்லது.ஸ்விட்சர்லாந்து மாதிரி உக்ரைன் எப்பக்கமும் சாயாத நடுநிலை நாடாக வேண்டும். அமெரிக்கா ஆதரவினை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவை உக்ரைன் வலுப்படுத்த வேண்டும்.

உக்ரைனில் செம்பு, கொள்கலன் எரிபொருள், டைட்டேனியம், இரும்பு, கனிம நிலக்கரி, இயற்கை வாயு, யுரேனியம் போன்ற கனிம வளங்கள் செழிப்பாக உள்ள நிலம்.இதனால் தான் கிரிமியா, டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற அதிக வளமிக்க பகுதிகளை ரஷ்யா முதலில் ஆக்கிரமித்தது.

உக்ரைன் வளங்களை ரஷ்யா கைப்பற்றினால், அது உலக அரசியல் கட்டுப்பாட்டை மாற்றிவிடும் என்பதும் அமெரிக்காவுக்கும் தெரியும்.

அதற்கேற்ப தான் அமெரிக்காவும் காய்களை நகர்த்துகிறது. ட்ரம்பை பொறுத்தவரை அமெரிக்காவை தவிர உலகின் வேறெந்த பகுதிகளை பற்றி எந்த கவலையும் கிடையாது.

யார் எப்படி போனால் என்ன அமெரிக்கா இனி ஒரு தம்படி பைசா கூட கையிலிருந்து இழக்காது என்று சொல்லிவிட்டார்.

ட்ரம்ப் பதவிக்காலம் முடியும்வரை உக்ரைனுக்கு விடிவுக்காலம் இல்லை.உக்ரமாக ஆரம்பித்த ரஷ்ய-உக்ரைன் போர் இறுதியில் வல்லரசு குரங்குகள் உக்ரைனின் கனிம வளங்களுக்கு பங்கு போடுவதில் முடிந்திருக்கிறது.

கடந்த 2009 ல் இலங்கையின் உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் வல்லரசுகளுடன் சேர்ந்து தனது குண்டுவீச்சு விமானங்கள், மிக்-27 போர்விமானங்கள் மற்றும் மி-24 தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொடுத்து அப்பாவி மக்கள் மேல் கொத்துகுண்டுகள் வீசி கொன்றதெல்லாம் உக்ரைனுக்கு இப்போது ஞாபகம் வருமா என்று தெரியவில்லை.

கர்மா கொடியது என்பதை காலம் கற்பிக்கிறது.